வானிலையில் மாற்றம் ஏற்படுவது நம் உடல் நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக, மழை மற்றும் குளிர்க்காலங்களில் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்ட்ரோக் இரண்டு வகைப்படும் Ischemic stroke மற்றும் hemorrhagic stroke ஆகும். மூளை நரம்புகளுக்கு இரத்தம் செல்வது தடைப்படுவதே Ischemic stroke எனப்படும். இதுவே மூளையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கசிவு அல்லது இரத்த நாளங்கள் வெடிப்பது hemorrhagic stroke என்று சொல்வார்கள். கை, கால், முகம் மரத்துப்போதல், தலைவலி, கண் தெரிவதில் பிரச்னை போன்ற அறிகுறிகள் வரக்கூடும்.
ஸ்ட்ரோக் 55 அல்லது அதற்கு மேல் வயதானவர்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகமாக ஸ்ட்ரோக் வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைப்பிடித்தல், உடல் பருமன் போன்றவையும் ஸ்ட்ரோக் வருவதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
மழை அல்லது குளிர்காலங்களில் ஸ்ட்ரோக் வரும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு முக்கியமான காரணம், குளிர் காலத்தில் உடல் சூட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக இரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் குறைந்த அளவு இரத்தமே மூளைக்கு செல்கிறது. இது மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகள் வருவதற்குக் காரணமாக அமைகிறது.
மழைக்காலத்தில் அதிகமாகத் தண்ணீர் எடுத்துக்கொள்ள மாட்டோம். இதனால் உடல் அதிகமாக Dehydrate ஆகும். குளிர்காலத்தில் உடலில் உள்ள இரத்தம் கட்டியாகவும், இரத்தம் உறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.
அதிகமாக ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் உள்ளவர்கள் அல்லது வயதானவர்கள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பை குறைந்த அளவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மழைக்காலத்தில் வெளியிலே செல்வதைத் தவிர்த்து உடலை வெப்பம் குறையாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் குளிர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. இதையெல்லாம் செய்வதன் மூலம் ஸ்ட்ரோக் வராமல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.