நம் சமையலறையில் இருக்கும் சோம்பு நல்ல மணத்திற்காக மட்டுமல்ல, அதன் ஆரோக்கிய குணத்திற்காகவும் சமையலில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக, விருந்து உண்ட பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. ஏனென்றால், அது உணவை விரைவில் செரித்து ஜீரணமாக்கும் சக்தியைத் தரும். அது மட்டுமல்ல, சோம்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
1. ஒரு தேக்கரண்டி சோம்பில் புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்டுகள், மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், தாமிரம் ஆகிய சத்துக்கள் உள்ளன. அத்துடன் இதில் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. உடலின் ஆரோக்கியமான இரத்த அணுக்களின் உற்பத்திக்கு இன்றியமையாத ஆற்றலையும் இது தருகிறது.
2. சோம்பு சிறந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுவதால் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
3. வயிற்றுப் புண்கள் அல்லது இரைப்பை புண்களை குணமாக்க சோம்பு பெரிதும் உதவுகிறது. அஜீரணம், குமட்டல் மற்றும் வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வுகளை சோம்பு சரிப்படுத்துகிறது. வயிற்றுப் புண்களை குறைத்து அமில சுரப்பை குறைக்கிறது. அது மட்டுமின்றி, செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
4. சோம்பின் மூலப்பொருட்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சோம்பை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
5. சோர்வுக்கு நல்ல மருந்தாக சோம்பு செயல்படுகிறது. குறிப்பாக, பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் மனச்சோர்வை குறைப்பதில் சோம்பு பெரும் பங்கு வகிக்கிறது.
6. சருமத்தில் ஏற்படும் ஒருவிதமான அலர்ஜி மற்றும் பூஞ்சைகளால் உடலுக்கு ஏற்படும் சரும நோய் பாதிப்புகளை சோம்பு கட்டுப்படுத்துகிறது.
7. உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் மாதவிலக்கு நிறுத்தத்தின் போது பெண்களுக்கு உடலில் வலியும், எலும்பு மெலிதாகவும் ஆகும். சோம்பு அந்தக் குறைபாட்டை சரி செய்கிறது.
அதே சமயம், சோம்பை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது முக்கியமான விஷயம். சிறிதளவே போதுமானது. சோம்பை தினமும் உட்கொள்ளாமல் வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டாலே போதுமானது.