இக்கால இளைஞர்களும் இளைஞிகளும் ஜிம்முக்கு சென்று, எடைக் குறைப்பிற்கும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும் பலவிதமான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவது நாம் சாதாரணமாகக் காணக்கூடியதொன்றாக உள்ளது. சிலர் உடற்பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொண்டு, கிடைக்கும் நேரங்களில் அவற்றை உபயோகித்து வருவதும் உண்டு. பயிற்சி செய்து முடித்ததும் உடல் சக்தி இழந்து சோர்வடைவது சகஜம். அந்த நேரத்தில் மீண்டும் சுறுசுறுப்படைய அவர்கள் உட்கொள்ள வேண்டிய புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதைக் காண்போம்.
புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது பீநட் பட்டர் கலந்த ஓட் மீல். மேலும், சத்துள்ளதாக மாற்ற அதனுடன் பால் சேர்த்து உண்பது நல்லது.
முழுமையான கொழுப்பு நிறைந்த பாலுடன் நறுக்கிய பீச் பழத் துண்டுகள், உடைத்த பாதாம், முந்திரி, வால்நட் கொட்டைகள், சிறிது தேன் ஆகியவை சேர்த்து உட்கொள்ள அது ஒரு சிறந்த உணவாகும்.
முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம். எண்ணையில் டோஃபு, பசலை, காலே ஆகியவற்றை சேர்த்து வதக்கி முட்டைகளை கலக்கி அதனுடன் சேர்த்துக் கலந்து உண்ண புரோட்டீனும் மற்ற ஊட்டச் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும்.
வாழைப்பழங்கள், பால், உடைத்த உலர் கொட்டைகள், பீநட் பட்டர், தேன் ஆகியவற்றைக் கலந்து ஸ்மூத்தியாக்கி ஒர்க் அவுட் பண்ணியபின் உண்பது அதிக நலம் தரும்.
வேக வைத்த சோயா ஜங்க்களை, தக்காளி, வெங்காயம், காலே போன்ற காய்கறிகளுடன் சேர்த்து ஸ்டிர்ஃபிரை பண்ணி உண்பது அதிக ஆரோக்கியம் தரும். சோயா ஜங்க்கில் புரோட்டீன் அதிகம் உள்ளது.
வெங்காயம், தக்காளி, பசலைக் கீரை ஆகியவற்றை வதக்கி மசாலா சேர்த்து அதனுடன் ஊற வைத்து துருவிய பன்னீரைக் கலந்து பன்னீர் புர்ஜ் செய்யலாம். இதை சப்பாத்தி, பிரட் போன்றவற்றிற்கு சைட் டிஷ்ஷாக சேர்த்து உண்ணலாம்.
மேற்கூறிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் முன் தனிப்பட்ட முறையில் மருத்துவரைக் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.