

மனிதனுக்கு எது போதும் என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா? கிடைத்ததைவிடக் கிடைக்காததையே அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கும் மனம், எத்தனை கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றுதான் கேட்கிறது. ஒருவேளை மனித வாழ்க்கையே இந்தத் தேடலில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.
சிறுவயதில் ஒரு பொம்மை கிடைத்தால் போதும் மனம் என்று நினைக்கிறோமா?. அடுத்த நாளே இன்னொரு பொம்மை வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தால் போதும் என்கிறோம். கல்லூரியில் நல்ல படிப்பு வேண்டும். படித்து முடித்ததும் நல்ல வேலை வேண்டும். வேலை கிடைத்ததும் அதிகச் சம்பளம் வேண்டும். திருமணம், வீடு, வாகனம், வசதிகள் என ஒவ்வொன்றாக வாழ்க்கைக்குள் வந்து சேர்கின்றன. ஆனால், ஆசைகளின் பட்டியலில் மட்டும் கடைசிப் பக்கம் வருவதே இல்லை.
ஒரு காலத்தில் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. இன்று கார் வாங்கியிருக்கிறோம். அன்று சைக்கிள் இல்லாததால் ஏற்பட்ட ஏக்கம், இன்று கார் இருந்தும் வேறொன்று இல்லாததால் தொடர்கிறது. மாறியது வாகனம் மட்டும்தான்; மனத்தின் ஏக்கம் மாறவில்லை.
நமக்குக் கிடைத்திருப்பதைவிட அடுத்தவரிடம் இருப்பதுதான் நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. அடுத்த வீட்டில் புதிய கார் வாங்கினால் நம்முடைய பழைய கார் சிறியதாகிவிடுகிறது. நண்பன் வெளிநாடு சென்றால் நம்முடைய உள்ளூர்ப் பயணம் மதிப்பிழந்து விடுகிறது. உறவினர் பெரிய வீடு கட்டினால் நம்முடைய வீட்டின் மகிழ்ச்சி குறைந்துவிடுகிறது.
உண்மையில் நம்மிடம் எதுவும் குறைந்துவிடவில்லை. அடுத்தவரிடம் ஏதோ ஒன்று அதிகமாகிவிட்டது. அவ்வளவுதான்! இந்த ஒப்பீடுகளுக்குள்தான் நம்முடைய மகிழ்ச்சியை அடுத்தவர்களின் வாழ்க்கையிடம் ஒப்படைத்து விடுகிறோம்.
பணம் சம்பாதிப்பது தவறல்ல. உயர்ந்த நிலையை அடைய நினைப்பதும் தவறல்ல. கனவுகளைக் காண்பதும் அவற்றை நோக்கிப் பயணிப்பதும் அவசியமானவைதான். ஆனால், அந்தப் பயணத்தில் நம்முடைய நிம்மதியைத் தொலைத்துவிடக் கூடாது. இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதித்துவிட்டால் நிம்மதியாக வாழலாம் என்று நினைப்பவர்கள், அந்தக் கொஞ்சம் கிடைத்த பிறகு இன்னும் கொஞ்சம் என்று ஓடத் தொடங்கிவிடுகிறார்கள்.
ஒரு சிறிய நிகழ்வை நினைத்துப் பாருங்கள்.
காலையில் வேலைக்குச் செல்லும்போது குழந்தை அப்பாவுடன் விளையாட ஆசைப்படுகிறது. ஆனால், அப்பாவுக்கு அலுவலக அவசரம். மாலையில் வீட்டுக்கு வந்ததும் குழந்தையுடன் பேச ஆசைப்படுகிறார். ஆனால், கைப்பேசியில் அலுவலகச் செய்திகள் காத்திருக்கின்றன. இப்படியே நாட்கள் நகர்கின்றன.
குழந்தை வளர்ந்த பிறகு அப்பாவுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், குழந்தைக்கு அப்பாவுடன் செலவிடுவதற்கான வயதும் நேரமும் கடந்துவிட்டிருக்கின்றன.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சம்பாதித்துவிட்டு, சில உறவுகளுடன் செலவிட வேண்டிய நேரத்தை மட்டும் இழந்துவிடுகிறோம். அந்த நேரத்தைப் பணம் கொடுத்துக்கூடத் திரும்ப வாங்க முடியாது.
