பாக்கெட் தேங்காய்ப்பால் உண்மையிலேயே பாதுகாப்பானதா? வீட்டுத் பாலுடன் ஒரு அதிரடி ஒப்பீடு!

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த வீட்டுத் தேங்காய்ப்பால் Vs பாக்கெட் தேங்காய்ப்பால்—எது உங்கள் குடும்பத்திற்கு நல்லது?
தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பால் Gemini image
Updated on

சமையலில் உணவிற்குத் தனிச் சுவையையும் அருமையான மணத்தையும் தருவதில் தேங்காய்ப்பாலுக்கு எப்போதும் முக்கியப் பங்கு உண்டு. தென்னிந்திய உணவுகளான ஆப்பம், காய்கறிச் சொதி, குருமா, பாயாசம் மற்றும் பல்வேறு வகை உணவுகளின் சுவையைத் தீர்மானிப்பதே இந்தத் தேங்காய்ப்பால் தான்.

தற்போது கடைகளில் ரெடிமேடாக பாக்கெட் தேங்காய்ப்பால் கிடைக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக இதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பாரம்பரியமாக வீட்டில் அரைத்துப் பிழிந்தெடுக்கும் தேங்காய்ப்பாலுக்கும், கடைகளில் விற்கப்படும் பாக்கெட் தேங்காய்ப்பாலுக்கும் என்ன வித்தியாசங்கள்? எது நல்லது என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. வீட்டுத் தேங்காய்ப்பாலின் சிறப்பு:

வீட்டில் தேங்காயை உடைத்துத் துருவி, வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்துப் பிழியும்போது கிடைக்கும் தேங்காய்ப்பால் நல்ல மணமாக இருக்கும். நூறு சதவீதம் தூய்மையானது மற்றும் இயற்கையானது. இதில் சி,ஈ, B1, B3, B5, B6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற முக்கியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. வீட்டில் தயாரிக்கப்படும் பாலில் செயற்கைப் பிரசர்வேடிவ்கள், கெமிக்கல்கள் அல்லது செயற்கை மணமூட்டிகள் எதுவும் சேர்க்கப்படுவதில்லை.

தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பால் Gemini image

புதிதாகப் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய்ப்பாலில் லாரிக் அமிலம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைப் பெருக்கிச் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் சமையலுக்குத் தகுந்தவாறு முதலாவது கெட்டிப்பால், இரண்டாவது மெல்லிய பால் எனப் பிரித்தெடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதால், இது உணவிற்குப் பிரத்யேக சுவையையும் இயற்கை மணத்தையும் முழுமையாகத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
அடுப்பில் சுட்ட கத்தரிக்காய் பச்சடி… இந்த சீக்ரெட் வாசனைக்கு 10 இட்லி பத்தாது!
தேங்காய்ப்பால்

2. பாக்கெட் தேங்காய்ப்பாலின் தன்மை:

கடையில் வாங்கும் தேங்காய்ப்பால், டின், பாக்கெட் அல்லது பொடி வடிவில் கிடைக்கும். இது பதப்படுத்தப்பட்ட தேங்காய்ப்பால். இது தேங்காய் வாங்கி, உடைத்து, துருவி, அரைத்துப் பிழியும் பெரிய வேலையை மிச்சப்படுத்துவதால் வேலைக்குச் செல்வோருக்குச் சிறந்த தேர்வாக இருக்கிறது. பாஸ்டரைசேஷன் முறைகளாலும் நவீன தொழில்நுட்பத்தாலும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் வசதி இதில் உள்ளது.

தொழில் முறையில் குறிப்பிட்ட அளவீடுகளுடன் தயாரிக்கப்படுவதால், எப்போதும் ஒரே சீரான கெட்டித் தன்மையுடனும் அடர்த்தியுடனும் கிடைக்கும் என்பதும், சமையலுக்குத் தேவையான நேரத்தில் உடனடியாக எடுத்துப் பயன்படுத்தலாம் என்பதும் இதன் சாதகமான அம்சங்கள் ஆகும்.

3. இரண்டில் எது நல்லது?

இந்த இரண்டு விதமான தேங்காய்ப் பாலையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆரோக்கிய ரீதியாகப் பல முக்கியமான மாற்றங்களைக் காண முடியும். பாக்கெட் தேங்காய்ப்பாலை அப்படியே வைத்திருந்தால், தண்ணீர தனியாகவும் தேங்காய் எண்ணெய்/கொழுப்பு தனியாகவும் மிதந்து பிரிந்துவிடும். அப்படி பிரியாமல், பால் எப்போதும் ஒரே சீரான கெட்டித் தன்மையோடு இருக்க சில வகையான இயற்கை பிசின்களை சேர்க்கின்றனர். அதில் பாக்டீரியா அல்லது பூஞ்சை காளான் வளர்ந்து பால் நாற்றமடிக்காமல் இருக்க குறிப்பிட்ட வேதிப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
10 நிமிஷத்துல திக்கான தேங்காய் பால் ரெடி… இந்த ட்ரிக் உங்களுக்குத் தெரியுமா பாருங்க!
தேங்காய்ப்பால்

இவை சிலருக்குச் செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அத்துடன், அதிக வெப்பத்தில் பதப்படுத்தப்படும் போது தேங்காயின் இயற்கையான நுண் ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும், தனித்துவமான இயற்கை மணமும் சற்றே குறைகின்றன.

எனவே பாக்கெட் தேங்காய்ப்பால் என்பது அவசரத் தேவைகளுக்கு ஒரு தற்காலிக மாற்றாக இருந்தாலும், ஆரோக்கியம், தூய்மை மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் வீட்டுத் தேங்காய்ப்பாலே எப்போதும் மிகச் சிறந்தது. உடலுக்குத் தேவையான முழுமையான சத்துக்கள் இயற்கை முறையில் கிடைக்கவும், தேவையில்லாத வேதிப்பொருள்களின் தாக்கத்தில் இருந்து நம் குடும்பத்தைப் பாதுகாக்கவும் முடிந்தவரை வீட்டில் புதிதாகப் பிழிந்த தேங்காய்ப்பாலையே பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத அவசரச் சூழலில் எப்போதாவது பாக்கெட் தேங்காய்ப்பாலைப் பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் அதை வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.

இந்த ஒப்பீட்டின் மூலம் உங்கள் குடும்பத்தின் செரிமான ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதுகாக்கும் சரியான உணவுத் தேர்வை நீங்கள் எளிதாக எடுக்க முடியும். தேவையற்ற ரசாயனங்களின் தாக்கத்திலிருந்து தப்பித்து, இயற்கை முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கச் செய்யும் விழிப்புணர்வை இது உங்களுக்கு வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com