உலகின் முதல் தொழில்நுட்ப நீர்க்குமிழி: இங்கிலாந்தின் ரயில்பாதை பேரார்வம் எப்படி உருவானது?

10% முன்பணம், பான்ஸி மோசடி, நாடாளுமன்ற ஒப்புதல்கள்—1840-களில் ரயில்பாதைப் பங்குகளைத் துரத்திய வரலாற்றுப் பாடம். ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble
ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble
ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

வெங்கடராமன் ராமசுப்ரமணியன், பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்பக் கட்டமைப்பாளர். பொறியியல், வணிக மேலாண்மை, யோகா ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றவர். இரண்டு தமிழ் நூல்களின் ஆசிரியர்; தமிழ் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மனவளக்கலை துணைப் பேராசிரியராகவும் சேவையாற்றுகிறார்.

Updated on: 

உலகின் முதல் தொழில்நுட்ப பொருளாதார நீர்க்குமிழியாக கருதப்படும் இங்கிலாந்தின் ரயில்பாதை நீர்க்குமிழி (Railroad Bubble) பற்றித் தெரியுமா ? அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம். 

இங்கிலாந்து நாட்டில் தொழில்புரட்சி 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் தொடங்கியது. தொழிற் சாலைகளுக்கு இரும்பு, நிலக்கரி போன்றவற்றை எடுத்துச் செல்வது மெதுவாக நடந்தது. குதிரைகள், மனிதர்கள் வாயிலாக நடந்த போக்குவரத்து மெதுவாக இருந்தது. ராபர்ட் ஸ்டீபன்சன் போன்றவர்களால் நீராவி இன்ஜின் தொழில்நுட்பம் மேம்பட்டு, ரயில்பாதைகள் தொடங்கிய போது, இந்தப் போக்குவரத்து விரைவானது.

பல நாட்களாக இருந்த சரக்குப் போக்குவரத்து, சில மணி நேரங்களில் சாத்தியமானது. 1825 இல் ஸ்டாக்டன் மற்றும் டார்லிங்டன்(Stockton and Darlington) இடையேயான ரயில்பாதை மக்களுக்கு இதனைக் குறித்த ஆர்வத்தைத் தூண்டியது. 1825 இல் பங்குச்சந்தை நிறுவனங்கள் தொடங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த பொருளாதார நீர்க்குமிழி சட்டம்(Bubble Act) நீக்கப்பட்டது.

இது 1720ஆம் ஆண்டு சவுத் ஸீ பொருளாதார நீர்க்குமிழி(Southsea economic bubble) காரணமாக உருவாக்கப்பட்டது. 1830 இல் லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர்(Liverpool and Manchester) இடையிலான ரயில்பாதை மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மிகவும் எளிதாக்கியது. ரயில்பாதை நிறுவனம் இலாபகரமான ஒன்று என்பது இதில் நிரூபணமாகியது.

இந்த ரயில்பாதை நிறுவனத்தின் ஆரம்ப கால முதலீட்டாளர்கள் இதனால் அதிக அளவில் ஈவுத் தொகை(Dividend) பெற்றனர். இது ரயில்பாதை தொழில்நுட்பம் வருங்காலத்தில் மிகவும் முக்கியமாகப் போகிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தோற்றுவித்தது.

ஆனாலும் கூட, 1830களில் அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் வட்டி விகிதம் அதிகமாக இருந்த காரணத்தினாலும், பொருளாதாரம் மந்தமாக இருந்த காரணத்தினாலும், ரயில் பாதை நிறுவனங்களில் பெரிய அளவில் முதலீடு இல்லை.

1840களில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோது, அரசாங்கத்தின் வட்டி விகிதம் குறைந்தபோது, மக்கள் அரசாங்கத்தின் வட்டியை விட அதிகமாக இலாபம் ஈட்டும் ரயில்பாதை நிறுவனங்களின் பங்குகளை நோக்கி நகர்ந்தனர். இங்குதான் ரயில்பாதை நிறுவனங்களின் மீதான ஆர்வம் பேரார்வமாக(mania) மாறியது. இங்குதான் ரயில்பாதை நீர்க்குமிழி தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவை உலுக்கிய உலகப் பொருளாதார பெருமந்தம்: நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?
ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble

இதைப் பயன்படுத்தி பல்வேறு ரயில்பாதை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ரயில்பாதை நிறுவனத்தின் முதலாளிகள் ரயில் பாதை இல்லாத நகரம் பொருளாதாரத்தில் பின்தங்கி விடும். ரயில் பாதை உள்ள நகரம் பொருளாதாரத்தில் முன்னேறும் என்று விளம்பரம் செய்தனர். ரயில் பாதை நிறுவனங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்க பங்கில் 10% மட்டும் செலுத்தினால் போதுமானது. 

மீதமுள்ள பாக்கி பணத்தை, பின்னர் ரயில்பாதை கட்டுமானத்தின்போது கோரப்படும் போது செலுத்தலாம் என்று முதலீட்டாளர்களை ஈர்த்தன. இதன் மூலம், மக்கள் தங்களால் வாங்க இயலாத ரயில்பாதை நிறுவனங்களின் பங்குகளை 10% மட்டும் செலுத்தி வாங்கினர். 1000 பவுண்டுகள் தேவைப்படும் பங்கிற்கு 100 பவுண்டுகள் மட்டும் செலுத்தி வாங்கினர்.

ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble
ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble

மக்கள் வீட்டை அடமானம் வைத்து பங்குகளை வாங்கினர். இலண்டனின் காபி விடுதிகளில் ரயில்பாதை நிறுவனங்களைப் பற்றிய பேச்சுகள் அதிகரித்தன. செய்தித்தாள்களில் இத்தகைய ரயில்பாதை நிறுவனங்களின் பெரிய விளம்பரங்கள் வெளியாகின. அவற்றின் பங்குகள் குறித்த செய்திகள் வெளியாகின. அந்தப் பங்குகள் ஆண்டிற்கு 10- 15% ஈவுத் தொகையாக ஈட்டித் தரும் என பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பேராசையால் வீழ்ந்த இங்கிலாந்து: உலகின் முதல் பங்குச்சந்தை ஏமாற்று வித்தை 'சவுத் ஸி பபுள்' வரலாறு!
ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble

ரயில்பாதை உருவாகுவதற்கு முன்பே அந்த நிறுவனத்தின் பங்குகள் விற்றுத் தீர்த்தன. யூகம் சார்ந்த முதலீடுகள் (Speculative investments) அதிகரித்தன. 1844 இல் இந்த ரயில்பாதை நீர்க்குமிழி பெரிதாக தொடங்கியது. எல்லாரும் ரயில்பாதை நிறுவனங்களின் பங்குகளை வாங்க பேரார்வம் காட்டினர். ரயில்பாதை இருந்த நகரங்கள் வளரத் தொடங்கின. ரயில்பாதை நிறுவனங்கள் 10% அல்லது அதற்கு மேற்பட்ட ஈவுத் தொகையை வழங்கின.

ஆனால், எல்லா ரயில்பாதைகளும் இலாபமீட்டுபவையாக இல்லை. இந்த காலகட்டத்தில் ஜார்ஜ் ஹட்சன்(George Hudson) என்ற ரயில்பாதை நிறுவனத்தின் தலைவர் பிரபலமானார். அவர் ரயில்பாதை ராஜா(Railway King) என்றழைக்கப்பட்டார். அவர் ரயில்பாதைகளை பணத்தை பெருக்கும் கருவியாக பார்த்தார். அவர் பிராந்திய(Regional) ரயில்பாதைகளை வாங்கி, பெரிய ரயில்பாதை வலையை(Network) உருவாக்கினார். அவரின் கீழ் 12 ரயில்பாதை நிறுவனங்கள் இருந்தன. ஹட்சன் கீழ் ரயில்பாதை நிறுவனங்கள் இலாபமீட்டுமென முதலீட்டாளர்கள் நம்பினர்.

ரயில்பாதை நிறுவனத்தின் இலாபத்திலிருந்து ஈவுத் தொகை வழங்குவதற்கு பதிலாக, புதிய முதலீட்டாளர்களின் முதலீட்டினைப் பயன்படுத்திக் கொண்டு ஈவுத் தொகை வழங்கி, ஹட்சன் பான்ஸி திட்டத்தை(Ponzi Scheme) போல் நிதி மோசடி செய்தார்.

அவரது இத்தகைய ஈவுத் தொகை வழங்குதலின் காரணமாக, ரயில்பாதை நிறுவனங்களின் மீதான மவுசு அதிகரித்தது. ஹட்சனுக்கு புதிய ரயில் பாதைகளுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தொடர்ச்சியாக தேவைப்பட்டது. பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில்(Discounted) பங்குகளை வழங்கினார்.

அவர்களுக்கு இலஞ்சம் அளித்தார். ஒரு காலகட்டத்தில் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். 1844 முதல் 1846 காலகட்டத்தில் 1200 புதிய ரயில்பாதைகளுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 10000 மைல்களுக்கு புதிய ரயில்பாதைகளுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் ஒரே இடங்களுக்கு இடையே சில பாதைகள் அமைந்திருந்தன, பொருளாதார ரீதியான இலாபம் தராதவைகளாக சில இருந்தன, ஏமாற்று நிறுவனங்களாகவும் சில இருந்தன. அதாவது நிறுவனங்களைச் சரியாக ஆராயாமல் ஒப்புதல் வழங்கப்பட்டது.

1845 இன் இறுதியில், மற்ற துறைகளுக்கு செல்ல வேண்டிய முதலீடுகள் ரயில்பாதை நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லத் தொடங்கியபோது, இங்கிலாத்தின் மத்திய வங்கி பாங்க் ஆப் இங்கிலாந்து, இந்த யூக வணிகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணியது. வட்டி விகிதத்தை உயர்த்தியது.

இதையும் படியுங்கள்:
திருச்சி பொன்மலை சந்தை: உழவர் சந்தை டூ தமிழ்நாட்டின் மிகப்பெரிய செல்லப்பிராணிகள் மார்க்கெட்!
ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble

இந்த வட்டி விகிதத்தின் உயர்வு ரயில்பாதை நிறுவனங்களுக்கு முதலீட்டிற்கு வரும் பணத்தைக் குறைத்தது. ஊழியர்களின் சம்பள உயர்வு, நிலம் வாங்குதலில் அதிகரித்த செலவு, இரும்பின் விலையுயர்வு போன்ற காரணங்களால் ரயில் பாதை நிறுவனங்களுக்கு அதிக பணம் தேவைப்படவே, அவை 10% மட்டும் செலுத்திய பங்குதாரர்களிடம் மீண்டும் பணத்தைக் கோரின.

அதிக வட்டி காரணமாக பணம் கிடைப்பது கடினமாகவே, ஏற்கனவே தங்களிடம் உள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கினர். மேலும், ரயில்பாதை நிறுவனங்களின் எல்லா பாதைகளும் இலாபகரமாக இல்லாத காரணத்தால், ரயில்பாதை அமைக்க அதிக கட்டமைப்பு செலவு சார்ந்த கோரல்கள் காரணமாக, மக்களுக்கு அவற்றின் மீது இருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது.

1846 இல் பொருளாதார நீர்க்குமிழி வெடித்தது. பங்குகளின் விலை குறையத் தொடங்கின. பங்குகளின் விலை குறைவால், அதிக பங்குகளை விற்றால் மட்டுமே, எதிர்காலத்தின் கோரலை செலுத்த முடியும் என்ற நிலையில், மக்கள் அதிக அளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். பங்குகளின் விலைகள் குறைய, ரயில்பாதை நிறுவனங்களின் பங்குகள் மதிப்பற்றதாகின. நூற்றுக்கணக்கான ரயில்பாதை நிறுவனங்கள் தோல்வியடைந்தன.

பல ரயில்பாதைகள் கைவிடப்பட்டன. பல்வேறு பொறியாளர்கள் வேலை இழந்தனர். ரயில்பாதை நிறுவனங்களின் மதிப்பு மூன்றில் இரண்டு பங்கு குறைந்தது. இதனைத் தொடர்ந்த விசாரணையில், ஜார்ஜ் ஹட்சன் போலியாக கணக்குகளைப் பராமரித்தது வெளிச்சத்திற்கு வந்தது. பல ரயில்பாதை நிறுவன முதலாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.

ஜார்ஜ் ஹட்சன் கடனாளிகள் சிறையை(Debtors Prison) தவிர்க்க பிரான்ஸுக்கு தப்பி ஓடினார். பின்னர், அங்கு வறுமையில் இறந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் திவாலாகினர். கடன்கள் வழங்கிய இங்கிலாந்தின் வங்கிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. 1849 ஆம் ஆண்டு இத்தகைய பல ரயில்பாதை நிறுவனங்கள் கைவிடப்பட்டன அல்லது மற்ற நிறுவனங்களும் இணைக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் இத்தகைய பொருளாதார நீர்க்குமிழி எதிர்காலத்தில் நடக்காமலிருக்க ரயில்பாதை நிறுவனத்தின் கணக்குகள் சம்பந்தமான வெளிப் படைத்தன்மை, நிறுவனங்கள் தொடங்குவதில் கட்டுப்பாடுகள் போன்றவை உருவாக்கப்பட்டன. 

இதில் ஒரு நன்மையாக, ரயில்பாதை நீர்க்குமிழி காரணமாக, இங்கிலாந்தில் 6000 மைல் ரயில்பாதைகள் உருவாகின. அவை பின்னர், திறமையான நிறுவனங்களால் குறைந்த விலையில் வாங்கப்பட்டு, இலாபகரமான பாதைகளாக மாறின. இங்கிலாந்தின் தொழில்புரட்சியை விரைவாக்க, இந்த நீர்க்குமிழி உதவியது.

இந்த பொருளாதார நீர்க்குமிழி மூலம் நாம் அறிந்து கொள்வது, கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது. தொழில்நுட்பம் சரியாக இருந்தாலும், நிறுவனம் சரியாக இருந்தால் மட்டும் இலாபம் ஈட்ட முடியும். முதலீடுகளைப் பரவலாக செய்வதன் மூலம், நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு முதலீட்டையும் புரிந்துகொண்டு இறங்கவேண்டும். ஒரு தொழில்நுட்பம் வெற்றியடைய காலமாகும். நமது முதலீட்டின் குறிக்கோள் அதனுடன் ஒத்துப் போனால் மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும். யூக வணிகம் கூடாது. 

இதையும் படியுங்கள்:
தங்க விலை சரிவிற்கு இடையே 'ரெனியம்' கலப்பட பீதி: ஹால்மார்க் நகையை எப்படிச் சரிபார்ப்பது?
ரயில்பாதை நீர்க்குமிழி - Railway Bubble
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.