தேர்வுப் பயமா? மணிக்கணக்கில் படிக்காமல் நினைவில் நிறுத்த 5 எளிய வழிகள்!

அரையாண்டுத் தேர்வை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் உடனே பின்பற்ற வேண்டிய எளிய உளவியல் மற்றும் படிப்பு முறைகள்.
தேர்வு
தேர்வுGemini image
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

அரையாண்டுத் தேர்வு நெருங்கிவிட்டாலே பெற்றோர்களுக்கு ஒருவிதப் பதற்றம் தொற்றிக் கொள்ளும். தங்கள் பிள்ளைகள் பாடங்களைப் படிக்க வேண்டும், படித்ததை நினைவில் வைத்திருக்க வேண்டும், தேர்வில் மறக்காமல் எழுத வேண்டும் என்ற கவலையில் ஆழ்ந்து விடுவார்கள். இதே அழுத்தம் பிள்ளைகளிடமும் ஏற்படும். அது இயல்பானது.

சில குழந்தைகள் விழுந்து விழுந்து படிக்க மாட்டார்கள். அவர்களுக்கு எதையும் எளிதாக மனப்பாடம்  செய்யும் திறமை இருக்கலாம். சில குழந்தைகள் மணிக்கணக்கில் படித்தாலும் தேர்வு அறைக்குச் சென்றதும் படித்தவைகளை மறந்து தேர்வில் பின்தங்குவார்கள். இதற்குப் படிப்புத் திறன் குறைவு என்று அர்த்தமல்ல. நினைவாற்றலைப் பாதிக்கும் படிக்கும் முறை, திரும்பப் படிக்கும் பழக்கம், தூக்கம், மனநிலை எனப் பல காரணங்கள் உண்டு.

இதற்கு என்ன செய்யலாம்? மணிக்கணக்கில் அவர்களை மனப்பாடம் செய்ய சொல்லி பாடாய் படுத்துவதைவிடப் படித்ததைப் புரிந்துகொண்டு நினைவிலிருந்து மீட்டெடுக்கும் பயிற்சியைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

படித்த பாடங்கள் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கவும், தேர்வு நேரத்தில் பதற்றமின்றி எழுதவும் உதவும் 5 எளிய வழிகளை இங்கு பார்க்கலாம்.

1. ஒரு பாடத்தைப் படித்தவுடன் மீண்டும் மீண்டும் புத்தகத்தைப் பார்ப்பதைவிட, புத்தகத்தை மூடிவிட்டு அதில் படித்த விஷயங்களை நினைவுபடுத்திப் பார்க்கச் சொல்லுங்கள்.

உதாரணமாக, அறிவியல் பாடத்தில் மனித இதயத்தைப் பற்றி அன்று படித்திருந்தால், இதயம் எங்கு அமைந்துள்ளது? அதன் முக்கியப் பணி என்ன? இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன? இரத்த ஓட்டத்திற்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பு போன்ற பல கேள்விகளளைக் கேளுங்கள்.

பிள்ளை புத்தகத்தைப் பார்க்காமல் பதில் சொல்ல முயற்சி செய்வதுதான் முதல் வழி. தெரியாத பகுதிகளை மட்டும் மீண்டும் படிக்கச் சொல்லுங்கள்.

இம்முறை 'Active Recall' என்று அழைக்கப்படுகிறது. நினைவிலிருந்து தகவல்களை மீட்டெடுக்கும் பயிற்சி கிடைப்பதால் கற்றுக்கொண்ட விஷயங்களை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்க இது உதவுகிறது.

2. ஒரே நாளில் படிக்காமல் இடைவெளிவிட்டுப் படிக்கச் சொல்வது சிறந்த வழி. தேர்வுக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் விழித்திருந்து படிப்பது நல்ல பழக்கமல்ல. ஒரு பாடத்தை ஒரே நாளில் பலமுறை படிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் படிக்க வேண்டும்.

உதாரணமாக முதல் நாள் கற்றுக் கொண்ட பாடத்தைப் புரிந்துகொண்டு படித்தல். அடுத்த நாள் படித்ததை நினைவுபடுத்திப் பார்த்தல், சிறு இடைவெளி விட்டு முக்கியக் கேள்விகளைப் பயிற்சி செய்தல். இறுதியாக மீண்டும் ஒருமுறை அப்பாடத்தை ரிவர்ஸ் செய்வது.

இப்படி இடைவெளிவிட்டுப் படிப்பதற்கு 'Spaced Repetition' என்று பெயர்.

ஒரே நேரத்தில் அதிகத் தகவல்களை மனப்பாடம் செய்வதைவிட, இடைவெளிவிட்டு மீண்டும் நினைவுபடுத்துவது நீண்டகால நினைவாற்றலுக்கு உதவுகிறது.

3. படித்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது அடுத்த வழிமுறை.

ஒரு குழந்தை தான் படித்த பாடத்தை மற்றவர்களுக்கு எளிமையாக விளக்கிச் சொல்லும்போது, அந்தப் பாடத்தை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறது என்பது தெரிந்துவிடும். இதற்கு பெற்றோர்கள் உதவலாம். உடன் படிக்கும் தோழமைகளுடன் குரூப் ஸ்டடி படிக்கலாம்.

