
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் அல்லது பூமியதிர்ச்சி (Earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் எனும் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை, 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன. ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை ஏதுமில்லை என்றாலும், வரலாற்றில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்கள், 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவனவாகும். உலகளவில் நிலநடுக்கங்களுக்கு மிகவும் ஆபத்தில் உள்ள 10 நாடுகள் எவையெவை என்பதை இப்பதிவில் காண்போம்.
1. ஜப்பான்: பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள நாடு ஜப்பான். இந்நாடானது பூகம்பங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இதை சமாளிக்க, மிகச்சிறிய நிலநடுக்கங்களைக் கூட கண்டறியும் திறன் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தை அது உருவாக்கியுள்ளது. தீவு முழுவதும் முன்னெச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான நில அதிர்வு அளவீடுகள் மூலம், பெரும்பாலான நிலநடுக்கங்கள் சிறியவை என்றும், குடியிருப்பாளர்களால் கவனிக்கப்படாமல் போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இருப்பினும், எப்போதாவது ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுகிறது. இது பெருமளவிலான சேதம் அல்லது உயிர் இழப்புக்கு வழி வகுக்கும் என்பதால் ஜப்பான் நாட்டில், வரவிருக்கும் பூகம்பங்கள் குறித்து குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்கவும், அவர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யவும் நாடு தழுவிய எச்சரிக்கை அமைப்பையும் செயல்படுத்துகிறது.
2. இந்தோனேசியா: ஒவ்வொரு ஆண்டும் இங்கு 6.0 ரிக்டர் அளவுக்கு அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் அது உலகின் மிக அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2018ம் ஆண்டில், 6.0 ரிக்டர் அளவுக்கு அதிகமான ஒன்பது நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன், அந்நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்கியதுடன், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தின. பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், இந்தோனேசியா எரிமலை செயல்பாடு, வறட்சி, வெள்ளம் மற்றும் சுனாமி ஆகியவற்றாலும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக இருக்கிறது.
3. சீனா: சீனாவில் ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்த பேரழிவு தரும் நிலநடுக்கங்களின் நீண்ட வரலாறு உள்ளது. 2008ம் ஆண்டில், சிச்சுவான் மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 87 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். இது அனைத்துக் காலத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 18வது மிக மோசமான நிலநடுக்கமாக இருக்கிறது. சீனா, பல காரணங்களுக்காக பூகம்பங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. இது பல செயலில் உள்ள டெக்டோனிக் தகடுகளில் அமைந்துள்ளது. அவை தொடர்ந்து நகர்ந்து ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன. இதனால் பூமியின் மேலோட்டத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், சீனாவில் ஏராளமான மலைப்பகுதிகள் உள்ளன. அவை நிலச்சரிவுகள் மற்றும் புவியியல் நிகழ்வுகளுக்கு ஆளாகின்றன. இது அண்டை பகுதிகளிலும் பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
4. பிலிப்பைன்ஸ்: பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், உலகளவில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகும். அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு நில அதிர்வு நிகழ்வுகளின்போது ஆபத்தான நிலச்சரிவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்கள் இப்பகுதியை அடிக்கடி பாதிக்கின்றன. இந்தத் தொடர்ச்சியான மற்றும் கடுமையான இயற்கை ஆபத்துகள் காரணமாக, பல குடியிருப்பாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தாங்கள் குடியிருக்கும் கட்டடங்களை நிலநடுக்கங்களால் பாதிக்கப்படாதபடி உறுதியான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
5. ஈரான்: உலகில் அதிக நில நடுக்கப் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஈரான் ஒன்றாகும். பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பேரழிவு தரும் நிலநடுக்கங்களின் வரலாற்றை இந்நாடு கொண்டுள்ளது. பல தட்டு எல்லைகள் மற்றும் பிளவுக் கோடுகளில் அதன் இருப்பிடம் காரணமாக, ஈரான் அதிக அதிர்வெண் நில அதிர்வு நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதன் விளைவாக, கரடுமுரடான நிலப்பரப்பு ஏற்படுகிறது. 1990ம் ஆண்டு கிலான் மாகாணத்தில் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த பயங்கரமான சோகம் இருந்தபோதிலும், பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதை ஈரானியர்கள் அறிந்திருக்கின்றனர். நிலநடுக்க முன்னெச்சரிக்கையுடன் வாழ்கின்றனர்.
