

1. கருப்பு உளுந்து பாயாசம்
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து – 1/2 கப்
தேங்காய் பால் – 1 கப் (மூன்று பங்குகளாக பிரித்து வைக்கவும்)
பனை வெல்லம் – 3/4 கப் (தூளாக்கியது)
ஏலக்காய் – 2 (பொடியாக்கவும்)
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – சிறிதளவு
உப்பு – சிட்டிகை அளவு
செய்முறை:
கருப்பு உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து, மென்மையாக வேகவைத்து, சிறிது மசித்து வைத்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டவும்.
வாணலியில் நெய் விட்டு, முந்திரி, திராட்சை பொரித்து எடுக்கவும். அதே வாணலியில் வெல்ல நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் வெந்த கறுப்பு உளுந்தை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். இறுதியாக முதலாம், இரண்டாம் பங்கு தேங்காய்ப் பாலை சேர்த்து சுட வைக்கவும்.
இறக்கும்போது ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை சேர்க்கவும். பின்னர் மூன்றாம் தேங்காய் பாலை சேர்த்து கிளறி பரிமாறவும். சத்தான, சுவையான கறுப்பு உளுந்து பாயசம் ரெடி.
2. கறுப்பு உளுந்து சாதம்
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்தம் பருப்பு - அரை கப்
பச்சரிசி - 2 கப்
தாளிக்க - தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
கடுகு, சீரகம், வரமிளகாய் 2
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காய தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
கருப்பு உளுந்தம் பருப்பையும், அரிசியையும் களைந்து வைக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வர மிளகாய் தாளித்து, நீரை வடித்து விட்டு உளுந்தம் பருப்பை போட்டு கிளறவும். பிறகு களைந்த பச்சரிசியையும் சேர்த்து, உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் வேகவைத்து எடுத்தால், சுவையான, சத்தான கருப்பு உளுந்து சாதம் தயார்.
3. கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
மசாலா தயார் செய்ய:
உடைத்த கறுப்பு உளுந்து – அரை கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன்
சோம்பு, மிளகுத்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கறுப்பு உளுந்தை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து, வேகவைத்து, நீரை வடித்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தனியாத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றைத் தாளித்து, உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி வெந்த கறுப்பு உளுந்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். மசாலா ரெடி.
இரண்டு கப் நீருடன் எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டி தட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும்.
அந்த மாவில் விருப்பமான வடிவத்தில் சொப்பு செய்து, உளுந்து மசாலா பூரணத்தை உள்ளே வைத்து மூடி,10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அசத்தல் சுவையில் கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை ரெடி.
4. கறுப்பு உளுந்து லட்டு
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து – 1 கப்
நெய் – 1/4 கப்
வெல்லம் – 3/4 கப் (தூளாக்கியது)
ஏலக்காய் – 2 (பொடியாக்கவும்)
முந்திரி – 6 (நறுக்கி, வறுத்தது)
திராட்சை – சில
செய்முறை: கருப்பு உளுந்தை வாணலியில் மணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த உளுந்தை ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
வெல்லத்தை சுத்தமாகத் தூளாக்கி, ஏலக்காய்பொடி, உளுந்து மாவுடன் கலக்கவும். சிறிது நெய் சூடாக்கி முந்திரியை வறுத்து கலக்கவும்.
தேவையான அளவு சூடான நெய் சேர்த்து, கை கொண்டு லட்டுகளாக உருண்டை பிடிக்கவும். சுவையான சத்தான கறுப்பு உளுந்து லட்டு தயார்.
இந்த நான்கு பாரம்பரிய ரெசிபிகள் மூலம் கறுப்பு உளுந்தின் முழுமையான ஊட்டச்சத்தையும் குடும்பத்தினருக்குச் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் செய்து தர முடியும்.