வெற்றுக்கூடு நோய்க்குறி
வெற்றுக்கூடு நோய்க்குறி https://www.promises.com
ஆரோக்கியம்

வெற்றுக்கூடு நோய்க்குறியை எதிர்கொள்வது எப்படி?

எஸ்.விஜயலட்சுமி

வெற்றுக்கூடு நோய்க்குறி (Empty nest syndrome) என்பது பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறும்போது ஏற்படும் துயரத்தை குறிக்கிறது. இது பல பெற்றோருக்கு ஒரு பொதுவான பிரச்னையாக இருக்கிறது. குழந்தைகள் இல்லாத வீட்டையோ வாழ்க்கையோ அவர்கள் இதற்கு முன்பு கற்பனை செய்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.

எப்போது வெற்றுக்கூடு நோய்க்குறி தோன்றுகிறது?

வெற்றுக்கூடு நோய்க்குறி பெற்றோர் இருவரையும் பாதித்தாலும் தாய்க்கு அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. குழந்தைகளுக்காக வேலையை விட்டுவிட்டு, அவர்கள் சற்றே வளர்ந்ததும் மீண்டும் வேலைக்குச் செல்வது, பணி ஓய்வு, பணி நீக்கம், பெண்களானால் மெனோபாஸ், துணையின் மரணம், பெரும்பான்மையான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு 20 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களை அர்ப்பணிக்கிறார்கள். தாய்மை என்பதை புனிதமாக கருதுகிறார்கள். குழந்தை வளர்ப்பை தங்கள் தலையாய கடமையாக நினைக்கிறார்கள். அதன்படி செயல்படுகிறார்கள்.

நோய்க்குறி அறிகுறிகள்:

1. சோகம் மற்றும் தனிமை: பெண்கள் பிள்ளைகளைப் பார்த்து பார்த்து கவனிக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும்போது வீட்டுப் பாடங்களில் உதவுகிறார்கள். பிடித்த உணவு வகைகளை செய்து தருகிறார்கள். இரவில் கதை சொல்லி தூங்க வைக்கிறார்கள். குழந்தை வீட்டை விட்டு படிப்பு காரணமாகவோ அல்லது திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்றாலோ தனிமையும் சோகமும் அவர்களை சூழ்ந்து கொள்கிறது. மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படும். அதை நிரப்ப முடியாமல் மனச்சோர்வும் மன அழுத்தமும் வருகிறது.

2. அடையாள இழப்பு ( Loss of Identity): தந்தை குழந்தைகளை பள்ளிகளுக்கும், விளையாட அழைத்துச் செல்வதும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் கலந்து கொள்வதுமாக பிஸியாக இருக்கிறார். பிள்ளைகள் வளர்ந்து சொந்தமாக வாழப் பழகி விட்டதால் தன்னில் பெரும்பகுதி இழந்து விட்டதாக அந்தத் தந்தை உணரலாம். தந்தை என்ற தனது அடையாளத்தை இழந்தது போல அவர் தவிக்கிறார்.

3. உறவுகளில் மாற்றங்கள்: நிறைய குடும்பங்களில் அப்பாவும் அம்மாவும் தங்களை தங்கள் பிள்ளைகளை முன் வைத்து இயங்குகிறார்கள். பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு கேட்டு அவர்களை மையமாக வைத்து அவர்களது ஒவ்வொரு செயல்பாடும் இருக்கும். அவர்கள் இல்லாத அந்த வெற்றிடம் அவர்கள் மனதை பாதிக்கிறது.

4. துக்கமும் இழப்பும்: எப்போதும் சிரிப்பும் விளையாட்டுமாக பரபரப்பாக இயங்கிய வீடு இப்போது வெறுமையாக அமைதியாக இருக்கிறது. இப்போது அவர்கள் பெரியவர்களாகிவிட்டதால் தனியானது போன்ற உணர்வு எழுகிறது. பிள்ளைகளை வளர்ப்பதே தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாகவும் குறிக்கோளாகவும் கொண்டு வாழ்ந்த ஒரு தாயால் இப்போது தனக்கு வாழ்வில் நோக்கமே இல்லை என்று உணர்கிறார். பிள்ளைகள் தங்களுக்கான வழியையும் வாழ்க்கையையும் தேடிக் கொள்கிறார்கள் என்று உணரும்போது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

வெற்றுக்கூடு அறிகுறியை எதிர்கொள்வது எப்படி?

குழந்தைகளுக்காக வாழ்வது ஒரு பெற்றோரின் கடமை என்றாலும் குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்வது அவர்களது வாழ்க்கை அல்ல. பிள்ளைகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யலாம். அதே சமயம் தனக்கான உலகத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்வது அவசியம். தனக்கான உலகம் என்பது தனக்குப் பிடித்த மாதிரி தன்னுடைய விருப்பங்கள் நிறைவேற ஒரு நாளில் தினமும் இரண்டு மணி நேரம் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களை செலவிடுவதுதான். பிடித்த பொழுதுபோக்குகள், விருப்பங்களை அதில் நிறைவேற்றலாம். புத்தகம் படிப்பது, எழுதுவது தோட்ட வேலை, பிடித்த இசைக்கருவி கற்றுக்கொள்வது, பாட்டு அல்லது நடனம் கற்றுக் கொள்வது.

பிள்ளைகளுக்கு தாய், தந்தை என்கிற அடையாளம் மட்டும் ஒரு பெற்றோருக்கு போதாது. தங்களுக்காக ஒரு இலக்கை எடுத்துக்கொண்டு அந்தக் கனவை நனவாக்க தொடங்க வேண்டும். வருத்தங்களை தனது துணையுடன் பகிர்ந்துகொள்ளும் அதே நேரம் திட்டங்களையும் லட்சியங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை துணையுடன் சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கலாம்.

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதை செஞ்சாலே போதுமே!

கோ ஆர்டினேடெட் செட்ஸ்! ட்ரெண்டி & பெஸ்ட்!

SCROLL FOR NEXT