தந்தூர் தேவையில்லை! தோசைக்கல்லிலேயே ஹோட்டல் ஸ்டைல் பட்டர் குல்சா செய்வது எப்படி?

வீட்டிலேயே மிக எளிதாக மிருதுவான பட்டர் குல்சா செய்ய ரகசிய டிப்ஸ் இதோ!
பட்டர் குல்சா - How To Make Kulcha
பட்டர் குல்சா - How To Make Kulcha
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

ஹோட்டலுக்குச் சென்றவுடன் மெனு கார்டைப் பார்த்ததும் பட்டர் குல்சாவை ஆர்டர் செய்பவர்கள் பலர்! வெண்ணெய் மணத்துடன் மென்மையாக இருக்கும் குல்சாவை, காரசாரமான கிரேவியுடன் சேர்த்துச் சாப்பிடுவது தனி சுகம். இதே ஹோட்டல் சுவையை வீட்டிலும் ருசிக்கலாம் என்றால் மகிழ்ச்சிதானே!

தந்தூர் அடுப்பு எதுவும் தேவையில்லை; வீட்டில் இருக்கும் சாதாரண தோசைக்கல்லிலேயே மென்மையான பட்டர் குல்சாவை எளிதாகச் செய்துவிடலாம். அதன் வகைகள், சுவையின் சிறப்பு, எளிய செய்முறை ஆகியவற்றைப் பார்ப்போமா?

பட்டர் குல்சா என்றால் என்ன?

குல்சா என்பது வட இந்திய உணவு வகைகளில் பிரபலமான மென்மையான ரொட்டி வகையாகும். மைதா மாவுடன் தயிர், உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் மாவு உப்புவதற்கான பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. வெறும் குல்சாவாகவும், உருளைக்கிழங்கு அல்லது பன்னீர் போன்றவற்றை உள்ளே வைத்து அடைத்தும் செய்யலாம்.

சுடச்சுட வெந்த குல்சாவின் மேல் வெண்ணெய் தடவிப் பரிமாறும்போது அது பட்டர் குல்சா எனப்படுகிறது. இதன் மென்மையும் வெண்ணெயின் மணமும் சுவையை மேலும் கூட்டுகின்றன.

குல்சா பிறந்த இடம் எது?

குல்சா வட இந்தியாவின் பஞ்சாப் பகுதியுடன் நெருங்கிய தொடர்புடையது. குறிப்பாக, பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரம் அதன் சுவையான அமிர்தசரஸ் குல்சாவுக்குப் புகழ்பெற்றது. பாரம்பரியமாகத் தந்தூர் எனப்படும் மண் அடுப்பில் குல்சா சுடப்படுகிறது.

அமிர்தசரஸ் குல்சாவில் உருளைக்கிழங்கு, வெங்காயம், மசாலாப் பொருட்கள் போன்றவற்றைச் சேர்த்து உள்ளே வைத்து அடைத்துச் செய்வதும் பிரபலமானது. இது பொதுவாகச் சன்னா மசாலா, ஊறுகாய், வெங்காயம் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது. காலப்போக்கில், குல்சாவில் பல வகைகள் உருவாகின. அவற்றில் வெண்ணெய் தடவிப் பரிமாறப்படும் பட்டர் குல்சாவும் சுவை விரும்பிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் ரகசியம் கசிந்தது… இப்படி மாவு பிசைந்தால் பட்டுரே பலூன் போல உப்பி வரும்!
பட்டர் குல்சா - How To Make Kulcha

குல்சாவில் இத்தனை வகைகளா?

குல்சாவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

அமிர்தசரஸ் குல்சா: உருளைக்கிழங்கு, வெங்காயம், மசாலாப் பொருட்களை உள்ளே வைத்து அடைத்துச் செய்யப்படும் பிரபலமான வகை.

பட்டர் குல்சா: சூடாகச் சுட்ட குல்சாவின் மேல் வெண்ணெய் தடவிப் பரிமாறப்படும் மென்மையான வகை.

பன்னீர் குல்சா: துருவிய பன்னீர், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றைக் கலந்து உள்ளே வைத்து அடைத்துச் செய்யப்படுவது.

