

இன்று நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்யும்போது, உங்கள் வயதுடைய ஒருவர் லேப்டாப் உடன் இருக்கும் படத்தையோ அல்லது சொந்தமாக ஒரு பிசினஸை இயக்குவதையோ பார்த்திருக்கலாம். 60-65 வயது வரை உழைத்து ஓய்வு பெறுவது என்ற பழைய விதிமுறையை உடைத்து, 30-40 வயதிலேயே நிதி சுதந்திரம் அடைந்து ஓய்வு பெறுவதே FIRE இயக்கத்தின் (FIRE- Financial Independence Retire Early) நோக்கம்.
Gen Z தலைமுறையினரிடையே ட்ரெண்டிங்காக பரவி வரும் இந்த இயக்கம், நிஜமாகவே சாத்தியமாகுமா அதை அடைய முடியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
FIRE என்றால் என்ன?
FIRE என்பது ஒரு தீவிரமான நிதித் திட்டமே. இதன் அடிப்படை விதிகள் மிக எளிமையானவை:
1. சம்பளத்தில் 50% முதல் 75% வரை சேமித்து, முதலீடு செய்வது. அதாவது, தீவிரமான சேமிப்பு.
2. அத்தியாவசியம் அல்லாத செலவுகளைக் குறைப்பது.
3. சேமித்த பணத்தை பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற வருமானம் ஈட்டித் தரும் வழிகளில் முதலீடு செய்வது.
4. 25X விதி: உங்கள் வருடாந்திர செலவைப் போல் 25 மடங்கு தொகையைச் சேமிப்பது. (உதாரணமாக, ஒரு வருட செலவு ₹5 லட்சம் என்றால், இலக்கு ₹1.25 கோடி).
ஏன் Gen Z இதை விரும்புகிறார்கள்?
இந்தத் தலைமுறையினர் வேலைப் பாதுகாப்பின்மையை உணர்ந்தவர்கள். உயர் கல்விக்கான கடன், வாடகைப் பளு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு போன்றவை இவர்களை சீக்கிரமே வேலைப் பளுவிலிருந்து வெளியேறத் தூண்டுகிறது. 40 வயதிலேயே நிதிச் சுதந்திரம் அடைந்தால், விருப்பப்பட்ட வேலையைத் தேர்வு செய்யலாம் அல்லது வேலைக்கே செல்லாமல் இருக்கலாம்.
40 வயதில் இருக்கும் ஆற்றலோடு உலகைச் சுற்றிப் பார்க்கவும், கனவுத் திட்டங்களை நிறைவேற்றவும் இது வழி வகுக்கிறது.
இது நிஜமாகவே சாத்தியமா?
FIRE இயக்கம் கவர்ச்சியாகத் தோன்றினாலும், இதில் சில சவால்கள் உள்ளன
1. அதிக சேமிப்பு விகிதம் சவாலானது:
₹50,000 சம்பாதிக்கும் ஒருவர் ₹35,000-ஐ சேமிப்பது என்பது வாடகை, போக்குவரத்து, குடும்பச் செலவுகள் நிறைந்த நகர வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒன்று. இது தீவிர சிக்கன வாழ்க்கை முறைக்குக் கட்டாயப்படுத்துகிறது.
2. மருத்துவச் செலவுகள்:
முன்னதாகவே ஓய்வு பெறும்போது, வேலை அளிக்கும் நிறுவனத்தின் மருத்துவக் காப்பீடு கிடைக்காது. எனவே, நீண்ட காலத்திற்கு நீங்களே அதிக பிரீமியத்துடன் தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டை நிர்வகிக்க வேண்டியிருக்கும்.
3. சந்தை ஏற்ற இறக்கம்:
உங்கள் முதலீடுகளை நம்பி நீண்ட காலம் வாழும்போது, பங்குச் சந்தையின் வீழ்ச்சிகள் சேமிப்பைப் பெரிதும் பாதிக்கலாம். ஓய்வு காலம் 50-60 ஆண்டுகளாக இருக்கும்போது இது மிகப் பெரிய அபாயம்.
எனவே, முழுமையாக FIRE அடைய முடியாவிட்டாலும், அதன் உத்திகளைப் பயன்படுத்துவது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
FIRE-ன் இலக்கைத் தளர்த்தி, 'Financial Independence'-ஐ மட்டும் இலக்காகக் கொள்ளுங்கள். அதாவது, கட்டாய வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இல்லாத நிலை. இதற்கு, முழு ஓய்வுக்குப் பதிலாக, பகுதி நேர வேலை (Part-Time), பிடித்தமான தொழிலில் ஈடுபடுவது போன்ற போன்ற மாறுபாடுகளைப் பின்பற்றலாம்.
FIRE இயக்கம் அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆனால், அதன் அடிப்படைத் தத்துவம் வலிமையானது. இளம் வயதிலேயே குறைவாகச் செலவு செய்யுங்கள், தீவிரமாக முதலீடு செய்யுங்கள்.இந்த இரண்டு பழக்கங்களும், நீங்கள் 60 வயதில் ஓய்வு பெற்றாலும், உங்களுக்குக் கூடுதல் நிதிப் பாதுகாப்பையும், அழுத்தமில்லாத ஒரு வாழ்க்கையையும் நிச்சயம் கொடுக்கும்.