

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த டாட் காம் நீர்க்குமிழி அல்லது இணைய வணிக நிறுவனங்களின் நீர்க்குமிழி பிரபலமான ஒன்று. டாட் காம் நீர்க்குமிழி எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
டாட் காம் நீர்க்குமிழி எவ்வாறு உருவானது?
1990களின் ஆரம்பத்தில் இணையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன்பு அது அரசாங்கம், பல்கலைக்கழகங்கள், இராணுவம் போன்ற சிலரின் பயன்பாட்டில் மட்டுமே இருந்தது. இணையம் உலகத்தை மாற்றப் போகும் தொழில்நுட்பம் என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது.
நேரடியாக கடைகளில் வாங்கும் பொருட்கள் இணையத்தில் வாங்குவதாக மாறிவிடும் என்ற எண்ணம் மக்களுக்கு இருந்தது. ஆனால், இணையம் என்பது பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை. அமெரிக்காவில் 2.3% மக்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தினர். 1993 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மொசைக் (MOSAIC) என்ற உலாவி(Browser) சொற்கள் மற்றும் படங்கள் இரண்டையும் ஒரு சேர கொண்டு வந்து, இணையத்தை பயன்படுத்துவதை எளிமையாக்கியது.
இணையத்தின் பயன்பாடு 1000% அதிகரித்தது. இதனை ஒட்டி பல்வேறு தொழில் முனைவர்கள் இணையத்தை நோக்கி நகர்ந்தனர். 1970 களுக்குப் பிறகு வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. தொழில் தொடங்க கடன் பெறுவது மிகவும் எளிதாக இருந்தது. 1994 ஆம் ஆண்டு வெளிவந்த நெட்ஸ்கேப் நேவிகேட்டர்(Netscape Navigator) உலாவி இணையப் பயன்பாட்டை இன்னும் எளிமைப்படுத்தி மொசைக் உலாவியை பின்னுக்கு தள்ளியது.
1995 ஆம் ஆண்டு நெட்ஸ்கேப் நேவிகேட்டர் உலாவி நிறுவனம் பங்கு வெளியீடு திட்டத்தில்(Initial Public Offer - IPO) இறங்கியது . 28 டாலராக பட்டியலிடப்பட்ட அதன் பங்கு ஒரே நாளில் இரண்டு மடங்காகி 59 டாலர்களாக மதிப்பு உயர்ந்தது. அதனுடைய சந்தை மதிப்பு ஒரே நாளில் சில நிமிடங்களில் 2.7 பில்லியன் டாலர்களை எட்டியது. இங்குதான் டாட் காம் நீர்க்குமிழி தொடங்கியது.
நெட்ஸ்கேப் நாவிகேட்டரின் இத்தகைய பங்குச் சந்தையின் அசுர வளர்ச்சி பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை இணையத்தை நோக்கி திருப்பியது. பல்வேறு இணைய வணிகம் சார்ந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தொழிலுக்கான சரியான திட்டமற்ற, உற்பத்திப் பொருள் இன்னும் தயாராகாத வணிக நிறுவனங்கள் கூட இணையம் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டன.
ஒரு நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட உதவும் சொத்து, கடன்கள், இருப்பு நிலைக் குறிப்பு(Balance Sheet) போன்ற விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டன. அதற்கு மாறாக, அந்த வணிகத்தின் இணையதளத்திற்கு எவ்வளவு பேர் வருகை புரிகின்றனர் மற்றும் எவ்வளவு பக்கங்கள் பார்க்கப்படுகின்றன(eyeballs), எவ்வளவு வாடிக்கை யாளர்கள் பதிவு(Register) செய்துள்ளனர் என்பதைப் போன்ற விவரங்களைக் கொண்டு நிறுவனத்தின் மதிப்பை தேர்ந்தெடுத்தனர்.
இத்தகைய இணையம் சார்ந்த வணிக நிறுவனங்களில் துணிகர முயற்சி முதலாளிகள்(Venture Capitalist) பெருமளவில் முதலீடு செய்தனர். பங்குச்சந்தையில் பங்கு வெளியீடு திட்டத்தில் வெளியான இணைய வணிக நிறுவனங்களின் மதிப்பானது இரண்டு, மூன்று , நான்கு மடங்குகள் என ஒரே நாளில் அதிகரித்தது.
இத்தகைய இணைய வணிக நிறுவனங்களின் பங்கு வெளியீடுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீடு செய்தனர். இத்தகைய இணைய வணிக நிறுவனங்கள் செலவுக்கு பிறகு இலாபம் பெரிதளவு ஈட்டாவிட்டாலும் கூட, நிறுவனத்தை வளர்ப்பதற்கு அதிக அளவில் பணம் செலவு செய்தனர்.
விளம்பரம் மற்றும் மற்ற இணைய வணிக நிறுவனங்களை வாங்குவதற்கு பணத்தைச் செலவு செய்தனர். 1998 இல் 42 இணைய வணிக நிறுவனங்கள் பங்கு வெளியீடு திட்டத்தில் இறங்கி 1.96 பில்லியன் டாலர்கள் திரட்டின. 1999 ஆம் ஆண்டு இணைய வணிக நிறுவனங்கள் 289 பங்கு வெளியீடு திட்டத்தில் இறங்கி 24.66 பில்லியன் டாலர்கள் திரட்டின.
1998 ஆம் ஆண்டு பங்கு வெளியீடு நிறுவனங்களில் 14% என இருந்த இணைய வணிக நிறுவனங்களின் சதவீதம், 1999 ஆம் ஆண்டு 60% என உயர்ந்தது. பங்கு வெளியீடு திட்டத்தில் ஈடுபட்ட இணைய வணிக நிறுவனங்களின் பட்டியலிடப்பட்ட மதிப்பு சராசரியாக முதல் நாளில் 90% என உயர்ந்தது.
