வாழைப்பழத்தில் எந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோ, அதேபோல வாழைக்காயிலும் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி6 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் இருப்பதால், அனைவரும் கட்டாயம் வாழைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்கும்: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு வாழைக்காய் ஒரு சிறந்த தேர்வாகும். வாழைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: வாழைக்காய் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உணவாகும். இது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக, வைட்டமின் சி சத்து நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொடுக்கிறது.
இதயத்தை பாதுகாக்கும்: வாழைக்காயில் அதிகப்படியான பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்த பிரச்னையை சரி செய்து இதய பாதிப்புகளைத் தடுக்கிறது. மேலும், பொட்டாசியம் சத்து மற்றும் உடலில் உள்ள சோடியம் அளவை சமப்படுத்தி இரத்த அழுத்தப் பிரச்னையை குறைக்கிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கும்: வாழைக்காய் நார்ச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இதில் உள்ள எதிர்ப்பு மாவுச்சத்து, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்தை உறிஞ்சும் தன்மை மேம்படும்.
இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்: வாழைக்காயில் உள்ள எதிர்ப்பு மாவுச்சத்து, இரத்த சர்க்கரையை உறிஞ்சும் தன்மையை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் வாழைக்காயை சாப்பிட வேண்டும்.
பொதுவாகவே, வாழைக்காய் அனைவருக்கும் பாதுகாப்பான உணவு என்றாலும், சிலருக்கு இதை சாப்பிட்டால் வாயு தொல்லை, செரிமான பிரச்னை ஏற்படும் என சொல்வார்கள். அத்தகைவர்கள் வாழக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வாழைக்காயை சாப்பிடலாமா? வேண்டாமா? என சந்தேகம் உங்களுக்கு இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.