புரோபயோட்டிக்ஸ் (Probiotics), பிரீபயோட்டிக்ஸ் (Prebiotics) இவை இரண்டுமே நமது குடல் இயக்க ஆரோக்கியத்தை காப்பதற்காக உண்ணப்படுகிறது. இரண்டும் நம் உடலில் தனித்துவமான செயல்களைப் புரிந்து வருகின்றன.
புரோபயோட்டிக்ஸ் உயிரோட்டமுள்ள, நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள். இவை ஜீரண மண்டலத்திற்குள் இருக்கும் நுண்ணுயிர்க் கட்டுக்கள் ஆரோக்கியமாக வளரவும் சமநிலையில் இருக்கவும் உதவும். இவை வயிற்றில் வீக்கம் உண்டாவதைத் தடுக்கும். ஊட்டச் சத்துக்கள் உடலுக்குள் முறையாக உறிஞ்சப்படவும் செரிமானம் சிறப்பாக நடைபெறவும் உதவி புரியும்.
புரோபயோட்டிக்ஸ் சத்துக்கள் தயிர், மோர், நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் ஊறுகாய்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. பிரீபயோட்டிக்ஸ் என்பவை ஜீரணிக்க முடியாத நார்ச் சத்தா கும். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகப் பயன்படும். பிரீபயோட்டிக்ஸ் ஜீரணம் நல்ல முறையில் நடைபெற உதவும். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி புரியும்.
பூண்டு, வெங்காயம், வாழைக்காய் போன்ற உணவுகளில் பிரீபயோட்டிக்ஸ் சத்து அதிகம் உள்ளது. புரோபயோட்டிக்ஸ் மற்றும் பிரீபயோட்டிக்ஸ் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செயல் புரிந்து இரைப்பை - குடல் ஆரோக்கியத்தை மேன்மை அடையச் செய்கின்றன. இதனால் ஜீரண மண்டல உறுப்புகளில் ஓர் ஆரோக்கியமான சூழல் உருவாகி, தடங்கல் ஏதுமின்றி செரிமானம் செழித்தோங்க முடிகிறது. புரோபயோட்டிக்ஸ் நிறைந்த தயிர், மோர், ஊறுகாயையும் பிரீபயோட்டிக்ஸ் உணவுகளான பூண்டு, வெங்காயம், வாழைக்காய் ஆகியவற்றையும் சேர்த்து உண்பது உடலுக்கு சரிவிகித உணவு கிடைப்பதற்கான வாய்ப்பாகும்.
செரிமானத்தை சிறப்பாக்க உதவும் மேலும் சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.
1. உடற்பயிற்சி செய்வதும் உடலை எப்பவும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதும் நல்ல ஜீரணதுக்கு உதவும். ஆன்டிபயாடிக்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அவை குடலில் உள்ள நுண்ணுயிரிகளை சமநிலையில் வைத்துப் பராமரிப்பதில் இடையூறு உண்டுபண்ணும். தினமும் பலதரப்பட்ட வெவ்வேறு உணவுகளை உட்கொள்வது நலம் தரும். அவை வெவ்வேறு வகையான நன்மை தரும் பாக்டீரியாக்களின் உருவாக்கதிற்கு உதவும்.
2. தேவையான அளவு தண்ணீர் குடிப்பது சீரான செரிமானத்துக்கும் மலச்சிக்கல் நீங்கவும் உதவும். உணவுக்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிப்பது சிறப்பு. வேறெந்த உடல் நலக் கோளாறு இல்லாத நிலையில் ஒரு நாளில் சுமார் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
3. ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி ஸ்பாஸ்மோடிக் குணம் கொண்ட கெமோமைல் டீ அருந்துதல் தசைகளை அமைதியான நிலையில் வைத்து ஜீரணம் நன்கு நடைபெறவும், வீக்கங்களைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
4. இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வது இரைப்பை - குடல் பாதையின் தசைகளை தளரச் செய்யும்; வீக்கங்களைக் குறைக்க உதவும்; செரிமானத்துக்கு உதவும் என்சைம்களை ஊக்குவிக்கும். இஞ்சி துண்டுகளை அப்படியே பச்சையாக தின்னலாம் அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் மற்றும் லெமன் ஜூஸ் கலந்து குடிக்கலாம்.