
பத்திய துவையல், இஞ்சி இனிப்பு துவையல், மிளகு சீரக துவையல் ஆகிய 3 ருசிகரமான துவையல்களை எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள் :
இளம் முருங்கைக்காய் - 10
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்
தக்காளி - 1
உப்பு - தேவையானது
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய்
செய்முறை :
முருங்கைக் காய்களை துண்டுகளாக்கி வேகவைத்து ஸ்பூனால் அதன் சதைப் பகுதிகளை வழித்தெடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் போட்டு வதக்கி எடுத்து தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடைசியாக முருங்கை காயின் விழுதையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடுகு, சீரகம் பெருங்காயத்தூளை நல்லெண்ணெய் விட்டு தாளித்து கடுகு பொரிந்ததும் பத்திய துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும். இது பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு உகந்த துவையல்.
தேவையான பொருட்கள் :
இளம் இஞ்சி - 100 கிராம்
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவையானது
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
வெல்லம் - 150 கிராம்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, சீரகம், நல்லெண்ணெய்
செய்முறை :
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சிறிது விட்டு நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கி ஆற விடவும். அத்துடன் உப்பு, நார் நீக்கிய புளி, மிளகாய்த் தூள், வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் லேகியம் போல் நன்கு இறுகி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அஜீரணம், வயிற்றுப் பிரச்சனைகள், வாய்வுக் கோளாறுகள் போன்றவற்றிற்கு சிறந்த துவையல் இது. இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பொங்கல், பூரி என தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
ஜுரம், உடல் வலி போன்ற காரணங்களால் எதை சாப்பிட்டாலும் நாக்கு கசந்து போகும். இதற்கு சுடச்சுட மிளகு ரசம் அல்லது நொய் கஞ்சி வைத்து அத்துடன் இந்த துவையலையும் சாப்பிடக் கொடுத்தால் உடம்பு கலகலப்பாகிவிடும்.
தேவையான பொருட்கள் :
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் - 1
உப்பு - தேவையானது
புளி - சிறிய நெல்லிக்காயளவு
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம் - சிறு துண்டு
செய்முறை :
வாணலியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு உப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். சிறிது ஆறியதும் தேவையான உப்பு, ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க நிமிடத்தில் துவையல் தயார். வாய் கசப்பை போக்கும் அருமையான துவையல் இது.