
ராஜ்மா அடை செய்யத் தேவையான பொருட்கள்
ராஜ்மா, பாசிப்பயறு, கருப்பு சுண்டல் மூன்றும் கலந்தது - 1 டம்ளர்
பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டும் கலந்தது - 1 டம்ளர்
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
தனியா - 1 கைப்பிடி அளவு
வரமிளகாய் - 6
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பருப்பு, அரிசி வகைகளை நன்றாக கழுவி இரவே ஊற வைத்து, காலையில் நைசாக மிக்ஸியில் உப்பு, சீரகம், சோம்பு, வர மிளகாய் இவற்றை சேர்த்து அரைத்து எடுக்கவும். அதனுடன் பெருங்காயத் தூள், மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, தனியா அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து தவாவில் எண்ணெய் தேய்த்து, அடைகளாக ஊற்றி அடைகளின் நடுவில் மற்றும் ஆங்காங்கே சில குழிகள் செய்து அதில் நல்லெண்ணெய் ஊற்றினால் எல்லா இடத்திலும் நன்றாக பரவி மொறு மொறுப்பாக இருக்கும். பிறகு திருப்பிப் போட்டு அடைகளை எடுத்து வைத்து விடவும்.
தேங்காய், உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் காரமானதாக இருந்தால் - 3
அரிந்த சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி அளவு
உளுந்து - 1 கைப்பிடி
வறுத்த வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் தாளிக்க - தேவையான அளவு
பூண்டு - 1 பல்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1 சிறிய துண்டு
புளி - சிறிதளவு
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சட்னிக்கு கொடுத்து இருக்கும் எல்லா பொருட்களையும் எண்ணெயில் நன்றாக வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டியது தான்.
காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 3 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையானது.
செய்முறை
மிக்ஸியில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அதில் உள்ள ஈரத்திலேயே அரைத்து எடுக்கவும். பிறகு கடாயில் தாராளமாக எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
மேற்கூறிய அடையுடன் இந்த இரண்டு சட்னியையும் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை. அனைவரும் விரும்பி உண்பர். நீங்களும் செய்து அசத்துங்கள்.