இன்று நம் வாழ்வில் நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் பற்றி கேள்விப்படுகிறோம். அவற்றில் இருந்து விடுபட இந்த மூன்று பழக்கங்கள் மிகவும் அவசியம்.
1. குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்: இயந்திரம் போன்று இயங்கிக்கொண்டிருக்கும் நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் இயந்திரத்திற்குத் தவறாமல் பெட்ரோல், டீசல் ஊற்றுகிறோமே தவிர, அதை இயக்கும் உடலிற்கு போதுமான அளவுக்கு தண்ணீரை ஊற்றுவது இல்லை. இதனால் உடலின் வெப்பம் சீராக இல்லாமல் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். இது உடலின் நீர் பற்றாக்குறையின் ஓர் அறிகுறி ஆகும். இதனைத் தவிர்க்க குறைந்தது மூன்று லிட்டர் அளவாவது தண்ணீர் பருக வேண்டும்.
2. ஆரோக்கியமாக இருக்க கண்டிப்பாக நடக்க (நடைப்பயிற்சி) வேண்டும்: ஒரு காலத்தில் நெடுநேரம் வெகு தொலைவு நடந்துகொண்டிருந்த நாம், இன்று நடந்து செல்வது என்றாலே ஒரு சுமையாகவும் சோம்பேறித்தனமாகவும் கருதுகிறோம். இதனாலே பலருக்கு உடல் பருமன் அடைந்து விடுகிறது. ஒரு அளவுக்கு மீறி போன பிறகு உடற்பயிற்சி கூடம் சென்று அங்கு மிகவும் சிரமப்பட்டு உடலைக் குறைக்க எண்ணுகிறோம். ஆனால், அதற்கும் சில நாட்களில் சலிப்பு வந்துவிடுகிறது. இதற்கு நாம் அன்றாடம் அரை மணிநேரம் நடந்தாலே போதுமானது. உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த நாளும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்புடனும் இருக்கும்.
3. உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்: ‘பசித்த பின் புசி’ என்பதற்கு ஏற்றபடி உணவை உட்கொள்ளுதல் வேண்டும். கடிவாளம் கட்டிய குதிரை நேராக செல்லுவதுபோல நேரம் வந்தவுடன் சாப்பிடுவது கூடாது என்றால் பசி இல்லாத நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு சாப்பிடாமல் இருப்பதைக் காட்டிலும் தீமையானது. நாம் உண்ட உணவு செரிமானம் ஆகாதபோது நாம் உண்ணும் உணவு மேலும் இரைப்பைக்குள் திணிக்கப்படுவது ஆகும். இதனால் செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க பசி எடுத்த பின்பு நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று பழக்க வழக்கங்கள் நிச்சயம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
- நிதிஷ்குமார் யாழி