

பேருந்து பயணத்தில் நடத்துனர் கொடுக்க வேண்டிய மீதி சில்லறைக்காக முழு பயணத்தையும் ரசிக்க மறந்துவிடுகிறோம். அப்படித்தான் நம்முடைய வாழ்க்கையிலும் சில சில்லறை பிரச்சனைகளுக்காக வாழ்க்கையை ரசிக்க மறந்து தொலைத்து விடுகிறோம்.
உண்மையில் வாழ்க்கையில் சில்லறை பிரச்னைகள் என்பது கடந்து போகும் மேகங்கள் போன்றது. அதற்காக நாம் அழகான வாழ்க்கையை வாழவும், ரசிக்கவும் மறக்ககூடாது. இன்று நம்மை கவலைப்பட வைக்கும் ஒரு விஷயம் இன்னும் சில வருடங்கள் கழித்து நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றும். எனவே இப்போதே அதனை மறந்து நிகழ்கால சந்தோஷத்தில் மனதை செலுத்துவது நல்லது.
சிறுசிறு பிரச்னைகளுக்காக வாழ்க்கையை ரசிக்காமல் விடுவது ஒரு சிறிய முள் குத்தியதற்காக ஒட்டுமொத்தப் பயணத்தையுமே ரத்து செய்வதற்கு சமமாகும். வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே சீராக இருக்காது. இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அதற்காக பிரச்னைகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அதனைப் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளாகப் பார்க்கலாம்.
அத்துடன் அவற்றில் மட்டுமே கவனம் செலுத்தாமல், நம்மைச் சுற்றி இருக்கும் நல்ல விஷயங்களையும் கவனிக்கத் தொடங்கலாம். 'கொசுவுக்கு பயந்து கோட்டையை எரிக்கலாமா' என்று கிராமப்புறங்களில் ஒரு சொலவடையை சொல்வது வழக்கம். சின்னக் கொசுக்களின் தொல்லைக்காக பயந்து கோட்டையை அழித்துவிட முடியுமா என்ன? அது போல்தான் வாழ்க்கையில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளையும் கண்டு பயந்து ஒடுங்கிப் போய் விடக்கூடாது.
கடந்த காலத்தைப் பற்றிய கவலையோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ இல்லாமல் இந்த நொடியை முழுமையாக அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நிமிடங்கள் போனால் திரும்பி வராது என்ற எண்ணம் முதலில் நமக்கு வேண்டும். நம்மிடம் இல்லாதவற்றை நினைத்து வருந்துவதை விட நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்காக (நல்ல குடும்பம், நண்பர்கள், ஆரோக்கியம்) நன்றி செலுத்தலாம். வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது ஒரு பகுதிதான். அதுவே வாழ்க்கையாகாது.
எனவே எதையும் லேசாக எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும். நம்மால் மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு நம் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
அத்துடன் சிறு சிறு விஷயங்களில் இருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் கற்றுக்கொண்டால் எல்லா நாளுமே நமக்கானது தான்.
சில்லறை பிரச்னைகளுக்காக வாழ்க்கையை ரசிக்க மறப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் மிகப்பெரிய அநீதியாகும். வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டுமே நமக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு. அதில் அன்றாட பிரச்னைகள் பற்றியே சிந்தித்து நேரத்தை வீணடிக்காமல் கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழப் பழக வேண்டும்.
பிரச்னைகள் என்பவை கடந்து போகும் மேகங்கள் போன்றது. அவற்றை நினைத்து ஒட்டுமொத்த வானத்தையும் ரசிக்காமல் இருப்பது புத்திசாலித்தனமான காரியம் அல்ல. வாழ்வில் தோன்றும் சின்னச் சின்ன பிரச்னைகளைக் கண்டு நாம் சோர்ந்து போனால் உண்மையான மகிழ்ச்சியைத் தொலைத்து விடுவோம். வாழ்க்கையை எப்போதும் ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் பிரச்னைகள் என்பவை நிரந்தரமற்றவை. அவற்றை எதிர்கொள்ளும் மன வலிமையே நாம் வாழ்க்கையை எவ்வளவு தூரம் ரசிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
காலையில் குடிக்கும் ஒரு கப் காபி, பறவைகளின் ஒலி, மாலை நேரத்து மழை, மனதுக்குப் பிடித்த இதமான பாடல்கள், குழந்தையின் சிரிப்பு என சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கும் பேரானந்தத்தைக் கூட கொண்டாடலாம். இல்லாததை நினைத்து ஏங்குவதை விட இருப்பதற்கு நன்றி சொல்லலாம். பிரச்னைகள் வாழ்க்கையின் ஒரு பகுதி தானே தவிர அதுவே வாழ்க்கையாகாது. எனவே சவால்களைக் கடந்து வாழ்க்கையை கொண்டாடுங்கள்! முட்களுக்கு நடுவில் மலரும் ரோஜாவை ரசிப்பதுதான் வாழ்க்கை.
மாற்ற முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவதை விடுத்து, நம் கையில் உள்ள சிறிய மகிழ்ச்சிகளைக் கண்டறிந்து ஒவ்வொரு நாளையும் நிம்மதியாக எதிர்கொள்ளும் அணுகுமுறை வாசகருக்குக் கிடைக்கும்.