

போன வாரம் என்னோட அக்கா அவங்க வாழ்க்கையில நடந்த ஒரு அனுபவத்தை என்கிட்ட ஷேர் பண்ணாங்க. அவங்க வீட்டு விசேஷத்துல சமைச்ச பிரியாணிய சாப்பிட்ட சொந்தக்காரங்க எல்லாரும், "உன் கைப்பக்குவம் வேற லெவல்! நீ பேசாம ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாமே!"ன்னு புகழ்ந்து தள்ளிட்டாங்க.
அதைக் கேட்டதும் அவங்களுக்கும் "நிஜமாவே நாம ஒரு ரெஸ்டாரன்ட் திறந்தா என்ன?"ன்னு பெரிய ஆசை வந்துடுச்சு. நம்ம வீடுகள்லயும் சரி, கல்யாண விசேஷங்கள்லயும் சரி, சமையல் நல்லா பண்றவங்கள பார்த்தா உடனே இந்த வார்த்தையைச் சொல்லுவாங்க. ஆனா, உண்மையிலேயே நல்லா சமைக்கத் தெரிஞ்சா மட்டும் ஒரு ஹோட்டலை (உணவு வியாபாரம்) வெற்றிகரமா நடத்த முடியுமா?
இதுக்கான நேர்மையான பதில் 'ஆமாம்' , 'இல்லை' ரெண்டுமேதான்! எந்த ஒரு ஃபுட் பிசினஸுக்கும் நல்ல சுவைதான் முதல் அடிப்படை. பல வருஷமா எல்லாரும் உங்க சமையலைப் பாராட்டுறாங்கன்னா, உங்ககிட்ட நிச்சயம் ஒரு நல்ல திறமை இருக்குன்னு அர்த்தம்.
ஆனா, வீட்டுல இருக்குற பத்து பேருக்கு ஆசையா, பொறுமையா சமைச்சுப் போடுறதும், தினமும் நூற்றுக்கணக்கான கஸ்டமர்ஸ்க்கு அதே சுவையோட, குவாலிட்டி கொஞ்சம் கூட மாறாம சமைச்சுக் கொடுக்குறதும் ரெண்டு வேற வேற உலகம்.
ஒரு நல்ல சமையல்காரருக்கும், ஹோட்டல் ஓனருக்கும் இடையில பெரிய வித்தியாசம் இருக்கு. ஹோட்டலுக்கு வர்ற கஸ்டமர்ஸ் வெறும் சுவைக்காக மட்டும் திரும்ப வர்றதில்ல; எப்ப போனாலும் ஒரே மாதிரியான சுவை கிடைக்குதுங்கிற நம்பிக்கையிலதான் வர்றாங்க.
அதுமட்டுமில்ல, மளிகை சாமான் வாங்குற கணக்கு, வீண் செலவ கட்டுப்படுத்துறது, கிச்சன் சுத்தம் மற்றும் FSSAI உணவுப் பாதுகாப்பு விதிகள், வேலை ஆட்களைச் சமாளிக்கிறதுன்னு ஹோட்டல் நடத்துறதுல ஆயிரம் பொறுப்பு வேலைகள் இருக்கு. அதாவது, ஒரு ஹோட்டல் ஓனர் வெறும் சமையல்காரர் மட்டுமில்ல; அவர் ஒரு நல்ல மேனேஜராகவும், கணக்குப் புலியாவும் இருக்கணும்.
இன்னொரு முக்கியமான உண்மை என்னன்னா, நம்ம சொந்தக்காரங்க பாசத்துலயும், உணர்ச்சிவசப்பட்டும் பாராட்டுவாங்க. ஆனா, கையில இருந்து காசு கொடுத்து சாப்பிடுற வெளியாட்கள் அப்படிப் பார்க்க மாட்டாங்க; அவங்க சுவையையும், விலையையும் கரெக்டா ‘ஒரே லைன்ல வச்சு பாப்பாங்க’.
லட்சக்கணக்குல பணத்தைப் போட்டுப் பெரிய ஹோட்டல் நடத்துறதுல நிறைய ரிஸ்க் இருக்கு, அதனால உடனே ஹோட்டல் திறக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆனா, மத்தவங்க உங்க சமையலைப் பாராட்டித் தர்ற அந்த நல்ல கமெண்ட்ஸை (Feedback), நீங்க சும்மா கேட்டுட்டு விட்டுடாம உங்களுக்கு சாதகமான ஒரு சின்ன காசு சம்பாதிக்கிற வாய்ப்பா மாத்திக்கலாம்.
முதல்ல உங்க சமையல்ல எது ரொம்ப ஸ்பெஷலோ, அந்த ஒரு உணவுக்கான ஆர்டர்களை மட்டும் வீட்டுல இருந்தே சின்ன அளவுல எடுக்க ஆரம்பியுங்க. அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கும், ஆபீஸ் போறவங்களுக்கும் மதிய சாப்பாடு பாக்ஸ் கட்டித் தர்றது, இல்லனா தீபாவளி பலகாரங்கள், ஊறுகாய் மாதிரி ஆர்டர் வேலைகள செஞ்சு கொடுக்கலாம்.
நீங்க சமைக்கிற வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப்ல போடுறது மூலமாவும் உங்க திறமைக்கு ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்க முடியும். சொந்தகாரங்களத்தாண்டி, வெளியாட்களும் உங்க சாப்பாட்டுக்கு காசு கொடுத்து வாங்கி நல்ல கமெண்ட்ஸ் தரும்போது, உங்க தன்னம்பிக்கை பல மடங்கு உயரும்.
இப்படி எந்தப் பெரிய ரிஸ்க்கும் இல்லாம, மத்தவங்களோட பாராட்டை உங்க வாழ்க்கையோட அடுத்த கட்ட வளர்ச்சிக்கான படிக்கட்டா நீங்க ஈஸியா மாத்திக்கலாம்!
சோ, யாரோ ஒருத்தர் "நீங்க ஹோட்டல் ஆரம்பிக்கலாம்"னு சொன்னா, "நாளைக்கே கடை திறங்க"ன்னு அர்த்தம் இல்ல; "உங்க கிட்ட நல்ல திறமை இருக்கு, அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போங்கன்னுதான் அர்த்தம். முன்பின் தெரியாத கஸ்டமர்ஸ் உங்க சாப்பாட்டைத் தேடிவந்து, திரும்பத் திரும்ப காசு கொடுத்து வாங்கி, மத்தவங்களுக்கும் ரெக்கமெண்ட் பண்ணும்போதுதான், உங்க சமையல் திறமை ஒரு உண்மையான பிசினஸ் வெற்றியா மாறுது!.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.