குறட்டை விடுதல் என்பது, சம்பந்தப்பட்ட நபருக்கும் அறையில் உடன் படுத்து உறங்குபவர்களுக்கும் ஒரு தொல்லைதான். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ஒரு மிகச் சிறிய அளவாவது குறட்டை விடுவர். சன்னமான அளவில் குறட்டை விட்டால் தவறு இல்லை. ஆனால், அதீத குறட்டை ஒலி ஆபத்து தான்.
குறட்டை ஏன் வருகிறது தெரியுமா?
நம் மூக்கின் வழியாக சரியாக காற்று போய் வர முடியாத காரணத்தால்தான் குறட்டை வருகிறது. பருமனான உடல்வாகு கொண்டவர்கள், சளித் தொல்லையினால் மூக்கு துவாரங்கள் அடைத்துக் கொள்ளுதல், தொண்டை அடைப்பு காரணமாகவும் குறட்டை வருகிறது. மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்ளே போய், தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனால் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.
யாருக்குக் குறட்டை வரும்?
சிலர் மெலிதான ஒலியுடனும், சிலர் விசில் அடிப்பது போலவும், வலியால் முனகுவது போலும், சிலர் எஞ்சின் ஓடுவது போல அதீத ஒலியுடனும் குறட்டை விடுவார்கள். பகல் முழுக்க மிகுந்த கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களும், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களும், டான்ஸில்ஸ் பிரச்னை இருப்பவர்களும், மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள், தூக்க மாத்திரைகளை உட்கொள்வோர், சளி, தொண்டை வலியால் அவதிப்படுவோர், ஹார்மோன் சமநிலையில் இல்லாதவர்களின் குறட்டை ஒலி அதிகமாக இருக்கும்.
குறட்டையைத் தவிர்க்க சில எளிய வழிகள்:
1. மல்லாந்து படுப்பது மிகுந்த நன்மையைத் தரும் என்றாலும், குறட்டையைத் தவிர்க்க இடது பக்கமாக ஒருக்களித்து உறங்குவது நல்லது. அந்த நிலையில் மூக்கின் வழியாக காற்று உள்ளே போய் வரும். அது ஓரளவுக்குக் குறட்டையைத் தடுக்கும்.
2. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழில் இருந்து எட்டு மணி நேரம் நன்றாக தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். குறைந்த அளவு நேரம் தூங்குபவர்களுக்கும், இரவில் அடிக்கடி இடையில் எழுகிறவர்களுக்கும்தான் குறட்டை தொல்லை தரும். ஏனென்றால், தொண்டையில் இருக்கும் தசைகள் ரிலாக்ஸ் ஆகாமல்தான் குறட்டை வருகிறது.
3. மது அருந்துபவர்களும், புகைப் பழக்கம் உள்ளவர்களும் அந்தத் தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும்.
4. உயரத்திற்கேற்ற சரியான எடையைக் கொண்டிருக்க வேண்டும். பருமனாக இருப்பவர்களுக்கு தொண்டையில் இருக்கும் திசுக்களின் அளவு அதிகரித்து குறட்டை வருகிறது.
5. நல்ல சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று வேளையாக மொத்தமாக உண்ணாமல் ஐந்து வேளையாக பிரித்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
6. ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்தாலும், குறட்டை விடக்கூடும். எனவே, மனதை எப்போதும் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
7. பகல் நேரத்தில் நன்றாக சுறுசுறுப்பாக வேலை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறட்டை வலியை குறைக்கும் தலையணைகள் வந்திருக்கின்றன. அவற்றை தலைக்கு வைத்து கரெக்டான பொசிஷனில் படுத்து உறங்க வேண்டும்.
அதிகளவு ஒலியுடன் குறட்டை வந்தால் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து அதற்கான ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும்.