இன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித உறவுகளின் தன்மை மாறிவருவதே இதற்கு முக்கியக் காரணம். பெரும்பாலான உரையாடல்கள் இணையம் வழியாகவே நடப்பதால், நேரில் சந்தித்து அர்த்தமுள்ள நேரத்தைச் செலவிடும் பழக்கம் குறைந்துவிட்டது.
இந்த மாற்றத்தால் பலரும் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் மனநிலைக்குச் செல்கின்றனர். காயப்படுவது, விமர்சிக்கப்படுவது அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை விட, மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பதே எளிது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்களைச் சமூகம் பெரும்பாலும் Antisocial என்று தவறாக முத்திரை குத்துகிறது. ஆனால், அது எப்போதும் உண்மையல்ல. அவர்கள் மற்றவர்களுடன் பேசவோ, பகிர்ந்துகொள்ளவோ விரும்பவில்லை என்ற குழப்பம் சமூகச் சூழல்களில் ஏற்படலாம். உளவியல் பார்வையில், இது மனிதர்களைத் தவிர்ப்பது அல்ல; ஆழமான உறவுகளை உருவாக்குவதில் ஏற்படும் தயக்கமும் அசௌகரியமுமே.
இத்தகைய நபர்கள் நட்பைத் தவிர்ப்பது மனிதர்கள் மீதான ஆர்வமின்மையால் அல்ல, உணர்வுப்பூர்வமான பாதுகாப்பிற்காகவே என்று மனநல நிபுணர்கள் விளக்குகின்றனர். நடத்தை ரீதியாக, இத்தகையவர்கள் அதிக சுயசார்பு கொண்டவர்களாக உருவாகிறார்கள். எந்தச் சூழலையும் தனியாகவே சமாளிக்க விரும்பும் இவர்களுக்கு, மற்றவர்களை உணர்வுப்பூர்வமாகச் சார்ந்திருப்பது அசௌகரியத்தைத் தரும். காலப்போக்கில் இதுவே ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறி, மற்றவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதைக் கடினமாக்குகிறது.
மன அழுத்தம் மற்றும் சமூகப் பதற்றம் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மன அழுத்தம் மற்றவர்களுடன் பழகும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் குறைக்கும். சமூகப் பதற்றம் மற்றவர்கள் தங்களைத் தவறாக எடைபோடுவார்களோ என்ற தீவிர பயத்தை உருவாக்கி, சந்திப்புகளைத் தவிர்க்கத் தூண்டும். மேலும், தவிர்ப்புப் போக்கு கொண்டவர்களுக்கு நெருக்கம் அசௌகரியமாக இருக்கும். வேறு சிலர் உறவை விரும்பினாலும், நிராகரிப்பு பயத்தால் அதைத் தக்கவைக்கத் தடுமாறுவார்கள்.
அதிக சிந்தனை!
கருத்து வேறுபாடுகள் அல்லது தவறான புரிதல்கள் ஏற்படும்போது, அதை பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக தொடர்பைத் துண்டித்துவிட்டு விலகிவிடுவார்கள். இது குறுகிய காலப் பாதுகாப்பைத் தந்தாலும், ஆழமான பிணைப்புகள் உருவாவதைத் தடுக்கும். அதிகமாக யோசிக்கும் இவர்கள், சிறிய உரையாடல்களைக்கூட அதிகமாக ஆராய்ந்து மற்றவர்கள் தங்களை நிராகரிப்பதாகக் கற்பனை செய்துகொண்டு விலகிவிடுவார்கள்.
எப்போது கவலைப்பட வேண்டும்?
நெருங்கிய நண்பர்கள் இல்லாமல் இருப்பது எப்போதுமே ஒரு மனநலக் குறைபாடு அல்ல என்று மனநல நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். சிலர் இயல்பாகவே தங்களைத் தாங்களே ஆராயும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலோட்டமான பழக்கங்களை விட அர்த்தமுள்ள தனிமையையே அவர்கள் விரும்புவார்கள்.
ஆனால், இந்தத் தனிமையுடன் தொடர்ந்து மனச்சோர்வு, பதற்றம், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு அல்லது மன உளைச்சல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அத்தகைய சூழலில் தகுந்த மனநல நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். ஒவ்வொருவரின் தனிமைக்கும் பின்னால் வெவ்வேறு காரணங்கள் இருக்கும் என்பதால், அவசரப்பட்டு யாரையும் தவறாக எடைபோடாமல் புரிந்துகொள்வதே ஆரோக்கியமான அணுகுமுறை.