பரபரப்பான வாழ்க்கை முறையால், மக்களின் உடல் செயல்பாடு குறைந்து வருகிறது. எனவே, உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். அதிலும் பல உடல் உறுப்புகளை செயல்பட வைக்கும் நீச்சல் பயிற்சி மிகவும் அவசியம்.
ஆரம்ப காலத்தில் சர்க்கரை நோய் பணக்காரர்களுக்கு மட்டுமே வரக் கூடிய ஒரு உயர்ந்த நோய் என்று நம்பப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை மாறி, வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மனிதர்களை தாண்டி வளர்ப்பு பிராணிகளும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. சர்க்கரை ரத்தத்தில் அதிகமாகும் போது ஏராளமான உடல் சீர்கேட்டை விளைவிக்கிறது.
வாழ்க்கை முறை மாற்றங்களைச் சரி செய்வதன் மூலமும், சரியான உணவு உண்ணுவதன் மூலமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் கட்டாயம் உடற்பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும்.
சமீபத்திய ஆய்வின்படி , நீச்சல் பயிற்சி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான பயிற்சியாக உள்ளது.
நீச்சல் பயிற்சி வழக்கமான உடற்பயிற்சியை விட சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீச்சல் பயிற்சியில் ஒரே நேரத்தில் கை , கால் , இடுப்பு, முதுகு, தலை, விலா, வயிற்று உறுப்புகள், தோள் பட்டை என பல உறுப்புகள் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. நீச்சல் பயிற்சியில் ஆக்சிஜன் அதிக அளவு கிடைக்கிறது. இந்த பயிற்சியில் நுரையீரல் ஆரோக்கியம் அடைகிறது.
நீச்சல் பயிற்சி உடலில் இன்சுலின் அளவைக் மேம்படுத்த உதவுகிறது. ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் அண்ட் பிசிக்கல் ஃபிட்னஸ் ஆய்வில், நீச்சல் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தும் என்று கண்டறியப்பட்டது. நீச்சல் ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி. இது உடலின் மூட்டுகளை சுமைப்படுத்தாது. இது முழு உடலுக்கும் மிகவும் நல்ல பயிற்சியாகும்.
இப்போதெல்லாம் உடல் நலக் கோளாறுகளில் இருந்து விடுபட உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் நீச்சலையும் முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம்.
நீச்சல் பயிற்சி உடலின் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து , தசைகள் குளுக்கோஸை மிகவும் திறம்பட உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. நீச்சல் போன்ற நடவடிக்கைகள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும். ஆதலால் சர்க்கரை நோயுள்ளவர்கள் நீச்சல் பயிற்சி தினமும் செய்யலாம்.
இதற்காக நீச்சல் குளம் செல்ல வேண்டும் என்று என்ன வேண்டாம். ஊர் குளங்கள் ஆறுகளில் நீச்சல் பயிற்சி செய்யலாம்.