சமையல் வேலையை பாதியாக்கும் 12 டிப்ஸ்! மாங்காய் முதல் நூடுல்ஸ் வரை கைகொடுக்கும் குறிப்புகள்!!

மாங்காய் சேமிப்பு, உடனடி தோசை மாவு முதல் பக்கோடா வரை சமையலறையை எளிதாக்கும் 12 பயனுள்ள டிப்ஸ் இதோ.
சமையல்
சமையல் Gemini image
சி.ஆர்.ஹரிஹரன்

நான் கேரளாவில் உள்ள ஆலுவா யில் வசித்து வருகிறேன். என் வயது 76. பல வருடங்களாக தினமலர் சிறுவர் மலர், வாரமலர், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், பொதிகை சாரல் போன்ற பத்திரிகை களுக்கு ஜோக்ஸ் எழுதி வருகிறேன். எனக்கு மனைவியும், இரு குழந்தை களும் இருக்கிறார்கள். மனைவி ஆர். கீதா பெயரிலும் பல தமிழ் பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ், சிறு கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

Updated on: 



1. இரண்டு மூன்று பெரிய மாங்காய்களை தோல் சீவி துருவி, அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெயிலில் நன்றாக காய வைத்து, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது, அதிலிருந்து சிறிது எடுத்து, வெந்நீரில் ஊற வைத்து வழக்கம்போல தொக்கு செய்து கொள்ளலாம்.

2. புளித்த மோர் இருந்தால், அதில் புழுங்கல் அரிசியும், உளுத்தம் பருப்பும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து உடனே தோசை வார்க்கலாம். மாவு பொங்க வேண்டிய அவசியமும் இல்லை. தோசை ருசியாகவும் இருக்கும்.

3. தோசைக்கு அரிசி ஊறவைக்கும் போது, கைப்பிடி அளவு துவரம் பருப்பு சேர்த்துக் கொண்டால், தோசை வாசனையாகவும், முறுகலாகவும் இருக்கும்.

4. சேனைக்கிழங்கை வேக வைப்பதற்கு முன், தனியாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடித்ததும், தண்ணீர் ஊற்றி கொதி வந்த பிறகு கிழங்கைப் போடவும். கிழங்கு பதமாக சீக்கிரம் வெந்து விடுவதோடு, சுவையாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சரியான மாவு அளவுகளுடன் ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
சமையல்

5. குடிக்கும் நீரைக்காய்ச்சும் போது சிறிதளவு சுக்கைத் தட்டிப்போட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.இது ஜீரணத்துக்கு ஏற்றது மட்டுமல்லாமல் வாயுத் தொல்லையையும், மலச்சிக்கலையும் போக்கும். தண்ணீரும் சுவையாக இருக்கும்.

6. எலுமிச்சைப் பழத்தை ஊறுகாய்க்கு நறுக்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து நறுக்கினால் உள்ளே இருக்கும் சாறு வழிந்து வீணாகாமல் இருக்கும்.

7. சர்க்கரைவள்ளிக்கிழங்கை ஒரு கப் துருவி எடுத்து, அதனுடன் அரைக்கப் சர்க்கரை சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வையுங்கள். கொதி வந்ததும் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, சிறிதளவு பால் சேர்த்து இறக்கினால் சுவை மிகுந்த சூப்பர் பாயசம் ரெடி.

சமையல்
சமையல்Gemini image

8. காய்கறிகளை தயிரில் ஊற வைத்து வற்றல் தயாரிக்கும்போது, கால் ஸ்பூன் மஞ்சள் பொடியை தயிரில் சேர்த்து நன்கு கடைந்து, பின்னர் காய்களைப் போட்டு ஊறவைத்துச் செய்தால், வற்றலில் பூச்சி பிடிக்காமல் இருக்கும்.

9. பாதாம் பருப்பை ஊறவைத்து, தோல் உரித்து, விழுதாக அரைத்து கிரேவிக்களில் சேர்த்தால் ருசியும், சத்தும் கூடும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்குத் தெம்பு தரும் வெள்ளைச் சோளம்: பாரம்பரிய முறையில் 3 அருமையான ரெசிபிகள்!
சமையல்

10. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது, முதலில் சிறிது கடலைமாவை எண்ணையில் வறுத்துவிட்டு, கிழங்கைப் போட்டால் ரோஸ்ட் மொறுமொறு வென்று இருக்கும்.

11. எண்ணைய்ப் பாத்திரங்களை தேய்க்கும்போது, முதலில் அவற்றை டிஷ்யூ பேப்பரால் அழுந்தத் துடைத்து விட்டு, பிறகு தேய்த்தால் எளிதாக துலக்கி விடலாம். தண்ணீரும் குறைவாகவே செலவாகும்.

12. நூடுல்ஸ் மிகுந்து விட்டதா?அத்துடன் கடலைமாவும், அரிசி மாவும் சம அளவு சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் கலந்து, பக்கோடா பதத்துக்குப் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுங்கள். சுவை மிகுந்த நூடுல்ஸ் பக்கோடா தயார்.

அன்றாட சமையல் செய்யும் போது நேரத்தை மிச்சப்படுத்தவும், மீந்துபோன பொருட்களை வீணாக்காமல் சுவையான உணவாக மாற்றவும், உடல்நலனுக்கு ஏற்ற எளிய வழிகளையும் வாசகர் தெளிவாகப் பெறுவார்.