A must-eat fruit for sharp eyesight and glowing skin
A must-eat fruit for sharp eyesight and glowing skin ADMIN
ஆரோக்கியம்

பார்வை கூர்மைக்கும் சரும மினுமினுப்புக்கும் அவசியம் உண்ணவேண்டிய காய்!

எஸ்.விஜயலட்சுமி

பொம்மையை வைத்து விளையாடிய குழந்தைகளின் கைகளில் தற்போது செல்போன் இடம் பிடித்திருக்கிறது. பல மணி நேரம் அலைபேசியிலேயே மூழ்கிக் கிடப்பதால் சிறு வயதிலேயே கண் பார்வைக் கோளாறுகள் ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு தவறாமல் தர வேண்டும். அதிலும் வைட்டமின் ஏ சத்தும் பீட்டா கரோட்டின் சத்தும் நிறைந்துள்ள பூசணிக்காய் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.

பூசணிக்காய் இனிப்பு சுவை உடையது. பெரும்பாலும் கிராமப்புற வேலியோரங்களில் நிறைய காய்த்திருக்கும் இந்தக் காய். இதனுடைய மகத்துவம் தெரியாமல் நிறைய பேர் இதை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

பூசணிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை துல்லியமாகத் தெரியும். வயதாகும்போது ஏற்படும் பார்வை இழப்பு அபாயத்தை குறைக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்தை வழங்குகிறது. அதிகமாக பூசணிக்காய் சாப்பிடுபவர்களுக்கு வயதான பின்பு வரும் கண் புரை கணிசமாகக் குறையும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, குழந்தைப் பருவம் முதற்கொண்டு பூசணிக்காயை பொரியல் செய்தோ அல்லது சாம்பாரில் போட்டோ எந்த விதத்திலாவது குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

பூசணிக்காயின் பிற நன்மைகள்:

1. பூசணியில் ஆல்ஃபா-கரோட்டின் மற்றும் பீட்டா-கரோட்டின் அதிக அளவு நிறைந்துள்ளன. இது ஆக்சிஜனேற்றிகளாக செயல்பட்டு உடலுக்கு கெடுதல் செய்யும் ஃப்ரீரேடிக்கல்களை நடுநிலைமையாக்கி, அதாவது அதிகம் உற்பத்தி செய்யாமல் தடுத்து பல நோய்களிலிருந்து காக்கும். இது தொண்டை, கணையம், மார்பகம் மற்றும் பிற புற்று நோய்களிலிருந்து காக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

2. பூசணியில் புரதம். கார்போஹைட்ரேடுகள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், தாமிரம் மாங்கனிஸ், வைட்டமின் பி2, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன என்றாலும், 94 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இது குறைந்த அளவு கலோரிகள் உடையது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகச்சிறந்த சாய்ஸ் பூசணிக்காய். மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் பசியை நன்றாகக் கட்டுப்படுத்தும்.

3. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்துக்களை உள்ளடக்கியது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

4. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த காய் பூசணி. இதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இதயத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. அதனால் இதயம் ஆரோக்கியமாக விளங்கும்.

5. சரும ஆரோக்கியத்திற்கு உகந்தது பூசணிக்காய். இதைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் முகம் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் விளங்கும். மேலும் வெயிலில் செல்லும்போது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் சருமத்தின் செல்களுக்கு ஏற்படுத்தும் சேதத்தை பாதுகாக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்கத் தேவைப்படும் வைட்டமின் பூசணிக்காயில் உள்ளது.

6. பூசணிக்காயின் சதை பகுதி மட்டுமல்லாமல் அதனுடைய விதைகளும் ஆரோக்கியம் தருபவை. இவை சிறுநீர்ப்பை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

இதில் உள்ள டையூரிடிக் என்கிற ஒரு பொருள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பூசணிக்காயை குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

SCROLL FOR NEXT