வெங்காய குல்சா: பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மசாலாப் பொருட்கள் சேர்த்துச் செய்யப்படும் வகை.

பூண்டு குல்சா: பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துச் சுடப்படும் மணமிக்க வகை.

ஒவ்வொரு வகைக்கும் தனித்துவமான சுவை உண்டு. இவற்றில் பட்டர் குல்சாவை வீட்டிலேயே தோசைக்கல்லில் எளிதாகத் தயாரிக்கலாம்.

பட்டர் குல்சா - How To Make Kulcha
பட்டர் குல்சா - How To Make Kulcha

பட்டர் குல்சாவின் தனிச்சுவை என்ன?

குல்சாவின் வெளிப்புறம் லேசாக மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும். அதில் தடவப்படும் வெண்ணெய் அபாரமான மணத்தையும் சுவையையும் தருகிறது. மசாலா கிரேவியுடன் சேர்த்துச் சாப்பிடும்போது அதன் சுவை நன்றாக இருக்கும்.

தந்தூர் அடுப்பு இல்லாத வீடுகளிலும் தோசைக்கல்லைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். மாவை நன்றாகப் பிசைந்து சிறிது நேரம் மூடி வைப்பதும், மிதமான தீயில் சரியான பதத்தில் சுடுவதும் மென்மையான குல்சா கிடைக்க உதவும்.

தோசைக்கல்லில் பட்டர் குல்சா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

மைதா – 2 கப்

தயிர் – ¼ கப்

பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்

பேக்கிங் சோடா – ¼ டீஸ்பூன்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் – தேவையான அளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கருஞ்சீரகம் அல்லது எள் – விருப்பத்திற்கேற்ப

இதையும் படியுங்கள்:
ஈஸ்ட், அவண் தேவையில்லை… தோசைக்கல்லில் பஞ்சு போன்ற ஆலு குல்ச்சா ரெடி!
பட்டர் குல்சா - How To Make Kulcha

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தயிர், எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றிப் பிசையவும்.

மாவு மென்மையாகவும், கைகளில் அதிகமாக ஒட்டாத பதத்திலும் இருக்க வேண்டும். ஈரத்துணியால் மூடி, சுமார் 1 முதல் 2 மணி நேரம் வைக்கவும்.

பின்னர் மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்தியை விடச் சற்றுத் தடிமனாக வட்டமாகவோ நீள்வட்டமாகவோ தேய்க்கவும். விருப்பப்பட்டால் மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழை, கருஞ்சீரகம் அல்லது எள்ளைத் தூவி மெதுவாக அழுத்தவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி, குல்சாவை அதன் மீது வைக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கத்தையும் வேகவிடவும். இருபுறமும் பொன்னிறப் புள்ளிகள் தோன்றும் வரை மிதமான தீயில் சுடவும்.

இறுதியாக, சூடான குல்சாவின் மேல் வெண்ணெயைத் தாராளமாகத் தடவவும். இதேபோல் மீதமுள்ள மாவிலும் குல்சாக்களைத் தயாரிக்கவும்.

பரிமாறும் முறை

சூடான பட்டர் குல்சாவின் மேல் வெண்ணெய் தடவி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறவும். இதைச் சன்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, தால் மக்கானி போன்ற கிரேவிகளுடன் பரிமாறினால் ஹோட்டல் சுவையை வீட்டிலேயே ருசிக்கலாம்.

குல்சாவின் தயாரிப்பு ரகசியங்கள்

குல்சாவை நீண்ட நேரம் அதிகத் தீயில் சுடக்கூடாது. அப்படிச் செய்தால் அது கெட்டியாகிவிடும்.. மென்மையான குல்சா கிடைக்க மாவை நன்றாகப் பிசைந்து மூடிவைப்பதுடன், சுட்டவுடன் வெண்ணெய் தடவி மூடிவைக்கவும்.

இதையும் படியுங்கள்:
தோசைக்கல்லில் தந்தூர் நாண்: ஹோட்டல் சுவையை மிஞ்சும் சீக்ரெட்!
பட்டர் குல்சா - How To Make Kulcha
logo
Kalki Online
kalkionline.com