பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேலைக்காக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவை பொறுமையாக ருசித்து, ரசித்து சாப்பிடுவதற்கு நேரம் இல்லை. பாஸ்ட்புட், பப்பே என்று நின்றுகொண்டே உணவை அவசரமாக சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள். இதனால் நோய்களும் பெருகி விட்டன.
உணவை பொறுமையாக மென்று தின்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தது பொய்யல்ல. பொறுமையாக ருசித்து சாப்பிட்டால்தான் அந்த உணவின் சத்து கூட உடலில் ஒட்டும் என்று சொல்வார்கள்.
உணவை குறைந்தது 32 முறையாவது மென்று சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். உண்ணும் உணவை கூழ் போல ஆக்கி விழுங்குவது ஜீரணிக்க எளிதாக்கும்.
உணவை மென்று தின்பதால் பற்கள் வலிமையாவது மட்டுமில்லாமல், உமிழ்நீர் அதிக அளவில் சுரப்பதால் பற்களில் கிருமிகள் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. அது நீங்கள் உண்ணும் மற்றும் மெல்லும் நேரத்தை குறைக்கிறது.
மெதுவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும். உடலுக்குத் தேவையான கலோரிகளை அதிலிருந்து எடுத்துக்கொள்வதால் நீங்கள் அதிகம் சாப்பிடாமல் இருப்பீர்கள். முழுமையாக உணவு உண்ட திருப்தியையும் பெறுவீர்கள். உணவை மென்று தின்பதால் நீரிழப்பைப் போக்கும். இது உணவிலிருந்து நீர்க்கூறுகளை பிரித்தெடுக்க உதவுகிறது. இதனால் நீரிழப்பை தடுக்கிறது.
உணவை அவசர அவசரமாக விழுங்குவதை விட அதை பொறுமையாக சாப்பிடும் போதுதான் அதன் சுவையையும் நறுமணத்தையும் உணர முடியும். உணவை பொறுமையாக சாப்பிடும்போதுதான் செரிமானத்திற்கான ஹார்மோன்களான லிப்தின், கிரெலின் போன்றவை உற்பத்தி ஆவதற்கு போதிய நேரம் கிடைக்கிறது. நன்றாக உணவை மென்று தின்பதால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவது குறையும்.
வேகமாக உண்ணுவது உடல் எடையை அதிகரிக்கக் கூடும் என்றும் உணவை மென்று தின்பது, எத்தனை முறை மெல்கிறோம், எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறோம் என்பதற்கும் உடல் எடை குறைப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.
எனவே, இனியாவது சாப்பிட வேண்டுமே என்று அலுத்துக்கொண்டு சாப்பிடாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் உணவை ரசித்து சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்.