தமிழ்நாட்டில் தற்போது, ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் பரவல் அதிகரித்து இருக்கிறது. இந்நோயின் காரணமாக ஏற்படும் அறிகுறியும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் காண்போம்.
‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் தமிழ்நாட்டின் தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிப்பது வழக்கம்தான் என்றாலும், தற்போது நாளொன்றுக்கு இரண்டிலிருந்து ஐந்த நபர்கள் இந்த வகை கண் நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த வகை கண் நோய் முதன்முதலில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதால் இதற்கு, ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த கண் நோய் விழி மற்றும் இமைக்கு இடையேயான ஜவ்வில் அடினோ வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. இந்நோய், ‘அன்ஜட்டிவா வெண்படலத் தாக்குதல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணின் வெண்படலம் சிவப்பு நிறத்தில் மாறும், கண் உறுத்தல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலே காரணமாகும். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கண் அறுவை சிகிச்சைகள் செய்வது கடினம். அதேநேரம் மெட்ராஸ் ஐ பாதிப்பு சிறிய வயது உடையவர்களுக்கு விரைவில் குணமடைந்து விடும். வயது முதிர்ந்தவர்களுக்கு குணமடைய சற்று காலதாமதம் ஏற்படும்.
அதேநேரம், மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. ஏனென்றால், கண் சம்பந்தமான பல்வேறு நோய்கள் ஏற்படும்போது முதல் அறிகுறியாக கண் வெண்படலம் சிவப்பாக மாறும். எனவே, கண் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படும்பொழுது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.