

புதிய சுவை விரும்புவோருக்காக கறிவேப்பிலை, மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த மசாலாவில் பிரியாணி அரிசி வேக வைத்து, நெய், முந்திரி, வெங்காய தாளிப்புடன் தயாரிக்கும் காரசாரமான கறிவேப்பிலை பிரியாணி ரெசிபி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த உணவு, சைடிஷ் இல்லாமலே சாப்பிடக் கூடியது.
ஒரே வகை பிரியாணியை சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் நாளை வைட்டமின் சி சத்து நிறைந்த காரசாரமான கறிவேப்பிலை பிரியாணியை ட்ரை செய்து பாருங்கள்.
இந்த காரசாரமான கறிவேப்பிலை பிரியாணியை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். மேலும், இது ஹோட்டலில் கொடுப்பது போன்ற அட்டகாசமான சுவையுடனும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த பிரியாணிக்கு சைடிஷ் கூட தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். தேங்காய்ப்பால் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவை கூடும்.
உங்களுக்கு சுவையான காரசாரமான கறிவேப்பிலை பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ.
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
தாளிக்க:
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி - 10
பிரிஞ்சி இலை 2
அன்னாசிப் பூ - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
அரைக்க:
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 4
கசகசா - ½ ஸ்பூன்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு பெரிய கொத்து
பச்சை மிளகாய் - 5
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப் (அரைக்க)
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பல்
செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி,10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் நெய் விட்டு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த கலவையை சேர்த்தபின், ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
உப்பு மற்றும் அரை ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிரஷர் வெளியேறியதும் குக்கரைத் திறந்து, பிரியாணியை மெதுவாகக் கிளறிவிடவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் முந்திரி மற்றும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். சீரகத்தூள், கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
தாளித்த இந்தக் கலவையை பிரியாணியின் மீது ஊற்றி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி மெதுவாகக் கலக்கவும். காரசாரமான இந்த பிரியாணியை தேங்காய்ப்பால் அல்லது தயிர் பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும்.
வீட்டிலுள்ள எளிய பொருட்களைக் கொண்டு பிரியாணி பிரியர்களை அசத்தக்கூடிய இந்த உன்னதமான செய்முறை மூலம், பாரம்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையை அனைவரின் விருப்பமான உணவாக மாற்றலாம்.