

கிராமத்து மண் வாசனையையும், சைக்கிள் மணிகளையும் தொலைத்துவிட்டு, இன்று வீட்டுக்கு மூன்று கார் என்ற நுகர்வு கலாச்சாரத்திற்குள் நாம் எப்படி மூழ்கினோம்? மனிதனின் இரண்டு கால்களைக் கூட மறந்துபோகச் செய்யும் இந்த நவீன வாகன மோகத்தின் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அறியத் தொடருங்கள்!
முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்து வீட்டு வாசலிலும் ரெண்டு மாடுகள், நாலு ஆடுகள் கட்டிக்கிடக்கும்.ஒரு சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தெருவுக்கு ரெண்டு மாட்டு வண்டிகள் தெரு ஓரம் நிற்கும். எங்கே போனாலும் பெரியவர்களுக்கு நடைதான். சிறுவர்களுக்கு ஓட்டம்தான். இப்போது உடம்பு பெருத்து உருளும் நிலை வந்தபிறகுதான் மனிதனுக்கு வயிறு மட்டுமல்ல ரெண்டு கால்களும் இருப்பதை மருத்துவர்கள் நினைவூட்டி நடைப் பயிற்சி எனும் பெயரில் நடப்பதை தொடங்குகிறார்கள் நடு வயதினர்.
நாய்க்கு நிக்க நேரமுமில்ல என்று ஓடிக்கொண்டிருந்த நாய்கள் கூட ஓட்டத்தை மறந்து மனிதனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கி விட்டது.
இப்போ என்னடான்னா வீட்டுக்கு வீடு ரெண்டு கார், நாலு ஸ்கூட்டி அஞ்சு பைக்குன்னு பெட்ரோல் வாகனங்கள் மூடிக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பசி தீர்க்கும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்று பாலை ரோட்டில் கொட்டுகிறார்கள். ரோட்டில் ஓட்டும் வண்டிகளுக்கு பெட்ரோல் வாங்க கியூவில் நிற்கிறார்கள்.
இன்னதுக்குத்தான் பைக்கில் போகணுமென்ற விவஸ்தை இல்லாமல் இயற்கை உபாதைகள் கழிப்பிடம் போவதற்குக்கூட வாகனங்களைப் பயன்படுத்துவதால் சாலைகளில் அத்தியாவசியப் பயணங்களுக்கு ஒரு அவசரத்திற்கு பயணிக்க முடியாத வண்ணம் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து விட்டது. அது இப்படி என்றால் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேடி படாதபாடு படவேண்டியதுள்ளது.
அடுக்ககங்களில் கடும் கெடுபிடி. ஒரு ஃப்ளாட்டில் ஒரு காருக்குத்தான் அனுமதி தருகிறார்கள். ஆனால் எல்லா குடித்தனக்காரர்களும் இரண்டு மூன்று கார்கள் வைத்திருப்பதால் கார்களைதெருக்களில்தான் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
நாட்டுக்கோட்டை பக்கம் அந்தக்காலத் திருமணங்களில் ரெண்டு கல்யாண மண்டபம் சேர்ந்த மானைக்கு இருக்கும் ஒன்றில் கல்யாணம் மற்றும் விருந்து நடக்கும். இன்னொன்றில் மணமகனுக்கு பெண் வீட்டார் தரும் சீர்வரிசை கண்காட்சி போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அதுபோல ஒரு கல்யாணம் நடத்த ஒரு கல்யாண மண்டபம் போதாமல் கார் நிறுத்துவதற்கு ரெண்டு கல்யாண மண்டபம் பிடிக்க வேண்டியதுள்ளது.
பெரு நகரங்களில் மட்டுமல்ல சிறு நகரங்களிலும் கூட போக்குவரத்து நெருக்கடி என்பது அன்றாட பிரச்னைகள் ஆகிப்போச்சு. மனிதர்கள் குடியிருக்க ஒரு ஊரும் வாகனங்களை நிறுத்த ஒரு ஊரும் தேவைப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 500 ரூபாய் விற்றாலும் வாங்கி உபயோகிக்கும் அளவுக்கு இந்தியனின் வாங்கும் திறன் உயர்ந்து விட்டதா என்ன? பெட்ரோல் பங்க்குகளில் அத்தனை வாகனங்கள் வரிசையில் காத்து நிற்கின்றன.
சாலையில் சைக்கிளில் போவோரையோ நடந்து செல்பவரையோ காண்பது அரிதாகி விட்டது. மனிதர்களுக்கு நடப்பதற்கு இரண்டு கால்கள் இருப்பதையே எதிர்கால சந்ததியினர் மறந்துவிடுவார்கள் போல றெக்கை இருப்பதையே மறந்த கோழிகள்போல.
உடல் உழைப்பும் நடப்பதும் குறைந்துபோன இன்றைய அவசர வாழ்க்கையில், நவீன கால வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி, இட நெருக்கடிகளை உணர்ந்து, நமது உடல் நலனுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் உகந்த எளிய நடைமுறைப் பயணங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை வழங்குகிறது.