ஆல்கலைன் நீரில் சாதாரண தண்ணீரைக் காட்டிலும் அதிகமாக PH Level உள்ளது. எனவே, இது இரத்தத்தில் இருக்கும் அசிடிட்டியை Neutralize செய்ய உதவுகிறது. ஆல்கலைன் நீரை அருந்துவதால் உடலில் ஈரப்பதம், உடல் எடை குறைதல், ஜீரணம், எலும்பு பலம் பெறுதல் போன்ற எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன. இந்த ஆல்கலைன் நீரை வீட்டிலே இருக்கும் பொருட்களை வைத்து எப்படித் தயாரிப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. வெள்ளரி மற்றும் கொத்தமல்லி இலை: வெள்ளரி மற்றும் கொத்தமல்லி இலையை வெட்டி அதை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அருந்துவது சிறந்த பலனைத் தரும். வெள்ளரியில் டையூரடிக் தன்மை உள்ளது. அதாவது சிறுநீரின் ஓட்டத்தை அதிகரித்து உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றிவிடும். கொத்தமல்லி இலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
2. தர்பூசணி மற்றும் துளசி இலை: ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கப் தர்பூசணி மற்றும் கை நிறைய துளசி இலைகளை சேர்த்து ஊற வைத்துக் குடிக்கலாம். தர்பூசணியில் ஆல்கலைன் மினரலான பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் Lycopene உள்ளது. இது செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், துளசி இலை ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து உடலுக்கு அமைதியைக் கொடுக்கும்.
3. அன்னாசி மற்றும் புதினா: ஒரு கப் தண்ணீரில் அன்னாசி துண்டுகளை சேர்த்து அத்துடன் புதினா இலைகளைப் பொடியாக நறுக்கி சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்த பிறகு அருந்துவது சிறந்தது. அன்னாசியில் உள்ள நொதி ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. புதினாவில் டையூரட்டிக் தன்மை உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்றிவிடும். மேலும், தண்ணீரை உடலில் தக்கவைக்கும் தன்மையைக் கொண்டதாகும்.
சமையலுக்குப் பயன்படுத்தும் பேக்கிங் சோடாவில் அதிக ஆல்கலைன் தன்மை உள்ளது. ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடிப்பது நல்லது. அதிகப்படியாக பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். கடையில் விற்கப்படும் ஆல்கலைன் நீரின் விலை மிகவும் அதிகமாகும். அதை வாங்கிப் பயன்படுத்துவதற்கு பதில் இதுபோன்று இயற்கையாகவே தயாரித்துக் குடிப்பது உடலுக்கு நல்லதாகும். முயற்சித்துப் பாருங்களேன்.