நமது உடலில் பல்வேறு காரணங்களால் புண்கள் ஏற்படுகின்றன. அவற்றை சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம். அதுபோன்று உடலில் ஏற்படும் புண்கள் குணமாக சில வீட்டு வைத்தியங்களை இந்தப் பதிவில் காண்போம்.
வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது தடவ காயம் விரைவில் ஆறும்.
நாயுருவி இலை, சுண்ணாம்பு, வெள்ளைப்பூண்டு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து அதை காயத்தின் மீது வைத்துக் கட்டி விட, காயம் ஆறிய பின் இந்த பற்று தானே விழுந்து விடும்.
வெட்டுக்காயங்கள் ஆற வசம்புத்தூளை காயத்தின் மீது வைத்துக் கட்டி விட, காயம் சீக்கிரம் ஆறும்.
அடிபடுதல் மற்றும் சிராய்ப்புகளுக்கு மருதாணி இலை பொடியை நீரில் கலந்து அதைக் கொண்டு புண்களைக் கழுவ விரைவில் ஆறும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை அந்த காயத்தின் மீது வைத்துக் கட்டி விட்டு பின் எடுத்து விட புண் ஆறும்.
வாய்ப்புண் குணமாக நெருஞ்சில் இலையை சாறு எடுத்து வாய் கொப்பளிக்க, மணத்தக்காளி சாறை அருந்த உடனே நிவாரணம் கிடைக்கும்.
காலில் முள் குத்திய வலி நீங்க வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அனலில் வாட்டி, சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க காயம் செப்டிக் ஆகாமல் விரைவில் ஆறும்.
நாள்பட்ட புண்களில் மீது கருவேலம் கொழுந்தை அரைத்து புண்ணின் மீது வைத்துக் கட்டி வர சீக்கிரம் ஆறும். புரையோடிய புண் அல்லது காயம் ஆற அத்திப் பாலை தடவ விரைவில் ஆறும்.
படுக்கைப் புண் குணமாக குப்பை மேனி இலையை விளக்கெண்ணையை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் தடவ படுக்கைப் புண் ஆறும்.
புது செருப்பு கடித்த புண் குணமாக தேங்காய் எண்ணெய் அல்லது குப்பை மேனி இலையை அரைத்து தடவி வந்தால் புண் குணமாகும்.
உள்ளாடையை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் புண் மற்றும் அரிப்புக்கு கடுக்காயை அரைத்து தடவி பின் கழுவி வர புண் ஆறும்.
தலையில் பேன், பொடுகு போன்றவற்றால் ஏற்பட்ட புண்ணை வேப்பங்கொழுந்தை அரைத்து அதை தண்ணீரில் கலந்து குளித்தால் புண் ஆறும்.
சமைக்கும்போது ஏற்படும் தீப்புண்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணி. வாழைப்பழத் தோலை எரிச்சல் நீங்க உபயோகிக்கலாம். தீவிர தீப்புண்களாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.