

பெருங்குறிஞ்சான் தடித்த வலிமையான கொடியை உடையது. பெரிய மரங்களின் மீது ஏறி படரும். இலைகள் பெரியதாக இருக்கும். இதன் காய்கள் இரண்டு இரண்டாக காய்ப்பதுடன் இதன் அடிப்பகுதி மற்றும் நுனிப்பகுதி சிறுத்தும், நடுப்பகுதி பருத்தும் காணப்படும். காய்கள் எதிர் எதிர் திசையில் இருக்கும். பார்ப்பதற்கு மனிதனின் மீசையை ஒத்திருப்பதால் இதற்கு "மீசைக்காய்" என்ற பெயரும் உண்டு.
பெருங்குறிஞ்சான் பொரியல்:
பெருங்குறிஞ்சான் இலைகள் ஒரு கப் சின்ன வெங்காயம் 10
உப்பு தேவையானது
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் சிறிது
பெருங்குறிஞ்சான் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து மிகவும் பொடிதாக நறுக்கி வைக்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பை நல்லெண்ணையில் தாளித்து கடுகு பொரியும் சமயம் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பும் போட்டு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறும் சமயம் பெருங்குறிஞ்சான் இலைகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து கிளற பொரியல் தயார். பெருங்குறிஞ்சான் இலைகள் சிறிது கசப்புத் தன்மை உடையவை. ஆனால் உடலுக்கு நலம் விளைவிப்பவை.
சர்க்கரைக்கொல்லி என்று அழைக்கப்படும் 'சிறு குறிஞ்சான் இலைகள்' பார்ப்பதற்கு சிறிய வெற்றிலையைப் போல் இருக்கும். இதன் இலைகள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டது. இதனைக் கொண்டு பொரியல், சூப், சட்னி, டீ என வெரைடியாக சமைக்கலாம்.
சிறு குறிஞ்சான் சூப்:
சிறு குறிஞ்சான் இலைகள் 1 கப்
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
பூண்டு 6 பற்கள்
சின்ன வெங்காயம் 10
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு சிறிது
சிறுகுறிஞ்சான் இலைகளை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக பிய்த்துப் போட்டு அது முங்கும் அளவு தண்ணீரை விடவும். அதில் மிளகு, சீரகம், தட்டிய பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கவும். பிரஷர் போனதும் வடிகட்டி அந்த நீரைப்பருக சூப் ருசியாக இருப்பதுடன் அதன் கசப்புத்தன்மை அதிகம் தெரியாது. இந்த சூப் கொழுப்புகளை குறைத்து இதயத்தை காப்பதுடன், சர்க்கரை நோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கும்.
சிறுகுறிஞ்சான் சட்னி:
சிறுகுறிஞ்சான் இலைகள் 1 கப்
மிளகு 1 ஸ்பூன்
வர மிளகாய் 1
சீரகம் 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 4
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் சிறிது
இலைகளை சிறிது தண்ணீர்விட்டு மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வேகவைத்து தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்க சட்னி தயார். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதுபோல் சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
சிறுகுறிஞ்சான் பொடி:
இலைகளை சுத்தம் செய்து நிழலில் காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறையும்.