

நம்மில் பெரும்பாலார் சிறுவர்களாகப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சமயத்தில், மதிய உணவு சாப்பிட்டு விட்டு வந்த பிறகு, ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் கண்கள் சுழன்று அரைத் தூக்க நிலையில் காணப்படுவார்கள்.
இப்படி அரைத்தூக்கத்தில் இருக்கும் மாணவர்களை எழுப்ப, ஆசிரியர் கையிலிருக்கும் சாக் பீஸ் துண்டுகளைக் குறித் தப்பாமல் தூங்கும் மாணவர்கள் மீது அடிப்பார். அது அந்த மாணவனிடம் போய் விழும். உடனே தூங்கிக்கொண்டிருந்தவன் சுதாகரிப்பான்.
ஆசிரியர் அவனிடம்” நீ சென்று முகத்தைக் கழுவி கொண்டு வா வகுப்பில் தூங்காதே என்று கடுமையாக எச்சரித்து அவனை அனுப்பி வைப்பார்.
இந்த நிலை மாணவர்களுக்கு மட்டுமல்ல, கட்டிட வேலை செய்பவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் கூட மதிய உணவு உண்ட பிறகுதான் வேலை செய்யும் இடத்திலேயே அவர்கள் கண்ணயவார்கள்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது நாடறிந்த பழமொழி. ஏன் இப்படி ஒருவர் மதிய உணவு உண்ட பிறகு உறக்கம் கொள்கிறார் என்ற கேள்வி என் அம்மாவிடம் கேட்கும்போது சரியான பதில் இல்லை. ஏனென்றால் என் அப்பாவும் சரி, அம்மாவும் சரி சாப்பிட்ட பின்பு அலுப்பு தீர மதியம் சிறிது நேரம் கண் அயர்வார்கள்.
ஏதோ பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் பேசாமல் போ என்று என்னை விரட்டி அடித்தார்.
பெரியவர்கள் சில பேரிடம் நான் இதைப் பற்றிச் சந்தேகம் கேட்டபோது அதற்கு யாரும் சரியான விளக்கம் தரவில்லை.
ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட சந்தேகத்துக்கு விடை, நான் கல்லூரி சேர்ந்த பிறகு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பேராசிரியர் இதற்கு வகுப்பறையில் விளக்கம் அளித்தபோது தெரியவந்தது.
“நமது உடலில் சுவாசிக்கப்படும் ஆக்சிசனையும், உணவு அருந்திய பிறகு அதிலிருந்து கிடைக்கப்பெறும் பல சத்து பொருள்களையும், ரத்தம் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்கிறது.
எந்தெந்த இடத்திற்கு எத்துணை அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படும் என்பது அந்தந்த பாகங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துப் பொருள்களைச் சார்ந்தே அமைந்துள்ளது.
மனித உடலில் உள்ள 5 லிட்டர் ரத்தம்தான் இந்த உடலை பாதுகாத்து வருகிறது.
இருதயம் சுருங்கி விரிவதால் உடலில் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும் இந்த 5 லிட்டர் ரத்தத்தில், ஒன்றின் கீழ் மூன்று பாகம் கல்லீரலுக்கும், ஒன்றின் கீழ் நான்கு பாகம் சிறுநீரகத்துக்கும், ஒன்றின் கீழ் ஆறு பாகம் மூளை பகுதிக்கும் தேவைப்படுகிறது.
மிச்சம் உள்ள ரத்தம் மற்றைய பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் இவ்வாறு தேவைப்படும் ரத்தம் அவரவர் மேற்கொள்ளும் செயலை பொறுத்து மாறுபாடு அடையும்.
நான் உணவு உண்ட பிறகு அதைச் செரிமானம் செய்வதற்கும், உண்ட உணவில் உள்ள சத்துப் பொருள்களைப் பிரித்தெடுப்பதற்கும் அதிக அளவில் ரத்தம் குடலில் சுற்றுப்புற தசைகளுக்கு அனுப்பப் படுகின்றது. இதனால் மூளை பகுதிக்குச் செல்லும் ரத்தத்தின் அளவில் குறைவு ஏற்படுகிறது.
இருதயத்துக்கும் கல்லீரலுக்கும் தேவைப்படும் ரத்தத்தின் அளவு குறைக்கப்படுவதில்லை. ஆனால் மூளை பகுதிக்குச் செல்லும் ரத்தம் குறைவுபடுவதால் ஒருவித அலுப்பு ஏற்பட்டுத் தூக்கம்கொள்ள அதுவே தூண்டுதலாய் அமைகின்றது” என்று விளக்கமான பதில் கிடைத்த பின் நான் நிம்மதியானேன்.
என்ன வாசகர்களே, உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று அலுவலகத்தில் பள்ளிக்கூடங்களில், கல்லூரியில் தூங்காதீர்கள்.
எப்போதும் சிறு சுறுப்பாக இருங்கள். மதியம் தூக்கம் உங்களை அண்டாது.