6. துருக்கி: பால்கன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு இடையில் அனடோலியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்நாடு, பல முக்கிய பிளவுக் கோடுகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகிறது. யூரேசிய தட்டுக்கும் ஆப்பிரிக்க மற்றும் அரேபிய தட்டுகளுக்கும் இடையில் அமைந்துள்ள இந்நாட்டின் ஒரு பகுதி, ஒவ்வொரு ஆண்டும் ஓரளவு நிலநடுக்கங்களைக் காண்கிறது. இருப்பினும், இப்பகுதிகளில் குடியிருப்பவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
7. பெரு: நெருப்பு வளையத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரு நாடு, அடிக்கடி சிறிய நிலநடுக்கங்களையும் மிதமான மற்றும் பெரிய நிலநடுக்கங்களையும் சந்திக்கிறது. இந்த நில அதிர்வு நிகழ்வுகள் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தி, உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இந்த அபாயங்களைச் சரி செய்ய, உயிர் இழப்பைத் தடுக்க உதவும் வகையில் பெரு நாடு தழுவிய நிலையில், மக்களுக்கு நிலநடுக்கத்தின்போது, எப்படிச் செயல்படுவது? என்பது போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறது.
8. அமெரிக்கா: உலகின் அதிக நிலநடுக்கப் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றலாம். அனைத்திற்கும் மேலாக, இது தொடர்ச்சியாக நிலநடுக்கப் பாதிப்புக்குள்ளான பகுதியில் அமைந்திருக்கவில்லை. இருப்பினும், அமெரிக்காவை நிலநடுக்கங்களுக்கு மிகவும் பாதிக்கக்கூடியதாக மாற்றுவது அதன் தனித்துவமான புவியியல் நிலப்பரப்பு ஆகும். அமெரிக்காவின் அதிக பூகம்ப அபாயத்திற்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று, சான் ஆண்ட்ரியாஸ் ஃபால்ட் மற்றும் நியூ மாட்ரிட் ஃபால்ட் உள்ளிட்ட பல முக்கிய பிளவுக் கோடுகளில் அதன் நிலைப்பாடு ஆகும். இந்தப் பிளவுக் கோடுகள் நாட்டின் மேற்குப் பகுதியின் பெரும் பகுதி வழியாகச் சென்று, மில்லியன் கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. அமெரிக்காவின் அதிக நிலநடுக்க அபாயத்திற்குப் பங்களிக்கும் மற்றொரு முக்கியக் காரணி அதன் அதிக மக்கள் தொகை ஆகும். 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், அமெரிக்கா உலகின் மிக உயர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், பொருள் ஒப்பீட்டளவில் சிறிய பூகம்பங்கள் கூட குறிப்பிடத்தக்க சேதத்தையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தக்கூடும்.
9. இத்தாலி: இத்தாலி கரடுமுரடான மலைத்தொடர்கள், செயலற்ற எரிமலைகள் மற்றும் கடலோர சமவெளிகளைக் கொண்ட நிலப்பரப்பைக் கொண்ட நாடு. இந்நாடு ஏஜியன் கடல் தட்டு, அட்ரியாடிக் தட்டு மற்றும் அனடோலியன் தட்டு ஆகியவற்றால் சூழப்பட்ட யூரேசிய தட்டு என்று பல பிளவுக் கோடுகளில் அமைந்துள்ளதால், அதிகமான நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு ஆட்படுகிறது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களில், 1908ம் ஆண்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மெசினா பூகம்பம் மற்றும் 1980ம் ஆண்டு 2 ஆயிரத்து 400 பேர்கள் உயிரிழந்த இர்பினியா பூகம்பம் ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவை. இந்தப் பேரழிவுகள் இருந்தபோதிலும், இன்னும் எதிர்கால நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு ஆளாகக்கூடிய பகுதிகளில் மக்கள் இருந்து கொண்டுதானிருக்கின்றனர்.
10. மெக்சிகோ: பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள பல நாடுகளைப் போலவே, மெக்சிகோவும் வழக்கமான நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு உள்ளாகிறது. பூகம்பம் அல்லது பிற இயற்கைப் பேரழிவுகளின்போது ஏற்படும் சேதத்தைக் குறைக்க கடுமையான கட்டடக் குறியீடுகள் மற்றும் அவசரகால நடைமுறைகள் இந்நாட்டில் வழக்கத்தில் உள்ளன.
உலகில் எங்கு வாழ்ந்தாலும், நிலநடுக்கம் அல்லது பிற இயற்கை பேரழிவை சந்திக்கும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. எந்தவொரு பகுதியிலும் ஏற்படும் எந்தவொரு நில அதிர்வு நடவடிக்கை குறித்தும் விழிப்புடன் இருப்பதும், இந்த ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். பயிற்சிகள் மற்றும் அவசரகால தயார்நிலை திட்டங்களில் பங்கேற்பது, அவசரக்காலப் பொருட்களை கையில் வைத்திருத்தல் மற்றும் நிலநடுக்கம் அல்லது பிற இயற்கைப் பேரழிவின்போது எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? என்பதை அறிந்துகொள்வது போன்றவற்றின் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.