

சத்துள்ள உணவு தானியங்களில் முதன்மை இடத்தில் இருப்பது பச்சைப்பயறு எனலாம். இதில் புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. அதிலும் ஸ்பெஷல் கவனிப்பு டன் முளைகட்டிய பயறை பெரும்பாலானவர்களுக்கு சத்தான காலை உணவாகவும், மாலை நேரச் சிற்றுண்டியாகவும் பயன்படுகிறது.
குறிப்பாக முளைகட்டிய பச்சைப்பயறுடன் வெங்காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, மிளகு சேர்த்துச் சாலட் செய்தும் அல்லது லேசாக வேகவைத்து சுண்டலாகவும் சாப்பிடுபவர்கள் அநேகர்.
முளைகட்டிய பச்சைப்பயறின் நன்மைகள் ஏராளம். அதிலுள்ள புரதம் உடலின் தசைகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது..நார்ச்சத்து செரிமானத்திற்கும் சீரான குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. ஃபோலேட் சத்து செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவுக்கு அவசியமானது. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
முளைகட்டிய பயறு நல்லதுதான். ஆனால் வீட்டில் எப்படி முளைகட்டினாலும் சில சமயங்களில் துர்நாற்றம் வீசுகிறதே. சில நேரங்களில் கசப்புச் சுவையும் ஏற்படுகிறது. என்ன செய்வது? என்று புலம்புபவர்கள் உண்டு. அவர்களுக்காகவே கடைகளில் கிடைப்பது போலவே வீட்டிலும் புத்துணர்ச்சியான பச்சைப்பயறு முளைகட்டுவது இங்கு...
முளைகட்டத் தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சுத்தமான பருத்தித் துணி அல்லது தூய்மையான பாத்திரம்
இப்போது பச்சைப்பயறு முளைகட்டும் செய்முறையைப் பார்ப்போம்.
முளைகட்ட பயறைத் தேர்ந்தெடுத்தலில் கவனம் தேவை. புதிய, நல்ல தரமான பச்சைப்பயறைத் தேர்ந்தெடுக்கவும். சுருங்கிய, பூஞ்சை பிடித்த அல்லது நிறம் மாறிய பயறுகளை நீக்கிவிட்டு
இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர் போதுமான தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பயறை தண்ணீர் தேங்காமல் நன்கு வடிகட்டிக் கொள்ளவும். அதிகப்படியான ஈரப்பதம் துர்நாற்றத்தையும் பாக்டீரியா வளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். இப்போது முளைகட்ட வைக்கும் முறைப்படி ஊறி வடிகட்டிய பயறை சுத்தமான ஈரமான பருத்தித் துணியில் கட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். முக்கியமாக காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
பொதுவாக 8–12 மணி நேரத்தில் சிறிய முளைகள் தோன்றத் தொடங்கும். குளிர்ச்சியான காலநிலை என்றால் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும். அவ்வளவுதான்.. உங்களாலும் வீட்டிலேயே ப்ரெஷான முளைகட்டிய பயறை உருவாக்க முடியும்.
இந்த 4 முக்கியக் குறிப்புகளை பின்பற்றி நாற்றம், கசப்பு வராமல் தவிர்க்கலாம்.
1. பச்சைப்பயறை ஊறவைக்கும் நேரத்தை முதலில் கவனிக்கவும். பொதுவாக 8 மணி நேரம் ஊறவைப்பது போதுமானது. அதிக நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் புளிப்பு நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
2. அதிகம் தண்ணீர் தேங்க விடாமல் வடிகட்டுவது முக்கியம். முளைகட்டும் பயறில் அதிகப்படியான தண்ணீர் இல்லாமல் வெறும் ஈரப்பதம் மட்டும் இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் துர்நாற்றம், பிசுபிசுப்பு போன்றவை ஏற்படலாம்.
3. சுத்தமான துணி அல்லது பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். முளைகட்டுவதற்கு முன்பு பாத்திரத்தையும் துணியையும் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். பழைய நாற்றம் கொண்ட ஈரத்துணியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முளைகட்டும் நேரத்தில் அதிக வெப்பமான சூழலையும் தவிர்க்கவும்.
4. அதிக நாட்கள் முளைகட்ட விடாமல் சிறிய முளைகள் வந்தவுடன் பயன்படுத்தலாம். அதிக நேரம் வைத்திருந்தால் சுவை மாறலாம். முளைத்த பயறை நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவது பாதுகாப்பானது.
பச்சைப்பயறு கசப்பாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
பழைய அல்லது தரமற்ற பயறுகளைப் பயன்படுத்துவது.
முளைகட்டும் செயல்முறையில் அதிக வெப்பம் ஏற்படுவது.
நீண்ட நேரம் முளைகட்ட வைப்பது. இவைகள் மட்டுமின்றி. பயறில் இயற்கையாகவே இருக்கும் சில சேர்மங்களால் லேசான கசப்புச் சுவை ஏற்படுவதும் உண்டு.
வீட்டில் முளைகட்டிய பயறில் புளிப்பு அல்லது அழுகிய நாற்றம், வழவழப்புத் தன்மை, பூஞ்சை போன்றவை இருந்தால் நிச்சயமாக சாப்பிட வேண்டாம். கழுவினாலும் சமைத்தாலும் கெட்டுப்போன பயறைப் பாதுகாப்பாக மாற்ற முடியாது என்பதுடன் அதனால் நமது உடல்நலமும் பாதிக்கும்.
மேலும் முளைகட்டிய பயறில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் பச்சையாகச் சாப்பிடாமல் நன்றாக வேகவைத்துச் சாப்பிடுவதே நல்லது.