தேர்வு
தேர்வுGemini image

உதாரணமாக வரலாற்றுப் பாடத்தை ஒரு கதையைப் போலச் சொல்லச் சொல்லலாம். அறிவியல் பாடத்தில் ஒரு செயல்முறையை விளக்கலாம். கணிதத்தில் ஒரு கணக்கை எப்படிப் போடுவது என்று படிப்படியாக எழுதிக் காட்டலாம். வீட்டில் பெற்றோர் மாணவராகவும், குழந்தை ஆசிரியராகவும் மாறி விளையாட்டாக இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

படித்ததைத் தனது சொந்த வார்த்தைகளில் விளக்குவது புரிதலை ஆழப்படுத்தவும், நினைவில் உள்ள இடைவெளிகளைக் கண்டறியவும் இந்த பயிற்சி உதவும்.

4. பெரிய பாராக்களாக இருக்கும் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்ய முயற்சிப்பதைவிட, அவற்றைச் சிறு சிறு குறிப்புகளாக மாற்றச் சொல்லுங்கள்.

உதாரணமாக வரலாற்றுப் பாடங்களுக்கு காலவரிசைப் பட்டியல். அறிவியல் பாடங்களுக்கு வரைபடங்கள்.

புவியியல் பாடங்களுக்கு வரைபடக் குறிப்புகள். நீண்ட விடைகளுக்கு முக்கியச் சொற்கள். செயல்முறைகளுக்கு அம்புக்குறிகளுடன் கூடிய விளக்கப்படங்கள் போன்றவைகளுடன் வண்ணப் பேனாக்களைப் பயன்படுத்தி முக்கியமான தலைப்புகள், தேதிகள், சூத்திரங்கள் போன்றவற்றைத் தனித்துக் குறிக்கலாம். 

இதனால் தகவல்களை ஒழுங்குபடுத்திப் பார்க்கவும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எளிதில் புரிந்துகொள்ளவும் அதை நினைவில் வைக்கவும் உதவும். குறிப்பாக சிறு சிறு முக்கிய குறிப்புகள், வண்ணப் பேனாக்கள் பயன்பாடு அவர்களை கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
அண்ணன் - தம்பி இடையே சண்டையா? 'விட்டுக்கொடு' எனச் சொல்லாதீர்கள்... இதோ சிறந்த தீர்வு!
தேர்வு

5. இது மிகவும் முக்கியமானது. ஆம் பிள்ளைகளுக்கு போதுமான தூக்கமும் சிறிய இடைவேளைகளும் மிக மிக அவசியம் தேர்வு நெருங்கிவிட்டது என்பதற்காகக் குழந்தைகளை நீண்ட நேரம் தொடர்ந்து படிக்க வைப்பது சரியான அணுகுமுறை அல்ல.

மூளைக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதும் நினைவாற்றலுக்கு முக்கியம் என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும். தொடர்ந்து படிக்க வைப்பதால் அவர்களுக்கு மேலும் அழுத்தம் தான் தரும். அதனால் எந்தப் பலனும் இல்லை.

இதோ தேர்வு முன்னிட்டு பிள்ளைகள் மற்றும் பெற்றோர் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் இங்கு.

1. 25 முதல் 30 நிமிடங்கள் படித்துவிட்டு 5 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம்.

2. இரவு நேரத்தில் போதுமான தூக்கம் அவசியம் தேவை.

3. படிக்கும் இடத்தில் கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்.

4. சத்தான உணவுகளையும் போதுமான தண்ணீரையும் கவனித்துக் கொடுக்க வேண்டும்.

5. தினமும் சிறிது நேரம் விளையாடவும் உடற்பயிற்சி செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தை தவறு செய்யும்போது கத்துகிறீர்களா? தண்டனைக்குப் பதில் இதைச் செய்யுங்கள்!
தேர்வு

6. குறிப்பாகப் பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற தூக்கம் அவசியம். 6–12 வயதினருக்கு 9–12 மணி நேரமும், 13–18 வயதினருக்கு 8–10 மணி நேரமும் தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில் தூக்கத்தின்போது மூளை பகலில் கற்றுக்கொண்ட தகவல்களை ஒருங்கிணைத்து நினைவில் நிலைநிறுத்த உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் இவைகள்.

1. மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

2. குறைந்த மதிப்பெண் பெற்றால் திட்டுவதற்குப் பதிலாகக் காரணத்தைக் கண்டறியுங்கள்.

3. படிக்கும் நேரத்தைவிடப் படிக்கும் முறைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

4. சிறிய முன்னேற்றத்தைக்கூடப் பாராட்டுங்கள்.

5. தேர்வு என்பது குழந்தையின் திறமையை முழுமையாக அளவிடும் அளவுகோல் அல்ல என்பதைப் புரிய வையுங்கள்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காகக் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட, அவர்கள் படித்ததைப் புரிந்துகொண்டு நினைவில் வைத்திருக்கும் திறனை வளர்த்து அவர்களை அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள வைப்பது பெற்றோரின் முக்கியப் பணி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளை மணிக்கணக்கில் படிக்கச் சொல்லி வதைக்காமல், அறிவியல் பூர்வமான முறைகளைக் கொண்டு அவர்களின் நினைவாற்றலை அதிகரித்து, அரையாண்டுத் தேர்வை எதிர்கொள்ள வைப்பதற்கான தெளிவு.