மூளை ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமாகும். நமக்கு வயதாகும்போது உடலைப் போலவே மூளைக்கும் வயதாவதால் மூளைத்திறன் குறையும் வாய்ப்பு அதிகம். கடினமான உழைப்பு காரணமாக நம் உடல் சோர்வடைவது போல் மூளையும் சோர்வடைந்து மந்தமாகும். மூளை சோர்வடையும்போது எரிச்சல், கோபம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை ஏற்படும். சோர்வாகும் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகவும் கவனம் அவசியம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க தூக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றுடன் மூளையை சுறுசுறுப்பாக்கும் உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மந்தமான மூளையையும் சுறுசுறுப்பாக்கும் சில உணவுகளை நம் தினசரி உணவுடன் சேர்த்து சாப்பிட, நம் மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் உயிர் சக்தியை பராமரிக்கும்.
நோயற்ற வாழ்விற்கு முக்கியப் பங்கு வகிக்கும் பச்சை இலை கீரைகளையும், காய்கறிகளையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இவற்றில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் நம் மனித மூளையை போல் தோற்றமளிக்கிறது. இதனை தினமும் சிறிது எடுத்துக்கொள்ள முதுமை மறதி, நினைவாற்றல் இழப்பு, டெமென்சியா என்கின்ற மனத்தளர்ச்சி நோயை தவிர்க்க உதவும். முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்தும், ஊட்டச்சத்துக்களும் நம் உடலின் செயல்பாட்டுக்கு, குறிப்பாக மூளை திறனுக்கு மிகவும் அவசியமானவை.
நாகப்பழத்தில் இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூளையின் செயல் திறனை அதிகரிப்பதுடன் மூளையின் மந்தத்தன்மையையும் போக்கக்கூடியது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சியா விதைகள், முட்டை, வால்நட், சால்மன் மீன், சோயாபீன்ஸ், ஆளி விதைகள், கடற்பாசி, ஸ்பைருலினா மற்றும் குளோரெல்லா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை தவிர, முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் புரதம் நிறைந்த பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நம் மூளையை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் ஆகும்.
வைட்டமின் கே அதிகமுள்ள புரோக்கோலி நம் மூளையை சுறுப்பாக இயங்க வைக்கும். ப்ளூபெர்ரிகளில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை நம் நினைவாற்றலையும், அறிவாற்றலையும் அதிகரிக்க உதவும். இவற்றை நம் தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. தயிரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மூளை நரம்பு செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு ஏற்படுத்த உதவுகிறது.
மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகளான இவற்றை எடுத்துக் கொள்வதுடன் தினமும் உடற்பயிற்சி செய்வதும், தேவையான அளவு தண்ணீர் பருகுவதும், போதுமான அளவு தூக்கம் பெறுவதும் நம்மை ஆரோக்கியமாக இருக்க வைக்கும்.