Do you know what carpal tunnel syndrome is?
Do you know what carpal tunnel syndrome is? 
ஆரோக்கியம்

கார்பல் டனல் சிண்ட்ரோம் என்றால் என்ன தெரியுமா?

கல்கி டெஸ்க்

நிறையப் பேருக்குத் தெரியாத பெயர் கார்பல் டனல் சிண்ட்ரோம். இந்தப் பிரச்னை உடலின் எந்த பாகத்தை பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து, நரம்பியல் நிபுணர் மருத்துவர் புவனேஸ்வரி ராஜேந்திரனிடம் கேட்டபோது...

“நம் விரல்களில் உள்ள நரம்புகள் மூலம் நாம் தொடு உணர்ச்சியை அறிகிறோம். இந்த நரம்புகள், நம் தோள் பட்டையிலிருந்து வரும் மீடியன் நர்வ் (Median nerve) என்னும் நரம்பிலிருந்து, மணிக்கட்டு வழியே கைகளுக்கு வருகின்றன. மேற்புறம் தசை நார்களால் ஆன பரப்பாலும் (fibrous sheath) கீழ்ப்புறம் மணிக்கட்டு எலும்புகளாலும் பாதுகாக்கப்பட்ட, ஒரு டனல் போன்ற அமைப்பின் வழியே இந்த மீடியன் நரம்பு விரல்களுக்குச் செல்கிறது. இந்த டனல் அமைப்பின் பெயர் கார்பல் டனல் (Carpal tunnel) என்று பெயர்.

இந்த மீடியன் நரம்பு அழுத்தப்படும்போது வலி , மரத்துப் போதல், விறுவிறுப்பு உணர்வு (Numbness and Tingling) போன்றவை வர வாய்ப்பு உண்டு. இதைத்தான், ‘கார்பல் டனல் சிண்ட்ரோம் (Carpal tunnel syndrome)’ என்கிறோம்.

இதற்கான காரணங்களைச் சற்று அறிந்துகொள்வோம். இந்த வகை சிண்ட்ரோம் வர பல காரணங்கள் உள்ளன. பொதுவாக, டனலுக்குள் இருக்கும் மீடியன் நரம்பு அழுத்தப்படும்போது மணிக்கட்டு, கைகளில் வலி, மரத்துப் போதல் போன்றவை ஏற்படுகின்றன என்றாலும், ஒருவரது கைகளின் அமைப்பும் முக்கியமான காரணமாகிறது. சிலருக்கு இயற்கையிலேயே மணிக்கட்டின் அமைப்பினால், டனல் குறுகி இருக்கலாம். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு தற்காலிகமாக இந்த சிண்ட்ரோம் ஏற்படலாம். சர்க்கரை, தைராய்ட், ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு இதற்கான ரிஸ்க் மற்றவர்களை விட சற்று அதிகம். இவர்களுக்கு சில நேரம் இரவில் விரல்களில் மரத்த உணர்ச்சி (Night Numbness) ஏற்படலாம்.

பொதுவாக, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்று நடுவிரல்களில்தான் மெல்ல மரத்தல், விறுவிறுப்பு உணர்ச்சி என்று ஆரம்பிக்கும். இது வந்து வந்து போகும். இதனால் அசௌகரியமாக உணர்ந்து சிலர் அப்போது கையை உதறுவார்கள்.

இதற்கான சோதனைகள் என்னென்ன?

நர்வ் கண்டக் ஷன் ஸ்டடீஸ் (nerve conduction studies) மூலம் நரம்பு எவ்வளவு அழுத்தப்படுகிறது என்பதை அறிய முடியும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும்போது, மணிக்கட்டில் நரம்பின் அமைப்பு, பயன்பாடு இவை தெரிய வரும். பின்னர் அதற்கேற்றாற்போல் சிகிச்சை தரப்படும்.

இதற்கான சிகிச்சைகள்: மணிக்கட்டில் போட்டுக்கொள்ள கார்பல் டனல் ஸ்ப்ளின்ட் (Wrist splinting) தருகிறோம். இது நரம்பின் அழுத்தத்தைக் குறைக்க உதவும். இரவில் இதை பயன்படுத்தும்போது மரத்துப் போகாமல், விறுவிறுப்பு இல்லாமல் இருக்க உதவும். வலியைக் குறைக்க NSAID மருந்துகள் தரப்படுகின்றன. நரம்பைச் சுற்றி வீக்கம் (inflammation) இருந்தால் Corticosteroid injection ஊசிகள் மணிக்கட்டில் செலுத்தும் சிகிச்சை தரப்படும்.

அறுவை சிகிச்சை தேவைப்படுமா?: அனேகமாக இருக்காது. ஆனால், மற்ற சிகிச்சைகளில் பலன் தெரியவில்லை என்றால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படும். மணிக்கட்டின் உள்ளங்கைப் பகுதியில் ஒரு சிறிய துளையிட்டு, டனலை இறுக்கி, மீடியன் நரம்பை அழுத்திக் கொண்டிருக்கும் தசைநார்ப் பகுதியை (ligament) எடுத்து விடுவார்கள். இதனால் டனலின் அளவு பெரிதாகி வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பெரும்பாலும் கார்பல் டனல் சிண்ட்ரோம் வந்தவர்கள், தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது வலி, மரத்து போதல் மற்றும் விறுவிறுப்பு இவற்றிலிருந்து விடுபட்டு குணமடைந்து விடுவார்கள். கைகளின் செயல்பாடுகளும் விரைவில் நார்மல் நிலைக்கு வந்து விடும்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT