
“வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா…”
வாழ்க்கை முழுவதும் பலவிதமான கேள்விகளை நாம் எதிர்கொள்கிறோம். எல்லாக் கேள்விகளுக்கும் நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை. சில கேள்விகள் பதில் சொல்லும் ஆர்வத்தைத் தரும். சில கேள்விகள் நம்மை தர்மசங்கடத்தில் தள்ளிவிடும்.
கேள்வி கேட்பது மிகவும் சுலபம். ஆனால் எந்த இடத்தில், யாரிடம், என்ன கேட்கிறோம் என்பதை யோசிக்காமலேயே சிலர் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளை எதிர்கொள்பவர்களின் மனநிலையைப் பற்றிய கவலை யாருக்கும் இருப்பதில்லை.
உறவுகளோ நட்புகளோ, நிறைய பேர் கூடியிருக்கும் பொது இடங்களில் அல்லது விசேஷ வீடுகளில், கேள்விகளைத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் ஏராளம். அவர்களைப் பொறுத்தவரை புத்திசாலித்தனமாகப் பேசுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டும். தன்னை அறிவாளி, எல்லாம் தெரிந்தவர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்வதற்காகவே எழுப்பப்படும் கேள்விகள் இவை.
சரி, என்ன கேள்விகள், ஏன் தவிர்க்க வேண்டும் எனப் பட்டியலிடலாம் வாருங்கள்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் தவிர்க்க வேண்டிய கேள்விகள்:
உனக்கு அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமா?
ரைம்ஸ் தெரியுமா? ஒன் டூ த்ரீ எதுவரைக்கும் தெரியும்?
பாட்டு பாடுவியா?
நான் யாருன்னு தெரியுமா? அங்கிள்/ஆன்ட்டி பெயர் என்னன்னு கரெக்டா சொல்லு பார்ப்போம்.
இதுபோன்ற கேள்விகள் குழந்தைகள் மனதில் பயத்தையும் குழப்பத்தையும் வளர்த்துவிடுவதோடு, கேள்வி கேட்பவர்கள் மேல் வெறுப்பும் ஏற்படலாம்.
ஐந்து வயதுக்கு மேல் பதினைந்து வயதுவரை உள்ள சிறுவர்/ சிறுமிகளிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கண்டிப்பாகத் தவிருங்கள் :
எத்தனாவது ரேங்க் வாங்கறே? எவ்வளவு மார்க் வாங்கறே?
இங்கிலீஷ்ல பேசுவியா?
பெருசானதும் என்னவாகப் போறே ?
எக்ஸ்ட்ரா கரிக்குலர்ல ப்ரைஸ் வாங்கியிருக்கியா?
எல்லாக் குழந்தைகளும் முதல் ரேங்க் வாங்க முடியுமா? ஏற்கனவே மதிப்பெண் குறைவாக வாங்குவதற்காக வகுப்பிலும் வீட்டிலும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம் அதே கேள்வியைக் கேட்டு சங்கடப்படுத்த வேண்டாமே. இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும். உறவுகளிடம் நெருங்கவே தயங்குவார்கள்.
15 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞன்/ இளைஞியிடம் கேட்கக் கூடாத கேள்விகள் :
10th ல/ +2 ல எவ்வளவு மார்க்?
மேத்ஸ் வராதா? சென்டம் வாங்கலையா?
டியூஷன்/ கோச்சிங் போகலையா?
இந்த ஸ்கூல்/ காலேஜ்ல ஏன் சேரல?
ஏன் இன்ஜினியரிங் படிக்கல?
வெறும் டிகிரி படிச்சு என்ன பண்ணப் போறே?
ஏன் மீசையே வளரல?
வேலை கிடைக்கலையா? சும்மாவா இருக்கே?
கல்யாணத்துக்கு வரன் பார்க்கலாமா?
எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே?
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களின் மதிப்பெண்களை அவர்களாக சொல்லாதவரை நீங்களாகத் துருவித் துருவிக் கேட்காதீர்கள். இந்தக் கேள்விகளை எதிர் கொள்வதே அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தரும்.
புதிதாகத் திருமணமானவர்களிடம் கண்டிப்பாக இந்தக் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும் -
எப்போ நல்ல செய்தி சொல்லப் போறே?
ஏதாவது பிரச்சனையா? எதுக்கும் டாக்டர்கிட்ட கேளு.
இப்படி ஆரம்பித்து, அதன் பிறகும் தொடரும் கேள்விகள்.
சொந்த வீடு வாங்கலையா?
குழந்தை புஷ்டியாவே இல்ல?
ஏன் இந்த ஸ்கூல்ல சேர்க்கல?
இப்படி, சிறுவயதில் அவர்கள் எதிர்கொண்ட அதே கேள்விகளை, பெற்றோராக ஆன பிறகும் எதிர்கொள்ள வேண்டிய சூழல்தான் தொடர்கிறது.
கேள்வி கேட்கும் யாருமே எந்தப் பிரச்சனையும் இல்லாமல், சீரான வாழ்க்கை வாழ்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இருந்தாலும், மற்றவர்கள் முன்னிலையில், அனைவரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது தன்னைப் பற்றி உயர்வான ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவோதான் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இதுபோன்ற கேள்விகளை இயல்பாகக் கடந்து செல்வதுதான் நல்லது. மனதை வருத்திக் கொள்வதோ அல்லது கேள்வி கேட்பவர்களிடம் விவாதம் செய்வதோ கால விரயம்.
இனிமேல் இதுபோன்ற கேள்விகள் கேட்பதை நீங்கள் தவிர்த்துவிடுங்கள். உங்களிடம் கேட்கப்பட்டால் அதை நினைத்துக் கவலைப்படாதீர்கள்.