Health benefits of Lotus Seeds 
ஆரோக்கியம்

தாமரை விதையில் இவ்வளவு நன்மைகளா? அடேங்கப்பா! 

கிரி கணபதி

தாமரை மலர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தாமரைப்பூவை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சீனர்கள் தாமரை மலர்களை உணவாக விரும்பி உண்கின்றனர். அதேநேரம் தாமரையின் விதைகளிலும் பல மருத்துவ நன்மைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இப்பதிவில் தாமரை விதையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. 

ஊட்டச்சத்துக்கள்: தாமரை விதைகளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற உயிரியல் கலவைகள் உள்ளடங்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக புரதம், நார்ச்சத்து, நன்மை பயக்கும் ஆக்சிஜனேற்றங்கள், விட்டமின் பி, இ, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. இவை நம் உடல் செயல்பாடுகளை சிறப்பாகப் பராமரிக்க பெரிதளவில் உதவுகின்றன. 

செரிமான ஆரோக்கியம்: தாமரை விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு உதவி மலச்சிக்கலைத் தடுக்கிறது. நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக்கி, நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. செரிமான அமைப்பு சீராக செயல்படுவதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்பட்டு ஒட்டு மொத்த செரிமான நல்வாழ்வுக்கும் தாமரை விதைகள் பங்களிக்கின்றன. 

ஆற்றல்: தாமரை விதைகள் கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும். இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காமல் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இந்த விதைகள் விளையாட்டு வீரர்கள் அல்லது அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு நீண்டகால ஆற்றலை வழங்கும் உணவாக இருக்கும். 

இதய ஆரோக்கியம்: தாமரை விதைகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு கலவைகள் உள்ளன. இதில் காணப்படும் அதிக அளவான பொட்டாசியம் தாது, ரத்த அழுத்த அளவை சீராக்கி இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்றம், ஃபிளாவனாய்டுகள் போன்றவை உடலில் அழுத்தத்தைக் குறைத்து, இதய பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. 

Anti-Aging: தாமரை விதைகளில் விரைவாக வயதாவதைத் தடுக்கும் Kaempferol & Quercetin கலவைகள் உள்ளன. இது செல்கள் மற்றும் திசுக்களின் சேதத்தைக் குறைக்கிறது. இதன் மூலமாக தாமரை விதைகள் தோல் பராமரிப்பில் பங்காற்றி விரைவான முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. 

எடை பராமரிப்பு: தாமரை விதைகளில் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு காணப்படுகிறது. மேலும் இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிற்றில் ஒரு முழுமை உணர்வைக் கொடுக்கிறது. எனவே இதனால் அதிக உணவுகளை சாப்பிடுவதற்கான வாய்ப்பு குறைகிறது. தாமரை விதைகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உடல் எடையைப் பராமரிக்க முடியும். 

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் தாமரை விதைகளை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் முதல் முறை தாமரை விதைகளை முயற்சிக்கப் போகிறீர்கள் என்றால் தகுந்த சுகாதார நிபுணருடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. ஏனெனில் சில புதிய உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே எதையும் பாதுகாப்புடன் முயற்சிப்பது அவசியம். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT