

வீட்டின் லாப்ட்/வீட்டுப் பரண் பற்றிய இந்த கட்டுரை, பாட்டி காலத்திலிருந்து இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்க்கை வரை அதன் மாற்றங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறது. சேந்தியில் மறைத்து வைக்கப்பட்ட பணம், நாவல், பழைய பாத்திரங்கள், டிரெங்குபெட்டி, குழந்தைகளின் சைக்கிள், ஆன்லைன் ஷாப்பிங் டப்பாக்கள் என தேவையும் தேவையற்றும் கலந்த பொருட்கள் சேரும் இடமாக லாப்ட் எப்படி மாறியது என்பதை சுவையாக சொல்கிறது.
வீட்டிற்கு கதவு, ஜன்னல் எவ்வளவு முக்கியமோ, அதை போல் லாப்ட் அவசியமாகிவிட்டது. இன்று சிங்கிள் பெட்ரூம் வீடுகளில் கூட, படுக்கையறையிலும், சமையலறையிலும் லாப்ட் இருக்கும்.
அன்று இதன் பெயர் "பரண்". எங்க பாட்டி, "சேந்தி"ன்னு சொல்வாள். சின்ன வயசுல காரணம் கேட்டப்ப, அண்டா, தவலை, வடைச்சட்டி, என அடிக்கடி உபயோகப்படுத்தாத பொருட்கள் சேர்ந்திருக்கும் இடம் அது. சேர்ந்தி என்று அழைக்கப்பட்டு மருவி சேந்தி ஆகிவிட்டது என்றாள். உண்மைதான். முக்கால்வாசி வீடுகளில் எப்பொழுதும் பரண் ஹவுஸ்புல்லாக இருக்கும். அதற்குள் உள்ள சாமான்களில் நிறைய சுவாரஸ்யமான கதைகளும் இருக்கும்.
தாயம்மா பாட்டி, மருமகளிடமும், மகளிடமும் அடிக்கடி சொல்வாள், "நான் செத்துப்போயிட்டா மேலே இருக்கிற குத்துப்போணிய இறக்கி, அது நிறைய தண்ணீ ஊத்தி அந்த தண்ணியாலதான் குளிக்கப்படுத்தணும்" மகள் சொல்வாள்,
"ஏம்மா..நீயே போனப்புறம் எப்பிடி குளிப்பாட்டினா என்ன? சும்மா புலம்பாதே" ஆனால், பாட்டி அடிக்கடி புலம்புவதை விடவில்லை. காரணம் பாட்டி சாவுக்குப் பின் புரிந்தது. பாட்டி, இறந்ததும் குளிப்பாட்ட, அண்டாவை கீழே இறக்கியதும், குடும்பத்தினர் வாயடைத்து நின்றுவிட்டார்கள். பின்னே, அண்டாவில், சில்லறைகளும், நோட்டுக்களுமாக குவிந்து இருந்தது. எண்ணினால் ஐம்பதாயிரம் தேறியது. குடும்பத்தினர் வாண வேடிக்கைககளுடன் பாட்டியை வழி அனுப்பி வைத்தனர்.
அறுபதுகளில், படிப்பு முடித்து திருமணமாகாத பெண்களுக்கு பொழுதுபோக்க கை கொடுப்பது ரேடியோவிற்கு அடுத்து வார, மாதப் பத்திரிகைகளும், நாவல்களும்தான். கிச்சனில் அடுப்பில் சாதம் வெந்து கொண்டிருக்கும்.
பருவதம் அக்கா அதில் ஒரு கண்ணும், நாவலில் ஒரு கண்ணுமாக பேலன்ஸ் பண்ணிக்கிட்டிருக்கும்போதே, சோறு ஆக்கிட்டியான்னு கேட்டவாறே அம்மா அடுக்களைக்குள் நுழைவாள். உடனே, நாவலை மூடி, பரண் மேல் ஒளித்து வைத்துவிட்டு பாவம் போல் நிற்பாள் பலமுறை.
அழகம்மா ஆச்சிவீட்டு பரணில் காது போன இருப்பு சட்டி, கைப்பிடி இழந்த கத்தி, ஒரு கால் ஒடிந்த இருகால் முக்காலி என ஊனமுற்ற பொருட்கள் அடைக்கலம் ஆகிவிட, அடிக்கடி ஆச்சிக்கும், மருமகளுக்கும் டிஷ்யூம், டிஷ்யூம்தான்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வரலாறு வைத்திருப்பாள், ஆச்சி. அவள் இறந்த பின், எல்லாம் வெளியேறிவிட, பரண் காலியான மைதானமாகிவிட்டது. ஒரே வாரம்தான். மருமகள் சீதனமாக கொண்டு வந்த டிரெங்குபெட்டி, பேரன் ஓட்டிய மூன்று சக்கர சைக்கிள், பாடாத ரேடியோ, பழையபாய் என மீண்டும் பரண் நிறைந்துவிட்டது.
இன்றும், நிறைய இல்லங்களில் லாப்ட் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களின் புகலிடமாகத்தான் இருக்கிறது. சில வீடுகளில் பிள்ளைகள் படித்து முடித்த புத்தகங்கள் நிறைந்திருக்கும். வயர், ஸ்விட்ச் போன்ற மின் பொருட்களின் ஸ்பேர்கள் அடைந்திருக்கும். கம்யூட்டர், டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் வாங்கிய அட்டை டப்பாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
ஹைலைட் என்னன்னா, சில டப்பாக்களில் வந்த பொருட்கள் விற்கப்பட்டிருக்கும். எதற்கும் உபயோகப்படும் என்ற டயலாக்கோடு டப்பாக்கள் மட்டும் இருக்கும். இளசுகளுக்கு பொறுமை கம்மி. பயன்படுத்தாத எந்தப் பொருளையும் அப்படியே லாப்ட்டில் வீசி விடுகிறார்கள். அபார்ட்மெண்ட்டில், ஒரு வீட்டில் மூன்று பெண்கள். அடிக்கடி ஆன்லைனில் ஆர்டர் போடுவார்கள்.
பேக் செய்து வந்த பைகளையும், அட்டைப் பெட்டிகளையும் லாப்ட்டில் கடாசிவிட்டார்கள். திடீரென ஒருநாள் பாரம் தாங்காமல் அடியிலிருந்த பாலீதீன் பை நகர மேலே இருந்த அட்டைப்பெட்டிகள் சரிந்துவிழ, அந்த நேரம் அப்பா வர மூவருக்கும் செம திட்டு.
நிறைய வீடுகளில் திருவாளர் எலிகளுக்கு பரண்தான் குடித்தனம் நடத்தும் ஏரியா. அவைகளின் கைங்கரியத்தில் கைக்குட்டை, சீப்பு, முறுக்கு, ஊசிப்போன வடை என பல தரப்பட்ட பொருட்களின் இருப்பிடமாகும். பரணை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் வேடிக்கை சம்பவங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும்.
வீடுகளில் கீழேயுள்ள இட நெருக்கடியை சமாளிக்கத்தான் லாப்ட். ஆனால் அதுவே தேவையற்ற பொருட்களை அடைத்து வைக்கும் குடோன் ஆக மாறாதவரை லைப் லைட்தான்.