இன்று ஆடம்பர உணவுகளில் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தும் சில உண்ணக்கூடிய பூக்கள், ஒரு காலத்தில் இந்திய வீடுகளின் அன்றாடச் சமையலில் சாதாரணமாக இடம்பெற்றவை. இவை அரிய பொருளாகப் பார்க்கப்படாமல், பருவகாலத்திற்கு ஏற்ப உள்ளூர் தட்பவெப்ப நிலையில் எளிதாகக் கிடைத்ததாலும், சத்துகள் நிறைந்திருந்ததாலும் நம் முன்னோர்கள் இவற்றைச் சமைத்தனர். அதிகாலையிலேயே பறித்து, கையால் சுத்தம் செய்து குழம்பு, பொரியல், வறுவல் எனப் பல வகைகளில் சமைக்கப்பட்ட பாரம்பரியப் பூக்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வாழைப்பூ முக்கிய உணவாக உள்ளது. சுத்தம் செய்து நறுக்கி பருப்பு, குழம்பு, பொரியல் செய்யும்போது, இதன் லேசான துவர்ப்பு மசாலாக்களுடன் சேர்ந்து நார்ச்சத்து நிறைந்த சுவையான உணவாக மாறும். அதேபோல், பூசணிக்காய் காய்ப்பதற்கு முன்பே பருவத்தின் தொடக்கத்தில் பூக்கும் பூசணிப்பூ மிகவும் மென்மையானது. இதனை மாவில் தோய்த்து லேசாகப் பொரித்தோ, எளிய மசாலாக்களுடன் வதக்கியோ சமைப்பார்கள்.
குறுகிய காலம் மட்டுமே கிடைக்கும் முருங்கைப்பூவின் மென்மையான சுவை பருப்பு, பொரியல் மற்றும் குழம்புகளுடன் நன்கு பொருந்தும். அளவில் சிறியதாகவும் அதிக கசப்புடனும் இருக்கும் வேப்பம்பூ, சில பகுதிகளில் உகாதி பச்சடி மற்றும் ரசம் போன்ற பருவகால உணவுகளில் மற்ற சுவைகளுடன் சமநிலைப்படுத்திச் சேர்க்கப்படுகிறது.
'காட்டின் தீ' என அழைக்கப்படும் பலாஷ் (Palash) பூவின் இதழ்கள் பழங்குடியினர் மற்றும் வட்டாரச் சமையலில் பயன்படுகின்றன. லேசான புளிப்புச் சுவை கொண்ட இவற்றை தானியங்கள் அல்லது பருப்புகளுடன் சேர்த்து எளிமையான உணவாகச் சமைப்பார்கள். வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் தாமரைத் தண்டு மட்டுமல்லாமல், தாமரை இதழ்களும் தனித்துவமான பதத்திற்காக மெல்லிய குழம்பு மற்றும் வறுவல்களில் சேர்க்கப்படுகின்றன.
கோடைக்காலத்தில் குறுகிய காலம் மட்டும் பூக்கும் குல்மொஹர் (Gulmohar) பூக்கள் அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ப வதக்கலோ, சமையலோ செய்யப்படுகின்றன. மத்திய இந்தியாவில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் மஹுவா (Mahua) பூக்களைப் பச்சையாகவோ, உலர்த்தியோ, நொதிக்க வைத்தோ சாப்பிடுவார்கள். சர்க்கரை அரிதாக இருந்த பகுதிகளில் இதன் இயற்கையான இனிப்புச் சுவை சிறந்த ஆற்றல் தரும் உணவாகப் பயன்பட்டது.
வட இந்தியச் சமையலறைகளில் கச்னார் (Kachnar) பூ மொட்டுகள் மிகவும் பிரபலம். மசாலாக்களுடன் நன்கு வதக்கிச் செய்யப்படும் இந்தப் பொரியல், ரொட்டியுடன் சாப்பிட வயிறு நிறைக்கும் சிறந்த தொடுகறியாக இருக்கும். அதேபோல், ரோஜா இதழ்கள் என்றால் குல்கந்து (Gulkand) மற்றும் சர்பத் போன்ற இனிப்புப் பானங்கள் மட்டுமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், சட்னி மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் கார உணவுகளிலும் ரோஜா இதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று உண்ணக்கூடிய பூக்கள் மீண்டும் கவனம் பெறுவது ஏதோ புதிய கண்டுபிடிப்பு அல்ல. நம் பாரம்பரிய வீட்டுச் சமையலில் எப்போதும் இருந்ததை நினைவுகூர்வதே. இவை வெறும் ஆடம்பரத்திற்கு மட்டுமில்லாமல் உணவுக்குச் சுவை, நார்ச்சத்து மற்றும் பண்பாட்டு ஆழத்தைத் தருகின்றன. இவற்றில் பலவற்றை அன்றாட உணவில் மிக எளிதாகச் சேர்த்துக்கொள்ள முடியும்.