எலுமிச்சை சேவை ஒட்டுதா, கசக்குதா? ஹோட்டல் சுவைக்கும் மணத்துக்கும் டிப்ஸ்!

தாளிப்பு ஆறிய பின் சாறு சேர்ப்பது முதல் சேவை உதிரியாக வருவதற்கான எளிய வழிமுறைகள் வரை முழு விவரம்.
எலுமிச்சை சேவை
எலுமிச்சை சேவைGemini image
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

காலையில் அவசரமான நேரங்களில் எளிதாகச் செய்யக்கூடிய உணவு வகைகளில் சேவைக்கும் தனி இடம் உண்டு. தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை எனப் பல வகைகளில் இதைச் செய்வோம். குறிப்பாக, எலுமிச்சை சேவை என்றாலே அதன் அழகான மஞ்சள் நிறமும், எலுமிச்சையின் மணமும் சாப்பிடத் தூண்டும்.

ஆனால், வீட்டில் எலுமிச்சை சேவை செய்யும்போது சிலருக்கு சேவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு கட்டியாகிவிடும். சில நேரங்களில் எலுமிச்சைச் சாறு கசப்புச் சுவையுடனும் இருக்கும்.

ஹோட்டலில் கிடைப்பது போல உதிரி உதிரியாகவும், நல்ல மணத்துடனும் எலுமிச்சை சேவை செய்யக் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சேவை உதிரியாக வர வேகவைக்கும் முறை!

அரிசி சேவையை வேகவைக்கும் போது தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு உப்பும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயும் சேர்க்க வேண்டும். பின்னர் சேவையைப் போட்டு மூன்று நிமிடங்கள் வரை வேக வைத்தால் போதும். சேவை மென்மையாக வெந்து, தனித்தனியாகப் பிரியும் பதத்திலும் இருக்கும்.

சேவை வெந்ததும் உடனடியாகக் குளிர்ந்த நீரில் போட்டு, பிறகு வடிகட்டி ஒரு தட்டில் பரப்பி நன்றாக ஆறவிட வேண்டும்.

சேவை ஏற்கெனவே வேகவைத்ததாக இருந்தால், அதை மீண்டும் அதிக நேரம் வேகவிடக் கூடாது. அப்படிச் செய்தால் குழைந்து ஒட்டிக்கொள்ளும்.

எலுமிச்சை சேவை
எலுமிச்சை சேவைGemini image

எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பக்குவம்!

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, தாளிப்பைச் சற்று ஆறவிட வேண்டும். இறுதியாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்க வேண்டும். இப்படி செய்வதால் எலுமிச்சையின் இயல்பான மணமும் புளிப்புச் சுவையும் மாறாமல் இருக்கும்.

சூடாக இருக்கும்போதே எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறினால் அதன் மணம் மாறிவிடும். அதேபோல், சூடான தாளிப்பைச் சேவையில் ஒரே நேரத்தில் கொட்டிக் கிளறினால் சேவை உடைந்தும் ஒட்டியும் கட்டியாகிவிடும்.

எலுமிச்சை சேவை கசக்காமல் இருக்க 4 முக்கியமான டிப்ஸ்!

1. எலுமிச்சம்பழத்தை நறுக்குவதற்கு முன்பு லேசாக உருட்டிவிட்டுப் பிழிந்தால் சாறு எளிதாகக் கிடைக்கும்.

2. எலுமிச்சையின் விதைகளை நீக்கிவிட்டுச் சாற்றைச் சேர்க்க வேண்டும். விதைகள் நசுங்கினால் கசப்புச் சுவை ஏற்படலாம்.

3. எலுமிச்சைச் சாற்றை எண்ணெயில் நேரடியாக ஊற்றி வறுக்கக் கூடாது. அடுப்பை அணைத்த பிறகு சேர்ப்பதே நல்லது.

4. சேவையை மசித்துக் கிளறாமல், அகலமான கரண்டியால் மெதுவாகக் கிளறிவிட வேண்டும். அப்போதுதான் சேவை உடையாமல் உதிரியாக இருக்கும்.

சுவையான எலுமிச்சை சேவை செய்முறை!

தேவையான பொருட்கள்:

அரிசி சேவை – 2 கப்

எலுமிச்சை – 1 பெரிய பழம்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

காய்ந்த மிளகாய் – 1

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

வேர்க்கடலை – ¼ கப்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
அவியல் குழைந்து நீர்த்துப் போகுதா? கல்யாண வீட்டுப் பதத்தில் வர 6 எளிய டிப்ஸ்!
எலுமிச்சை சேவை

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து அரிசி சேவையைப் போட்டு வேகவிடவும். சேவை மென்மையாக வெந்ததும் உடனடியாகக் குளிர்ந்த நீரில் போட்டு வடிகட்டி, ஒரு அகலமான தட்டில் பரப்பி ஆறவிடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு சேர்த்துப் பொரிய விடவும். பின்னர் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

அதனுடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

இதையும் படியுங்கள்:
உப்புமா வேண்டாம் என்பவர்களும் விரும்பும் கம்பு ரவை உப்புமா, கிச்சடி ரெசிபிகள்!
எலுமிச்சை சேவை

தாளித்த பொருட்கள் ஆறியதும் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கலக்கவும். இப்போது ஏற்கெனவே வேகவைத்து ஆறவைத்துள்ள சேவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மெதுவாகக் கிளறிவிடவும்.

பிறகு மிதமான தீயில் கடாயை வைத்து, சேவை சூடாகும் வரை மெதுவாகக் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

இறுதியாகத் தேங்காய் எண்ணெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சுவையான, மணமான எலுமிச்சை சேவை தயார்!

சுடச்சுட சேவையுடன் பரிமாற சூப்பரான காம்போ!

எலுமிச்சை சேவையுடன் தேங்காய் சட்னி அல்லது வேர்க்கடலைச் சட்னி மற்றும் உருளைக்கிழங்கு கிரிஸ்பி வறுவல் சேர்த்துப் பரிமாறினால் சூப்பரான காம்போவாக இருக்கும்.

அவசர காலை நேரத்திலும் சேவை குழைந்து ஒட்டாமல் உதிரியாகவும், எலுமிச்சைச் சாறு கசக்காமல் இயற்கை மணத்துடனும் சமைக்கும் நம்பிக்கை கிடைக்கும்.