இந்த ஆண்டுக்கான தாய்ப்பால் வாரம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகவும் புனிதமான உயிர் தரும் அமுதம் என்றால் அது தாய்ப்பால்தான். ஒரு குழந்தை பிறந்தது முதல் தரப்படும் தாய்ப்பாலானது, குழந்தை இறக்கும் வரை தேவைப்படும் வலுவுடன், எதிர்ப்பு சக்தியை தருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
அந்தக் காலத்தில் பிள்ளைகள் நிறைய பெற்று வற்றாத தாய்ப்பாலை கொண்டிருந்தனர் தாய்மார்கள். தற்காலத்தில் நாகரிகம் பெருகி, கல்வி அறிவு பெற்று பணிக்குச் செல்லும் சூழலில் உள்ள பெண்கள் ஒரு குழந்தை பெற்ற நிலையில் தாய்ப்பால் தருவதற்கு சங்கடப்படுகின்றனர் அல்லது தங்கள் அழகு இதனால் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் தாய்ப்பாலை தவிர்க்கின்றனர். இதனால் விளையும் சாதக, பாதகங்கள் அனைத்தும் தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே உண்டாகும்.
இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் கருவுற்று இருக்கும்போதும் பணிக்குச் செல்ல வேண்டிய சூழல் நெருக்கடியினாலும் தாய்ப்பால் தருவதில் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
பணிக்குச் செல்லும்போது சொகுசான வாழ்க்கை வாழ்ந்து குழந்தை பிறந்ததும் ஏற்படும் அழுத்தம் மற்றும் பணி குறித்து உண்டாகும் மன அழுத்தத்தினால் தாய்ப்பால் சுரப்பை குறைக்க வைத்து தாய்ப்பால் தருவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் விலக வைக்கிறது என்பது உண்மை.
இதைத் தவிர்க்க பணிக்குச் செல்லும் பெண்களிடம் தாய்ப்பால் ஊக்குவிப்பு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
1. தேசிய விதிகளை மதித்து கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய சம்பளத்துடன் கூடிய விடுப்பு.
2. பணி செய்யும் இடங்களில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான இட வசதி மற்றும் தாய்ப்பால் தருவதற்கான நேர ஒதுக்கீடு ஆகியவற்றை அவர்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும்.
3. குழந்தைகளை தாய்மார்களின் மேற்பார்வையில் வைத்துக்கொள்ள தேவைப்படும்போது அவர்களுக்கு தாய்ப்பால் வழங்கிட குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு இடங்களை அலுவலகங்களில் தனியாக ஏற்படுத்த வேண்டும்.
4. வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான சூழலையும் அதிக சுமை கொண்ட பணி வாய்ப்புகளை தளர்த்தி, டெலிகாலிங் போன்ற எளிதான பணிகளை அவர்களுக்குத் தர அலுவலகங்கள் முன்வர வேண்டும்.
5. முக்கியமாக, தாய்ப்பால் தரும் பெண்களுக்கு அவரது குடும்பத்தினர் ஆதரவாக இருக்க வேண்டும். குறிப்பாக, கணவர் அவரது நேரத்தை ஒதுக்கி மனைவியை ஊக்கப்படுத்துவது நல்லது.
அலுவலகம் செல்லும் பெண்கள் மட்டுமின்றி, தற்போது வெளியே செல்லும் வாய்ப்புகள் உள்ள தாய்மார்களுக்கு பொது இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கான வசதிகள் கொண்ட தடுப்பு அறைகளை அதிக அளவில் நிறுவ வேண்டும்.
தற்போது தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு பெருகி தாய்ப்பால் தானமாகக் தரும் இளம் தாய்மார்களும், தாய்ப்பாலை சேமிக்கும் வங்கிகளும் அதை உரியவர்களுக்கு சேர்க்கும் தன்னார்வலர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
ஆரோக்கியமான சந்ததியரை உருவாக்க தாய்ப்பால் தருவது இளம் தாய்மார்களின் கடமை மட்டுமல்ல, ஒரு உயிரை நம்மிடம் தந்து காப்பாற்றும் பொறுப்பு தந்த பிரபஞ்சத்துக்கு செலுத்தும் நன்றியும் கூட.