Miracle Foods That Prevent Stroke 
ஆரோக்கியம்

பக்கவாதத்தைத் தடுக்கும் அற்புத உணவுகள்… பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடலாம்! 

கிரி கணபதி

பக்கவாதம் என்பது மூளைக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காததால் ஏற்படும் ஒரு மருத்துவ அவசரநிலை. இது மூளை செயல்பாட்டில் தற்காலிக அல்லது நிரந்தர சேதத்தை ஏற்படுத்தி, கை கால் செயலிழப்பு, பலவீனம் மற்றும் விழுங்குவதில் சிரமம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். பக்கவாதம் உலக அளவில் இறப்பு மற்றும் ஊனமாக்குவதில் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. 

ஆரோக்கியமான உணவு பக்கவாத அபாயத்தை குறைக்க ஒரு முக்கிய வழியாகும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, அதேசமயம் சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது போன்றவை இதில் அடங்கும். 

  • பழங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பை குறைக்கவும், ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவதால் பக்கவாத அபாயம் குறையும். 

  • முழு தானியங்கள்: முழு தானியங்களில் நார்ச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த அழுத்தத்தைக் குறைத்து கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. முழு தானியங்களான ஓட்ஸ், பழுப்பு அரிசி, பார்லி, குயினோவா போன்றவற்றை பக்கவாத நோயாளிகள் சாப்பிடுவதால் கொஞ்சம் கொஞ்சமாக குணமடையும் வாய்ப்புள்ளது. 

  • கொழுப்புள்ள மீன்: கொழுப்புள்ள மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ரத்த கட்டிகளை தடுக்கவும் உதவும். சால்மன், மாக்கரெல், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள் பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாத நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 

  • பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எனவே பீன்ஸ், பட்டாணி போன்ற பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். 

  • நட்ஸ் மற்றும் விதைகள்: நட்ஸ் மற்றும் விதைகளில் உள்ள கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்றவை ரத்தநாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எனவே பாதாம், வால்நட், வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை தினசரி கொஞ்சமாக உட்கொள்வதால் பக்கவாத பாதிப்பிலிருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். 

  • ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் ஒரு ஆரோக்கியமான கொழுப்பாகும். இது ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளாமல், கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். 

  • கொழுப்பு குறைந்த பால் பொருட்கள்: பொதுவாகவே பால் பொருட்கள் கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும். இவை நம் ரத்த அழுத்தத்தைக் குறைத்து எலும்புகளை வலுப்படுத்த உதவும். எனவே பால், தயிர், சீஸ், பன்னீர் போன்ற பால் பொருட்களை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

இத்தகைய உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் பக்கவாதத்தைத் தடுக்க நீங்கள் மேலும் பிற விஷயங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டியது அவசியம். தினசரி 30 நிமிடங்களாவது வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள். எப்போதும் ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை தாருங்கள். 

இவற்றுடன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்களது உடலை பரிசோதித்து ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா என பார்ப்பது, உங்களை நீங்கள் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ள மிகவும் முக்கியமானது. இது பக்கவாதம் மட்டுமின்றி மற்றும் பிற எவ்விதமான நோய்களும் உங்களை அண்டாமல் இருப்பதற்கான சிறந்த வழியாகும். 

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT