புதிய வாழ்க்கை பெற கடந்த கால கவலைகளை விடுவது எப்படி?

புத்தாண்டு உறுதிமொழிகள் ஏன் தோற்கின்றன? நாளைய கவலையைத் தவிர்த்து இன்றைய நாளை வெல்வது எப்படி?
புதிய வாழ்க்கை - New Life,
புதிய வாழ்க்கை - New Life,Image credit: Gemini
ச. நாகராஜன்

ச.நாகராஜன், மங்கையர் மலர், தினமணி, ஆனந்த விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தி இந்து உள்ளிட்ட 46 இதழ்களில் 6000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். புஸ்தகா, நிலாச்சாரல் உள்ளிட்ட பதிப்பகங்கள் வழியாக இதுவரை 219 நூல்களை வெளியிட்டுள்ளார்.

Updated on: 

புது வருடம் பிறந்தவுடன் அன்று நாம் எடுக்கும் உறுதிமொழிகள் ஏராளம். உற்சாகத்துடன் நமது உறுதிமொழியைத் தொடர்ந்து பாதுகாக்கிறோமா என்றால் அதுதான் இல்லை. அடுத்த மாதம் சுரத்து குறைந்து விடுகிறது.

சென்றதை நினைத்து புலம்பாதே; புதிய வாழ்க்கை வரப்போவதை நினைத்து மகிழாதே; இன்றைய வாழ்க்கையை நன்றாக நடத்து என்பதே வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்கான உத்தி.

இதையே அனைத்து மகான்களும், பெரும் கவிஞர்களும் கூறியுள்ளனர்.

மகாகவி பாரதியார் கூறுவது இது:

"சென்றது இனி மீளாது; மூடரே, நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டாம்;

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!

தீமையெலாம் அழிந்து போம் திரும்பி வாரா"

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று அன்றாடம் நினைத்து வாழ்வதையே புத்தரும் அனைவருக்கும் உபதேசித்தார்.

அவரது உபதேசத்தை அனைவரும் மனப்பாடம் செய்து தினமும் ஓதிவருவது இன்றும் நடக்கிறது.

பௌத்தர்கள் ஒரு முக்கிய உபதேசத்தைத் தினமும் இன்றும் ஓதி வருகின்றனர். அதன் பெயர் “பத்தேகராத்த கதா” என்பதாகும்.

“அதிதம் நான்வாகமேய நப்பதிகனகே அனாகதம்”

“ஒருவர் சென்றதை நினைத்து வருந்தக் கூடாது; இனி வரப்போவதை நினைத்தும் கவலைப்படக் கூடாது. கடந்த காலம் நம்மை விட்டுக் கடந்து விட்டது. எதிர்காலம் இன்னும் வரவில்லை” – இதுவே புத்தரின் உபதேசம்.

பத்தா என்றால் புனிதமானது என்று பொருள். ஏகராத்த என்றால் ஒரு இரவு என்று அர்த்தம்.

பொதுவாக உலகில் நான் மூன்று தினங்கள் இங்கு இருக்கமாட்டேன்; வெளியூருக்குச் செல்கிறேன் என்று நாட்களைக் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் பாலியில் நாட்களை எண்ணும்போது காலத்தை அளக்க இரவைக் குறிப்பிடுவது வழக்கம்.

இங்கு ஏகராத்தா என்று சொல்வதானது ஒரு முழு நாளைக் குறிக்கும்.

பத்தேகராத்தா என்றால் ஒரு புனிதமான இரவு அதாவது ஒரு புனிதமான தினம் என்பதாகும்.

அதாவது, ‘இந்த நாளை புனிதமாகக் கழித்து விடு; கடந்த காலத்தையோ எதிர்காலத்தையே எண்ணாதே’ என்பதே புத்தரின் போதனை.

இதை MINDFULNESS என்று இப்போது சொல்கிறோம்.

புதிய வாழ்க்கை - New Life,
புதிய வாழ்க்கை - New Life,Image credit: Gemini

இன்று என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஒரு பொக்கிஷம். ஒரு கட்டுரை எழுத விரும்புகிறீர்களா? ஒரு பாராவை இன்றே எழுதவேண்டும். இதை முடித்து விட்டால் இது அன்றாடப் பழக்கமாகிவிடும்.

ஒரு தடவை சரியாகச் செய்தால் அதுவே திரும்பித் திரும்பி செய்யப்படும்.

செனேகாவும் இதையே சொன்னார்:

"ஒவ்வொரு இருபத்தி நான்கு மணி நேரமும் ஒரு தனியான வாழ்க்கை” என்று!

ஒவ்வொரு காலையும் ஒரு புதிய ஆரம்பம். அன்றாட வேலைகளை சரியாக நிர்ணயித்து குறிக்கோளை நோக்கி நடை போட்டால் முடியாதது ஒன்றுமே இல்லை.

காலையில் விழிக்கும்போது இன்னொரு நாளை ஆரம்பிக்கப்போகிறோம் என்று நினைக்காமல் இன்னொரு புதிய வாழ்வை ஆரம்பிக்கப்போகிறோம்

என்று நினைத்தால் வாழ்வின் போக்கே மாறிவிடும்.

பிரபல எழுத்தாளரான ஸ்டூவர்ட் மக் ராபர்ட் கூறுகிறார்: “வாழ்க்கையின் ரகசியம் என்னவென்றால் இன்றைய வாழ்வைச் சரியாகக் கொண்டு செல்வதுதான். ஒவ்வொருவரும் இன்றைய தினத்தைச் சரியாக ஆக்கிக் கொள்ள முடியும். இதை ஒரே ஒரு தடவை செய்தால் போதும், நீங்கள் இதை திருப்பித் திருப்பிச் செய்ய முடியும்.”

இதையும் படியுங்கள்:
தவறுகளை வாய்ப்புகளாக மாற்றும் கலை: மேதைகளின் பொன்மொழி ரகசியங்கள்!
புதிய வாழ்க்கை - New Life,

குறிக்கோள் பெரிது. செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்றாலும் கூட ஒரு சிறிய அடியை சரியாக எடுத்து வைத்தாலே போதும். திருப்பித் திருப்பி சரியான அடிகளை எடுத்து தூரத்தை எளிதில் கடக்க முடியும்.

இதை புத்தபிரான் தன் சீடர்களுக்குச் சொன்னார்; அதை அவர்கள் தினமும் ஓதி அதன்படி நடந்து வருகின்றனர்.

இதையேதான் பாரதியாரும் வற்புறுத்தினார்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல; அவை மந்திரச் சொற்கள்.

வாழ்க்கையை வெற்றி என்னும் பாதையில் வீறு நடை போட்டுச் செல்ல வழி வகுக்கும் வார்த்தைகள்!

ஆகவே இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதை திண்ணமுற இசைத்துத் தின்று விளையாடி இன்புற்று வாழ்வோம்!

இதையும் படியுங்கள்:
தட்டு நிறைய வீணாகும் உணவும், பசியால் வாடும் கோடிகளும்!
புதிய வாழ்க்கை - New Life,