கண் சிமிட்டுவது என்பது இயல்பாக நடைபெறும் ஒரு விஷயம். நாம் இமைக்கும் ஒவ்வொரு முறையும் நம் கண் இமைகள் நம் கண்களின் மேற்பரப்பில் கண்ணீர் படலத்தைப் பரப்புகின்றன. இந்தக் கண்ணீர் படலம் நம் கண்களை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கண் சிமிட்டுவது என்பது ஒரு சாதாரண போக்கு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இருப்பினும் கண்களை அதிகமாக சிமிட்டுவது சில கண் பிரச்னைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
பிறந்த குழந்தைகள் நிமிடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கண் சிமிட்டுவார்கள். பதின் வயதிலிருந்து பெரியவர்கள் வரை நிமிடத்திற்கு 15 முறை கண் சிமிட்டுவார்கள். சிலர் இயல்பை விட அதிக அளவு கண் சிமிட்டுவார்கள். இதற்கான காரணம் அதிக வெளிச்சம் மற்றும் கண்களில் விழும் தூசியினால் இயல்பை விட அடிக்கடி கண் சிமிட்டலாம்.
பொதுவாக, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும் வளர்ந்த கண் இமைகளை அகற்றுவது எரிச்சலைப் போக்கும். கண்களில் விழும் தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும் எரிச்சலைப் போக்க சில கண் சொட்டு மருந்துகளை டாக்டரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது, மொபைல் போன்கள், கணினி ஆகியவற்றின் பயன்பாட்டால் கண்களில் வறட்சி ஏற்படும். இது தவிர, வயதானவர்கள், குறிப்பாக பெண்கள் உலர் கண்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவை தவிர, கண்களை அடிக்கடி கைகளால் தேய்ப்பதாலும் கண் சிமிட்டல் ஏற்படும்.
கண்களில் ஒவ்வாமை, கண் தொற்று ஏற்படுவதும் கண் சிமிட்டுதலை அதிகரிக்கும். சில மருந்துகள், குறிப்பாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளின் பக்க விளைவாக கண் சிமிட்டுதல் மற்றும் முக நடுக்கங்கள் ஏற்படலாம். நீண்ட நேரம் டிவி பார்ப்பது நம்மை சோர்வாக்கி கண்கள் ஈரமாகவும் வசதியாகவும் இருக்க முயற்சிப்பதால் கண் சிமிட்டுதல் அதிகரிக்கும்.
நரம்பியல் பிரச்னைகள் காரணமாகவும் அடிக்கடி கண் சிமிட்டுதல் உண்டாகும். கிட்டப்பார்வை, தூர பார்வை போன்ற பார்வை பிரச்னைகளாலும் அடிக்கடி கண் சிமிட்டும் பழக்கம் ஏற்படலாம். மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும் நேரங்களில் கண் சிமிட்டுதல் அதிகரிக்கும். இவற்றிற்கு தியானம், யோகா, உடற்பயிற்சிகள் ஆகியவற்றை பழகுவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைத்து மன அமைதிக்கு வழி வகுக்கும்.
பெற்றோர்கள் குழந்தைகளின் ஒவ்வொரு பழக்கத்தையும் நன்கு கவனிக்க வேண்டும். அதுவும் குழந்தைகளிடம் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்களையும் கவனிப்பது மிகவும் அவசியம். அதிகப்படியாக கண் சிமிட்டுவது ஒரு பிரச்னையே. இதற்குத் தகுந்த கண் மருத்துவரை கலந்தாலோசித்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.