நம் உடலினுள் செரிமானம் நடைபெறவும், நச்சுக்களை வெளியேற்றவும், சத்துக்களை உடலின் அனைத்து பாகங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஆதாரமாகத் திகழ்வது நீர்ச்சத்து. இச்சத்து குறையும்போது மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்ற பலவித நோய்களும் அழையா விருந்தாளியாக உடலுக்குள் வந்து அமர்ந்து கொள்ளும். இதைத் தடுக்கவே தினசரி குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம் எனக் கூறப்படுகிறது. கோடையோ, குளிரோ ஊட்டச் சத்துக்களோடு நீரேற்றமும் தரவல்ல ஆறு வித ஹாட் ட்ரிங்க்ஸ் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
* ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில், கால் பாகம் வெட்டிய எலுமிச்சம் பழ சாறைப் பிழிந்து பின் அதன் தோலையும் நீரில் போட்டு முழுக விட்டு இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து அருந்த உடல் நீரேற்றம் பெறும்.
* கஃபைன் இல்லாத, கெமோமைல் (chamomile) போன்ற மூலிகை சேர்த்து தயாரிக்கப்படும் டீ, நீரிழப்பைத் தடுக்கும்; இயற்கையான முறையில் உடலுக்கு குளிர்ச்சியை தந்து நீர்ச்சத்தையும் சமப்படுத்தும்.
* சூடான பாலில், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட மஞ்சள் தூள் கலந்து அருந்துவதால் உடல் உஷ்ணம் சமநிலைப்படும்; ஆழ்ந்த அமைதியான உறக்கமும் வரும்.
* தக்காளி, வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, டர்னிப், பச்சைப் பட்டாணி போன்ற காய்கறிகளை வேகவைத்து தயாரிக்கப்படும் சூப் அற்புதமான அனுபவம் தரும்; பசலைக்கீரை சூப் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
* இஞ்சி டீ குடிப்பதால் உடல் நீரேற்றம் பெறுவதுடன் உடல் வலி குணமாகும்; உடல் உஷ்ணம் சமநிலைப்படும்.
* கொதிக்கும் நீரில் ஜீரகம் சேர்த்து மூடி வைத்துப் பிறகு வடிகட்டி அந்த நீரை அருந்த தொண்டைக் கட்டு மற்றும் நெஞ்சுச் சளி குணமாகும்.
வாசகர்களே, சுலபமான முறையில் தயாரிக்கக்கூடிய மேற்கூறிய பானங்களை நீங்களும் பருகுங்கள்; நீரேற்றம் குறையாத நிறைவான வாழ்க்கைக்கு வித்திடுங்கள்!