சில நேரங்களில் வாழ்க்கை நமக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை; நம்மிடமிருந்து சிலவற்றைப் பறித்துக்கொண்டு புரிய வைக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகுதான் ஆரோக்கியத்தின் அருமை தெரிகிறது. நெருக்கமான ஒருவர் பிரிந்த பிறகுதான் அவருடன் பேசாமல் கழித்த நாட்களின் வலி புரிகிறது. தனிமையில் அமர்ந்திருக்கும்போதுதான் ஒருகாலத்தில் நம்மைச் சுற்றியிருந்த மனிதர்களின் அருமை நினைவுக்கு வருகிறது.
அப்போதுதான் மனம் முதன்முறையாகச் சொல்கிறது: இதுவே போதும்! ஆனால், அந்தப் போதும் என்ற மனம் இவ்வளவு தாமதமாக வரவேண்டுமா?
போதும் என்ற மனம் என்பது ஆசைகளை முற்றிலும் அழித்துவிடுவது அல்ல. வளர்ச்சியை நிறுத்திக் கொள்வதும் அல்ல. நம்மிடம் இருப்பதன் மதிப்பை உணர்ந்துகொண்டு, இல்லாதவற்றுக்காக வாழ்க்கையை வெறுக்காமல் இருப்பதுதான். மேலும் சம்பாதிக்கலாம்.
ஆனால் அதற்காக உறவுகளை இழக்கவேண்டாம். உயர்ந்த பதவியை அடையலாம்; ஆனால் அதற்காக நம்முடைய மனிதத்தன்மையை இழக்க வேண்டாம். பெரிய வீடு கட்டலாம்; ஆனால் அதற்குள் வாழும் மனிதர்களுடன் பேசுவதற்கான நேரத்தையும் வைத்திருக்க வேண்டும்.
நாம் எப்போதும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தில் இப்போதைய வாழ்க்கையை வாழ மறந்துவிடுகிறோம். நாளை மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்து இன்றைய மகிழ்ச்சியை ஒத்திவைக்கிறோம். ஆனால், நாளை என்பது நமக்காகக் காத்திருக்கும் என்று யார் உறுதி கொடுத்தது?
ஒரு நாள் கண்ணாடி முன் நின்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். எதற்காக இவ்வளவு ஓடுகிறோம்? யாருக்காக இவ்வளவு சம்பாதிக்கிறோம்? யாருடைய பாராட்டுக்காக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறோம்? நாம் விரும்பிய வாழ்க்கையைத்தான் வாழ்கிறோமா அல்லது மற்றவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோமா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும்போதுதான் மனம் கொஞ்சம் அமைதியடையத் தொடங்கும். எல்லாம் கிடைத்த பிறகு போதும் என்ற மனம் வருவதில்லை. கிடைத்திருப்பவற்றின் அருமையை உணரும்போதுதான் அந்த மனம் வருகிறது. இல்லாதவற்றின் பட்டியலைக் குறைத்து, இருப்பவற்றின் மதிப்பை அதிகரிக்கும்போது வாழ்க்கை அழகாகிறது.
ஒருவேளை மனிதனின் மிகப்பெரிய ஏழ்மை அவனிடம் இல்லாத பொருட்கள் அல்ல; அவனிடம் இருப்பவற்றைக் கொண்டு மகிழத் தெரியாத மனம்தான். இன்னும் வேண்டும் என்று கேட்கும் மனதுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இருப்பதே போதும் என்று உணரும் மனதுக்கு எதுவும் குறைவதில்லை.
ஏனென்றால், வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைவது வெற்றி அல்ல. அடைந்தவற்றோடு நிம்மதியாக வாழத் தெரிந்துகொள்வதுதான் உண்மையான வெற்றி. போதும் என்ற மனம், வாழ்க்கையின் இறுதியில் வரவேண்டிய ஞானம் அல்ல; வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அழகாக வாழத் தொடங்கும்போதே வரவேண்டிய தெளிவு.