நீங்கள் சாப்பிடும் உணவுகள், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பது போல உங்கள் உடலின் கழிவு நீக்கமும் முக்கியமானது. உங்கள் உடலின் ஆரோக்கியம் காக்கும் முதன்மை மருந்து உடல் கழிவுகளை வெளியேற்றுவதுதான். பாரம்பரிய வைத்திய முறைகளான சித்தா, ஆயுர்வேதம் போன்றவற்றில் உடற் கழிவுகளை நீக்கம் செய்யப்பட்ட பிறகே வியாதிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.
உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெற உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். உடலின் வெளிப்புற அழகை சுத்தமாகவும், அழகாகவும் பராமரிப்பது எவ்வாறு முக்கியமோ, அதைவிட மிகவும் முக்கியமானது உடல் உட்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவது.
தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் நச்சுக்கள் சேரத் தொடங்கி விடுகின்றன. இந்நிலையில் உங்கள் உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெறத் தேவையற்ற உடலின் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இந்த செயல்முறையை, ‘டீடாக்ஸ்’ என்கிறார்கள். உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை சரியான நேரத்தில் அகற்றாத நிலையில் உடல் சரியான முறையில் செயல்படாது. இதனை உடல் பல அறிகுறிகள் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.
உங்கள் வயிறு உப்பியதாக தோன்றுகிறதா? உடல் சுறுசுறுப்பின்றி மந்தமாகிறதா? உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? உங்கள் உடலுக்கு கழிவு நீக்கம் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேலும் சில அறிகுறிகள் மூலம் இதை உடல் நமக்கு உணர்த்துகிறது.
தொடர்ந்து உங்கள் வயிறு உப்பியிருந்தால், அது உங்கள் உடலில் பிரச்னை உள்ளது என்பதைக் காட்டுவதாகும். இதற்கு அர்த்தம், உங்கள் வயிறு நீங்கள் உட்கொள்ளும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்னைகள் உள்ளது என்று அர்த்தம். உங்கள் உடல் தொடர் சோர்வை உணர்கிறதா? நல்ல உறக்கத்திற்குப் பின்னரும் சோர்வாகவே உணர்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் அதிகப்படியான நச்சுக்கள் தங்கியுள்ளது என்று பொருள்.
குடல் இயக்கத்தின் அளவு குறைந்தாலும் அல்லது மலம் கழிப்பதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும், உங்கள் உடலுக்கு கழிவுநீக்கம் தேவை என்பதை சுட்டிக்காட்டுவதாகும். உங்களுக்கு எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது உங்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ எந்த காரணமும் இன்றி உங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டாலோ உங்கள் உடலில் அதிகளவில் கழிவுகள் தங்கியுள்ளது என்று பொருள்.
உங்களால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியவில்லையா? அல்லது உங்களின் மனநிலையில் மாற்றம் உள்ளதா? இதுவும் உங்கள் உடலில் கழிவு சேர்ந்துள்ளது. அதை உடனடியாக நீக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி. உங்களின் நாக்கை நன்றாக உற்றுநோக்குங்கள். அது வெள்ளையாக உள்ளதா அல்லது மஞ்சளாக உள்ளதா என்று பாருங்கள். இதுவும் உங்கள் உடலில் நச்சுக்கள் சேர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் சருமத்தின் பொலிவு குறைந்தாலோ அல்லது வறண்டு காணப்பட்டாலோ உங்கள் உடலில் அதிகப்படியான அழுக்கு சேர்ந்துள்ளது என்று பொருள். உங்களுக்கு அதிகளவில் சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும், உங்கள் உடலில் அதிகளவில் நச்சுக்கள் படிந்துள்ளது என்று பொருள்.
உடலில் சேர்ந்த கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுவதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை மருந்து என்கிறார்கள். அதற்கு சிறந்த வழி திரவங்களுடன் நாளை தொடங்குவதுதான். தூங்கி எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தி, தினசரி வேலைகளைத் தொடங்க ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. தண்ணீருடன் நாளைத் தொடங்குவது உடலை நீரேற்றமாக வைத்து, நச்சுக்களை வெளியேற்ற உதவும் எளிய வழி. அதோடு தேவைக்கு ஏற்ப நீரை எடுத்துக்கொள்வதும் முக்கியம்.
ஒவ்வொரு வேளை உணவுக்கு இடையில் ஆரோக்கியமான இடைவெளியை கொண்டிருக்க வேண்டும். இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிட வேண்டும்.
அன்றாடம் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது உடலில் நல்ல ஹார்மோன்களை சுரக்கச் செய்து உடற்கழிவுகளை வெளியேற்றும். அதேபோல், தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வதும் உடற்கழிவுகளையும், மனக் கழிவுகளையும் வெளியேற்றும்.
காலை மற்றும் இரவு குளியல், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகி உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள, உடற் கழிவுகளை எளிதில் வெளியேற்றலாம். இரவில் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குவது உடற் கழிவுகளை வெளியேற்ற சிறந்த வழியாகும்.