இணைய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்கு மிக அதிக அளவில் பணம் செலவழித்தன. சில இணைய வணிக நிறுவனங்கள் 90% பணத்தை விளம்பரத்தில் செலவழித்தன. மார்ச் 10, 2000 ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்களை பெருமளவில் தனது குறியீட்டில் கொண்டிருந்த நாஸ்டாக்(NASDAQ) பங்குச்சந்தைக் குறியீடு மிக அதிகபட்ச அளவாக 5048 அடைந்தது.
இது குறியீட்டின் நிறுவனங்களின் வருமானத்தைவிட 200 மடங்கு அதிகமாக இருந்தது. இவ்வாறு 500% வளர்ச்சி அடைவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகின. ஆனால் மறுபடி பழைய மாதிரி சரிவதற்கு இரண்டு ஆண்டுகளேயானது.
மார்ச் 13, 2000 ஆம் ஆண்டு ஜப்பானில் பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது அது அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையினைத் தாக்கியது. இணைய வணிக நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் மூலம் அவை பெரிதாக இலாபம் ஈட்டவில்லை என்பது தெரிய வரத் தொடங்கியது. இதன் காரணமாக இந்த நிறுவனங்களை குறித்து மக்கள் கேள்விகள் கேட்கத் தொடங்கினர். வருவாய் எவ்வாறு ஈட்டும், முதலீட்டாளர்கள் முதலீடு இன்றி இணைய வணிக நிறுவனங்களால் சம்பாதிக்க முடியுமா போன்ற கேள்விகள் மக்கள் கேட்கத் தொடங்கினர்.
பங்குகள் விலைகள் சரியத் தொடங்கின. மே 16, 2000 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மத்திய வங்கி பணவீக்கத்தைக் குறைப்பதற்காக வட்டி விகிதத்தை 6.5% என அதிகரித்தது. இது முதலீட்டாளர்கள் கடன் வாங்கி முதலீடு செய்வதைக் கடினமாக்கியது. இணைய வணிக நிறுவனங்கள் போதிய முதலீடு இன்றி திவாலாகத் தொடங்கின. பல மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட நிறுவனங்கள் மதிப்பற்றதாகின.
பிப்ரவரி 2000 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 82.5 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட பெட்ஸ் டாட் காம்(Pets.com) அதே வருடம் நவம்பர் மாதம் திவாலானது. மார்ச் 2, 2001 இல் அமெரிக்கா பொருளாதார மந்தத்தில் இறங்கியது. அக்டோபர் 9, 2002 ஆம் ஆண்டு நாஸ்டாக் குறியீடு 1114 என்ற அளவிற்கு இறங்கியது. அதாவது கிட்டத்தட்ட 78% மதிப்பை இழந்தது. ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் காணாமல் போனது. 4,15,000 மக்கள் வேலைகளை இழந்தனர்.
கிட்டத்தட்ட 50% தகவல் தொழில்நுட்ப வேலைகளில் இழப்பு ஏற்பட்டது. பெரிய நிறுவனங்கள் கூட தங்களது மதிப்பில் 80% இழந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் மாத இரட்டை கோபுர தாக்குதல் இதை இன்னும் மோசம் ஆக்கியது. 2004 ஆம் ஆண்டு இணைய வணிக நிறுவனங்களில் 50% தோல்வியடைந்தன. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை போல் எல்லா இணைய வணிக நிறுவனங்களும் வெற்றி பெறும் நிறுவனங்கள் அல்ல என்பது தெளிவானது.
அமேசான், கூகுள், ஈபே (Ebay) போன்ற சில நிறுவனங்கள் இந்த வீழ்ச்சியைச் சமாளித்தன. ஏனென்றால் அவர்களிடம் எவ்வாறு வருமானம் ஈட்டுவது, வியாபாரம் செய்வது, யார் வாடிக்கையாளர்கள் என்பது பற்றிய சரியான திட்டமிடல் இருந்தது.
இந்த டாட் காம் நீர்க்குமிழியால் இணைய வழி தொலைத் தொடர்புக்குத் தேவையான நல்லதொரு வலைக் கட்டமைப்பு (Network infrastructure) தொலைத்தொடர்பு நிறுவனங்களால்(Telecom companies) உருவானது. இது பிற்காலத்தில் இணையம் வளர்வதற்கு உதவி புரிந்தது. மறுபடியும் நாஸ்டாக் தனது பழைய நிலையை அடைய ஏப்ரல் 24, 2015 ஆனது.
டாட் காம் நீர்க்குமிழி மூலம் நாம் கற்றுக்கொள்வது என்ன ?
தொழில்நுட்பம் சரியாக இருந்தால் கூட, அந்த தொழில்நுட்பம் சார்ந்த சரியான நிறுவனத்தில் முதலீடு செய்தால் மட்டுமே முதலீட்டில் இலாபம் ஈட்ட முடியும். ஒரே ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், நாம் நமது இழப்பைக் குறைத்துக் கொள்ளலாம். நமது எல்லா முதலீடுகளும் ஒரே துறையில் இருப்பது ஆபத்தானது.
பல்வேறு துறைகளில் பரவலாக இருக்கும் பொழுது ஒரு துறை வீழ்ச்சி அடைந்தால் நமது முதலீடு வீழ்ச்சி அடையாமல் இருக்கும். நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அதனுடைய வியாபார திட்டத்தை நாம் நன்கு புரிந்து கொண்டு முதலீட்டில் இறங்க வேண்டும். அவசரகால நிதி குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும். வேலை இழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் அவசரகால நிதியானது அதனைச் சமாளிக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: