உடலில் உள்ள கிருமிகளைக் கொல்லவும், காயங்களைக் குணப்படுத்தவும் மற்றும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்தான் கீரை. பழங்கள் மற்றும் காய்கறிகளில் இல்லாத அளவிற்கு அதிக ஆரோக்கிய நன்மைகள் இவற்றில் உள்ளன என தெரிந்தும், பார்த்த உடனே ஒதுக்கும் உணவுகளில் ஒன்றாகவும் அதே கீரையாகத்தான் இருக்கும்.
ஆனால், சில கீரை வகைகளை, கீரை என்று தெரியாமலே ஒதுக்கி வருகிறோம், அவற்றில் ஒன்றான லச்சக்கொட்டை கீரையைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக் கொட்டை கீரை, நஞ்சுண்டான் கீரை, மற்றும் லச்சக்கொட்டை கீரை எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்தக் கீரை வகை. இவை பெரும்பாலும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சாலைகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. ஆனால், இது உண்ணக் கூடியது என இங்கு பல பேருக்கு தெரியாது.
இதன் அறிவியல் பெயர் பிசோனியா ஆல்பா (pisonia alba spinach) ஆகும். லச்சக் கொட்டை கீரை மர வகையைச் சார்ந்தது. இந்தக் கீரையின் கொட்டை கன்றாக வளர்ந்த பின்பு, இதனை வீடுகளில நட்டு வளர்க்கலாம். அனைத்து வகை மண்களிலும், தட்ப வெப்பநிலையிலும் வளரக்கூடியவை.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியில் கொண்டு வர உதவும் என்பதாலேயே இதனை நஞ்சுண்டான் கீரை அல்லது நஞ்சு கொண்டான் கீரை என்கிறார்கள்.
லச்சக் கொட்டை கீரையின் இலை பெரியதாக இருப்பதால் இதிலுள்ள நரம்புகளை அகற்றிய பின்பே சமைக்க தொடங்க வேண்டும். இதனை பாசிப் பருப்புடன் சேர்த்து பொரியலாக செய்தும் சாப்பிடலாம். கீரையுடன் புளி, மிளகாய், உப்பு, துவரம்பருப்பு சேர்த்து அரைத்து துவையலாகவோ அல்லது சூப்பாகவோ பயன்படுத்தலாம். மேலும், கீரை கடைசலாகவோ, கூட்டாகவோ செய்தும் கூட சாப்பிடலாம். பிற கீரைகளை பயன்படுத்தி செய்யும் சமையல் அனைத்தையும் லச்சக் கொட்டை கீரையைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
வைட்டமின்கள், தாதுக்கள் இதில் நிரம்பியுள்ளதால், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து இந்தக் கீரையை உணவில் பயன்படுத்தி வந்தால், கழுத்துவலி காணாமல் போகும். முதுகு வலி மற்றும் மூட்டுவலிக்கு மாபெரும் மருந்தாக இது பயன்படுகிறது. இரைப்பை பிரச்னை, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. பருப்புடன் இதை சாப்பிட்டால் குடலில் உள்ள புண்கள் சரியாகும்.
என்னதான், கீரைகளிலும் மற்றும் பிற ஆரோக்கிய உணவுகளிலும் மருத்துவ குணங்கள் இருந்தாலும், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதை மனதில் கொண்டு ஆரோக்கியமானதை அளவோடு சாப்பிடலாம்தானே!