நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் உடல் நலப் பிரச்னைகளில் ஒன்று மலச்சிக்கல். இது ஒன்றும் தீர்வு காண முடியாத அளவு பெரிய பிரச்னை அல்ல எனலாம். தினசரி குடிக்கவேண்டிய நீரின் அளவை குறையாமல் அருந்தி, இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிட்டாலே தீர்வு கிடைக்கும். அப்படியும் சரியாகவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றி நலம் பெறலாம்.
* பப்பாளி பழ விதைகளை நசுக்கி நன்கு சூடான நீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அதை வடகட்டி அந்த நீரை சுடச் சுட குடிக்கவும். பப்பாளி விதைகளில் உள்ள என்சைம்கள், செரிமானம் நன்கு நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் உதவும்.
* இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு ஊற விடவும். காலையில் வடிகட்டி, அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். வெந்தயத்தில் உள்ள அதிகளவு நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மலம் சுலபமாக வெளியேற உதவி புரியும்.
* ரோஸ்டட் கடலைப் பருப்பு (gram) அல்லது பார்லியை அரைத்துத் தயாரிக்கப்படும் மாவு, சட்டு (Sattu) மாவு எனப்படும். இரண்டு டேபிள் ஸ்பூன் சட்டு மாவை தண்ணீரில் கரைத்து, சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும். சட்டு மாவில் அதிகம் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் நீங்க உதவும்.
* பழுத்த விளாம் பழத்தை (Wood Apple) அரைத்து ஜூஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். விளாம் பழம் நார்ச்சத்தும் மலமிளக்கும் குணமும் கொண்டது. இதனால் சிக்கலின்றி கழிவுகள் வெளியேறும்.
* வேப்பிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு, பாதியாகக் குறைந்ததும், வடிகட்டி அந்த கஷாயத்தை சூடாகக் குடிக்கவும். வேப்பிலைகளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் குணங்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். அதனால் மலச்சிக்கல் உருவாகும் அபாயம் தடுக்கப்படும்.
இம்மாதிரியான சுலபமான வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றி மலம் கழிப்பதில் சிக்கலேதுமின்றி சிறப்பான ஆரோக்கியம் பெறலாம்.