‘கார்டியா டொகோடோமா’ எனும் தாவரவியல் பெயர் கொண்ட சிறு மர வகையான ‘நறுவிலி’ மூலிகை, உடல் ஆரோக்கியம் தருவதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். நறுவிலி மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
நறுவிலியின் பயன்கள்: நறுவிலி உடல் சூடு மற்றும் குளுமை தன்மை கொண்டதாகும். இதன் முக்கியப் பயன் இரத்த சுத்தியாகும். வண்டல் சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கும். கபத்தை அறுக்கும். தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் போன்றவற்றை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றையும் நீக்கும். மருந்துகளினால் உண்டாகும் வேகத்தைத் தணிக்கும். பேரீச்சம் பழத்துடன் இதை அரைத்துப் பூச பருக்களை உடைக்கும்.
நறுவிலியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச் சுவைகள், குளுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவையாகும். நறுவிலி பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் சிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தை வெளியேற்றவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது, இரத்தத்திலுள்ள அசுத்தத்தை நீக்குகின்றது.
நறுவிலி அஜீரணத்தைப் போக்குவதோடு காய்ச்சலையும் தணிக்கின்றது. சீதபேதி, உடல் எரிச்சல், தொழுநோய், சொறி சிரங்கு ஆகியவற்றையும் குணமாக்கும். இதன் இலை வெட்டை நோய், கண் வலி ஆகியவற்றைக் குணமாக்கும். இதன் பழம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது. சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும். தொழுநோய், சரும வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிறைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல், சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இந்தப் பழத்தை மூக்கு சளி பழம் என்றும் சொல்வார்கள்.
பயன்படுத்தும் விதம்: இளம் வயதினருக்குத் தோன்றும் முகப்பருக்களை இதன் இலைச்சாறு போக்கும். இலையை அரைத்து வெண்ணெய்யுடன் சேர்த்து உள்கொண்டால் மலச்சிக்கலும், மூல நோயும் குணமாகும். மரப்பட்டைச் சாறுடன், தேங்காய்ப் பால் சேர்த்து பருகினால் கடுமையான வயிற்று வலி குறையும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காய்க்கும் பசை போன்ற திரவத்துடனும் துவர்ப்பு கலந்த இனிப்பு சுவையுடைய நறுவிலி பழங்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. கொத்து கொத்தாகக் கனிந்து தொங்கும் நறுவிலி பழங்களின் மகத்துவம் தெரிந்தவர்கள், அவற்றைப் பறித்து உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
நறுவிலி பழத்தின் முக்கிய மருத்துவ நன்மைகள்:
சர்க்கரை கட்டுப்பாடு: நறுவிலி பழத்தில் உள்ள இயற்கை சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக அமையும்.
மலச்சிக்கல் நிவாரணம்: நறுவிலி அதிக நார்ச்சத்து கொண்டதால், மலச்சிக்கலைத் தீர்க்கும் திறன் கொண்டது. இதனால் ஜீரண பிரச்னைகளை சீராக்க உதவுகிறது.
வீக்க நீக்கம்: நறுவிலி பழத்தின் மருத்துவக் குணங்கள் உடல் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகின்றன. இதனால் தீவிர வீக்கத்தைக் குணமாக்கப் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: நறுவிலி பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ஒவ்வாமை மற்றும் உடல் நோய்களைத் தடுக்க உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்: சிறுநீரகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, சிறுநீரக ஆரோக்கியத்தை பேண உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்: நறுவிலி குடல் பாக்டீரியாக்களைச் சீராக்கி, ஆரோக்கியமான ஜீரணத்தை உறுதி செய்யும்.
நறுவிலி பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் நலத்தில் பல நன்மைகளை ஏற்படுத்த முடியும்.